தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!

Published On:

| By Mathi

Manickam Tagore TNCC President

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக விருதுநகர் மக்களவை தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை செயல்பட்டு வந்தார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி தவெக அணியில் இணைந்ததை செல்வப்பெருந்தகை ஏற்கவில்லை என கூறப்பட்டது. முதல்வர் விஜய் அரசின் நடவடிக்கைகளுக்கு செல்வப்பெருந்தகை கண்டனமும் தெரிவித்து வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு மாணிக்கம் தாகூர் எம்.பி, புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டசபை தேர்தல் நேரத்தில் திமுகவை மிக கடுமையாக விமர்சித்தவர். திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட மாணிக்கம் தாகூர், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

மாணிக்கம் தாகூர் 1975-ம் ஆண்டு அன்று சிவகங்கையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் (NSUI) தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் களமிறங்கினார்.

2009, 2019 மற்றும் 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் வெற்றி விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்றவர். 2014-ல் விருதுநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார் மாணிக்கம் தாகூர்.

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) செயலாளராகப் பணியாற்றியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர்.

காங்கிரஸ் கட்சியில் மாணிக்கம் தாகூர் வகித்த பதவிகள்

1994: காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யூ.ஐ (NSUI) மாவட்டப் பொதுச் செயலாளர்.

1995: என்.எஸ்.யூ.ஐ (NSUI) மாநிலக் குழு உறுப்பினர்.

1996: என்.எஸ்.யூ.ஐ (NSUI) தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர்.

1997: என்.எஸ்.யூ.ஐ (NSUI) அகில இந்தியப் பொதுச் செயலாளர்.

1999: என்.எஸ்.யூ.ஐ (NSUI) அகில இந்தியத் துணைத் தலைவர்.

2003 மற்றும் 2005: இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர்.

2006: மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர்.

2008: இந்திய இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஆணையர்.

2017: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) செயலாளர்.

2020: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தெலங்கானா மாநிலப் பொறுப்பாளர் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி (CWC) நிரந்தர அழைப்பாளர்.

2024: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) ஆந்திரப் பிரதேச மாநிலப் பொறுப்பாளர்.

நாடாளுமன்றத்தில்..

2009 – 2014-ல் நாடாளுமன்ற நிதிக் குழுவின் (Standing Committee on Finance) உறுப்பினராக இருந்தார். சிவில் விமானப் போக்குவரத்து ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும், குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தேசிய வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.

2013-ல் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) நலக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2019-ல் அவை குழுவின் (House Committee) உறுப்பினராகச் சேர்ந்தார். பணியாளர், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நிலைக்குழுவின் உறுப்பினரானார். துணைச் சட்டங்களுக்கான குழுவின் (Committee on Subordinate Legislation) உறுப்பினராகச் சேர்ந்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்கினார். 2024-ல் இதர பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் உறுப்பினரானார். மேலும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான குழுவின் (Committee on Housing and Urban Affairs) உறுப்பினராகவும் உள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share