போதைப் பொருள்.. அமைச்சர் சரத்குமாரை டிஸ்மிஸ் செய்ய வலுக்கும் கோரிக்கை!

Published On:

| By Mathi

Growing Calls to Dismiss Minister Sarathkumar Over Drug Menace

போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் தமிழக அமைச்சர் சரத்குமார் (Minister Sarathkumar) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் “Thug Life Moment” வீடியோ – போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?

ADVERTISEMENT

இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய “Thug Life Moment” வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த “Thug Life Moment” வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தவெக அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார், பொதுவெளியில் போதைப்பொருள் உபயோகித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதற்கு அவர் கொடுத்துள்ள தன்னிலை விளக்கமும் கடும் அதிர்ச்சியளிப்பதோடு பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகிறது.

சுமார் 4 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, “ஆன்டிபயாடிக்” உள்ளிட்ட வீரியமிக்க மருந்துகளையே, மருத்துவர்கள் “டானிக்” வடிவில் கொடுத்துக் கொண்டிருக்கையில், ஒன்றரை வயது குழந்தைக்கு எந்த மருத்துவர் மாத்திரை கொடுத்தார்? அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் குழந்தையையும் காணவில்லை, உடல்நிலை சரியில்லாத குழந்தையை எங்கேயோ விட்டுவிட்டு தகப்பன் ஜாலியாக கிரிக்கெட் போட்டியை ரசித்துக் கொண்டே மாத்திரையை நுணுக்கிக் கொண்டிருந்தாரா? குறிப்பாக, குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை, யாராவது போதைப் பொருள் போல கோடிழுத்துக் கொண்டிருப்பார்களா? மாத்திரையைக் கூட போதைப்பொருளைப் போலவே “ரெடி” செய்யும் மனநிலை கொண்டவர் எப்படி நிதானமாக மக்கள் சேவையாற்றுவார்?

இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பும் இவ்விவகாரத்தை, முதல்வர் விஜய்
அவர்கள் எவ்வித சமரசமுமின்றி தீர விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்: ஒரு வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மாத்திரை கொடுப்பது வழக்கமல்ல. அப்படி இருக்கையில் அந்த மாத்திரை யார் கொடுத்தது? குழந்தை அருகில் இல்லாதது ஏன்? அமைச்சர் சரத்குமார் அளிக்கும் விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. தான் கூறுவது உண்மை என்றால், மருத்துவ பரிசோதனை மூலம் அதை நிரூபிக்க வேண்டும். மேலும், செய்தியாளர்கள் முன்னிலையில் மொபைல் மூலம் மாத்திரையை எவ்வாறு பொடியாக்க முடியும் என்பதையும் விளக்க வேண்டும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share