அரோபிந்தோ வித்யாலயா பள்ளியின் முன்னாள் தாளாளர் வினீதா கோவிந்தசாமி திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், அதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்தநிலையில் என்.ஓ.சி வாங்குவதற்கு பல லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியிருந்தது என்று சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் முந்தைய அரசு மீது குற்றம்சாட்டின.
சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில், ”கலைவாணி கல்வி மையம் என்ற அமைப்பின் கீழ், தென்காசி மற்றும் தேனியில் இரண்டு இலவச NIOS (தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம்) கிராமப்புறப் பள்ளிகளை நாங்கள்நடத்தி வருகிறோம். இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு மாநில அரசு அதிக பணம் கேட்டது. டி.டி.சி.பி -யிடம் (நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம்) அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். அதற்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
திமுக ஆட்சியில் இருந்தவரை அந்த ஒப்புதல் வரவே இல்லை. அரசாங்கம் மாறியவுடன் அந்த ஒப்புதல் தானாகவே வந்தது” என்று கூறியிருந்தார்.
இந்தசூழலில் ஸ்ரீதர் வேம்புவின் ட்வீட்டை டேக் செய்த அரோபிந்தோ வித்யாலயா பள்ளியின் முன்னாள் தாளாளர் வினீதா கோவிந்தசாமி, ”முதலாவதாக, பள்ளி கட்டணம் குறித்து சொல்கிறேன். எங்களது பள்ளியில் எல்.கே.ஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
தாராபுரத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளிலேயே மிகக் குறைவான கட்டணம் கொண்ட பள்ளிகளில் எங்களது பள்ளியும் ஒன்று. ஏனென்றால், எங்களது பெற்றோர் சமூகத்தின் யதார்த்த நிலையை நாங்கள் புரிந்து வைத்திருந்தோம்.
அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். தங்கள் குழந்தைகளுக்கு ஒரு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றையும் விரும்பாதவர்கள். ஒரு பள்ளியை நடத்துபவர்கள் எவருக்கும் நன்றாகத் தெரியும், இந்த கட்டணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பள்ளி செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டு செல்வது சாத்தியமில்லை என்று. பள்ளி தொடர்ந்து இயங்குவதற்காக எங்களது சொந்தப் பணத்திலிருந்து நாங்கள் தொடர்ந்து பங்களித்து வந்தோம்.
ஊழலும் லஞ்சமும் உண்மையிலேயே குறைந்தால், சில பள்ளிகள் நிச்சயம் பயனடையும். ஏன்னென்றால், அந்த நிதிச்சுமை குறையும் போது, அந்தப் பணத்தைக் கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்த அவர்களால் பயன்படுத்த முடியும். (இருப்பினும், இப்போது அந்தப் பள்ளியுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.)
இரண்டாவதாக, அரசாங்கம் எங்களது பள்ளிப் பேருந்துகளை விளம்பரத்திற்குப் பயன்படுத்தியது என்று நான் பொய் சொல்வதாகக் கூறுபவர்களுக்கு. நான் இதை முதன்முதலில் கேள்விப்பட்டபோது எனக்கும் இது மிகவும் வேடிக்கையாகத்தான் தோன்றியது. ஆனால், எங்கள் பள்ளி மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள். எங்களது பள்ளி இருக்கும் இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகரத்தில், முதலமைச்சர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த ஏன் இவர்களின் பள்ளிப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன?
மற்றபடி, மீதமுள்ள விஷயங்களை நான் அப்படியே விட்டுவிடுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு தொடர்பாக அரோபிந்தோ வித்யாலயா பள்ளி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
அதில், ”ஸ்ரீ அரோபிந்தோ வித்யாலயாவின் தாளாளர் ஈஸ்வர மூர்த்தி. சி, ஆகிய நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால். அரோபிந்தோ வித்யாலயா பள்ளியின் முன்னாள் தாளாளர் வினீதா கோவிந்தசாமி முன்னாள் அரசு நிர்வாகம் குறித்து விமர்சனம் செய்தும், குற்றச்சாட்டுகளையும் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட முறையில் பதிவிட்டுள்ளார். இப்பதிவுகளுக்கும், ஸ்ரீ அரோபிந்தோ வித்யாலயாவுக்கும் மற்றும் பள்ளியின் தற்போதைய நிர்வாகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்து கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
