வைஃபை ஆன் செய்ததும், “காலம் இடும் கட்டளை.. இது களம் மாறும் தருணம்” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
யாருக்குங்க ப்ரோ.. ”காலம் கட்டளையிட்டுவிட்டது? யாரு ‘களத்தை’ மாத்த போறாங்க”?
ஷேர் செய்வோம் ப்ரோ.. எலக்ஷன் முடிஞ்ச மறுநாளே விஜய் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துருச்சு.. திமுக கூட்டணியில இருந்தும் விலகிடுச்சு.. நன்றிகூட சொல்லாம காங்கிரஸ் போயிருச்சுன்னு ஸ்டாலினுக்கும் திமுகவினருக்கும் கோபம் இருக்குது.. அதனாலதான் டெல்லியில நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணிச்சாரு..
அந்த கூட்டத்துலேயும் திமுகவுக்கு காங்கிரஸ் செஞ்ச துரோகத்தை திருமாவளவன், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சிபிஎம் ஜான் பிரிட்டாஸ்னு எல்லாருமே ராகுல்– சோனியா முகத்துக்கு நேராகவே விளாசினாங்க..
அதுக்கு பிறகு, ”இந்தியா’ என்ற கருத்தியலைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நிற்கும்;திமுகவும் துணையாக இருக்கும்”னு இந்தியா கூட்டணி கூட்டத்துல ராகுல் பேசிய வீடியோவை காங்கிரஸ் ரிலீஸ் செஞ்சது..
ஆனாலும் திமுகவோட முரசொலி நாளிதழில் ராகுல் காந்தியை ரொம்பவே வெளுத்தெடுத்துட்டாங்க..
இதுக்கு பிறகு ஜூன் 19-ந் தேதி ராகுல் காந்தி பிறந்த நாள்.. அன்னைக்கு ஸ்டாலின், ராகுல் காந்திக்கு வாழ்த்து சொல்லி இருந்தார்.. அதுக்கு பதில் சொல்லி இருக்கும் ராகுல், “ உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிஇந்தியாவின் பன்முகத்தன்மை, நமது அரசியலமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு மன உறுதி நம்மை தொடர்ந்து வழிநடத்தும்.. இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போராட்டம், நாம் வெற்றி பெறும் வரை இந்தப் போராட்டத்தை ஒன்றிணைந்து நடத்துவோம்”னு ஸ்டாலினுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மகள் அக்ஷா பிரியாவின் திருமணம் சென்னையில நடந்துச்சு.. இந்த திருமண விழாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, கேசி வேணுகோபால், கிரிஷ் சோடங்கர்னு யாருமே வரலை.. ஆனா போனில் பேசுனாங்கன்னு மட்டும் சொல்றாங்க..
அதேநேரத்துல ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இந்த திருமணத்துக்கு போய் மணமக்களுக்கு வாழ்த்து சொன்னாங்க..

இப்ப நமக்கு கிடைச்ச தகவல் என்னான்னா, “காங்கிரஸ் கட்சியில இருந்தே செல்வப்பெருந்தகையும் அவரது ஆதரவாளர்களும் விலக போறாங்க.. அவங்க எல்லாம் மொத்தமா திமுகவில சேரப் போறாங்க” அப்படிங்கிறதுதான்..
இதை பத்தி நாம காங்கிரஸ் தரப்புல விசாரிச்சப்ப, “எலக்ஷன் நேரத்துல தொகுதிகள் விவகாரத்துல திமுகவுக்கு ஆதரவா செல்வப்பெருந்தகை செயல்படுறாருன்னுதான் டெல்லிக்கு புகார் போச்சு.. ஸ்டாலினுடன் கேசி வேணுகோபால், ப.சிதம்பரம் நடத்துன பேச்சுவார்த்தைகளில் கூட செல்வப்பெருந்தகையை கூப்பிடலை.. காங்கிரஸ் மேலிடமும் அவர் மேல அதிருப்தியதான் இருந்துச்சு.. ஆனா மகளோட திருமணம் வெச்சிருந்ததால செல்வப்பெருந்தகையை உடனே மேலிடம் மாற்றலை.. இப்ப திருமணம் முடிஞ்சிருச்சு.. அதனால செல்வப்பெருந்தகையை மாத்திட்டு வேற ஒருத்தரை தலைவரா போட போகுது டெல்லி.. மத்தபடி திமுகவுக்கு போறாரான்னு எங்களுக்கு தெரியாது சார்..”ன்னு சொல்றாங்க..
ஆனா திமுகவில ஸ்டாலினுக்கு நெருக்கமான சர்க்கிளில் பேசுனப்ப, “ எலக்ஷன் ரிசல்ட் வந்தப்பவே திமுகவில சேருவதைப் பத்தி செல்வப்பெருந்தகை பேசினாரு.. இப்ப அவர் வீட்டுல விசேஷமும் முடிஞ்சிருச்சு.. அடுத்து என்ன நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.. அப்படி செல்வப்பெருந்தகை திமுகவில சேர்ந்தா நேஷனல் பார்ட்டி மாநில தலைவரா இருந்தவர்.. அதனால முக்கியமான பொறுப்பு கொடுத்தாக வேண்டிய அழுத்தமும் திமுகவுக்கு இருக்கு”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
