60 ஆண்டுகால திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகல்! தவெக கூட்டணியில் நீடிப்பதாக அறிவிப்பு!

Published On:

| By Mathi

IUML Quits DMK Alliance

60 ஆண்டுகளுக்கும் மேலாக இடம் பெற்றிருந்த திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ஜூன் 20-ந் தேதி செய்தியாளர்களிடம் பேராசிரியர் காதர் மொகிதீன் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய பொதுக்குழுவில் 483 பேர் பங்கேற்றனர். மிக முக்கியமான தருணத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழு. இக்கூட்டத்தில் 14 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இதில் மிக முக்கியமான தீர்மானம், “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த ஆண்டு கேரளா, தமிழ்நாடு. மே.வங்க மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் கேரளாவில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 5 அமைச்சர்களைப் பெற்றுள்ளோம். கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் இணைந்து வெற்றி பெறும் போதெல்லாம் அமைச்சர் பதவிகள் கொடுக்கப்படுவது வழக்கம்.

மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்து எங்களது ஏணி சின்னத்தில் போட்டியிட்டு பாபநாசம், வாணியம்பாடி தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளோம்.

60 ஆண்டுகால திமுக கூட்டணி

தமிழக வரலாற்றில் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பயணித்து வந்திருக்கிறது. முஸ்லிம் லீக் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் திமுக கூட்டணியில்தான் வெற்றி பெற்றிருக்கிறோம். இது நீண்டகால வரலாறு. இந்த தேர்தலில் திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வந்துவிடும்; மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்றுதான் தேர்தல் பணிகளில் உழைத்தோம். ஆனால் இறைவனின் நாட்டம் வேறாக அமைந்துவிட்டது. விசில் எல்ல இடத்திலும் ஊதப்பட்டு மக்களை ஜோசப் விஜய்யின் பக்கம் கொண்டுவரக் கூடிய நிலைமையை மாற்றிவிட்டது. 108 இடங்களைப் பெற்று ஜோசப் விஜய் , இதர கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை வந்தது. அதனால் எங்களது 2 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொடுக்க வேண்டிய நிலைமை வந்தது. இது தொடர்பாக ஸ்டாலினிடமும் ஆலோசித்தோம். நாங்கள் ஆட்சி அமைக்க எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

ADVERTISEMENT

முஸ்லிம் லீக் மீது பழிவந்துவிடும் சூழல்

நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடும் என்ற அச்சம் பரவியிருந்தது. ஜனாதிபதி ஆட்சி- கவர்னர் ஆட்சி எனில் மறைமுமான மத்திய அரசின் பாஜக ஆட்சிதான் திணிக்கப்படுகிற நிலைமை வந்துவிடும். அப்படிப்பட்ட நிலைமை வருவதற்கு முஸ்லிம் லீக்கில் உள்ள நாங்கள் காரணமாகிவிடக் கூடாது என்பதற்காக ஆதரவு அளித்தோம். எங்கள் சமுதாயத்தின் மீது பழிவந்துவிடக் கூடாது என்பதற்காக தவெக ஆட்சி அமைக்க ஆதரவை தந்தோம். திமுக தலைவர் ஸ்டாலினிடம் இது குறித்து பல முறை பேசினோம்.

நாங்கள் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை; ஆனால் ‘நீங்களும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும்’ என்று நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் சொன்னார்கள். இதனையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர்களுடன் ஆலோசித்து தவெக அமைச்சரவையில் இடம் பெற்றோம். இதனடிப்படையில் அமைச்சரவையில் ஷாஜஹான் இடம் பெற்றார்.

தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இந்த நல்லாட்சி என்றும் தொடர வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றி உள்ளோம்.

திமுகவுக்கு ஓட்டுப் போட சொல்லவில்லை

முஸ்லிம்களுக்கு 5 கடமை இருக்கிறது; 6-வது கடமையாக வாக்களிக்க வேண்டும் என்றுதான் சொன்னோம். முஸ்லிம்கள் 6-வது கடமையாக திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை. நான் சொல்லாததை சொன்னதாக சொல்லி செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வது? முட்டாள்தனமாக கேள்விகளை கேட்காதீர்கள்.

தவெக ஆட்சிக்கு ஆதரவு தொடரும்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நல்லாட்சி நாளையும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல், சட்டசபை தேர்தல், மக்களவைத் தேர்தல் என அனைத்திலும் இந்த ஆட்சி தொடருவதற்கு தவெகவுக்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவோம்.

தவெக கூட்டணியில் நீடிக்கிறோம்

திமுக தலைமையிலான அணிக்கு மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டிருந்தது. தவெக கூட்டணிக்கு அப்படிப்பட்ட பெயர் சூட்டப்படவில்லை. அப்படி பெயர் சூட்டப்படாத தவெக கூட்டணியில் நாங்கள் தொடருகிறோம். அந்த கூட்டணிக்கு பெயர் வைக்கிற போது அந்த பெயரை பயன்படுத்துவோம். தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இன்று இருக்கிறோம்; நாளையும் இருப்போம்.. தொடர்ந்தும் இருப்போம். என்னுடைய நண்பர்கள் முன்வைக்கிற விமர்சனங்களுக்கு பதில் சொல்லமாட்டோம்.. அவற்றை காதில் வாங்கமாட்டோம்.

உள்ளாட்சித் தேர்தலில்..

12620 உள்ளாட்சி இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி மாநகராட்சி என்றாலும், நகராட்சி என்றாலும், முஸ்லிம் சமுதாயம் எங்களுடைய நெருக்கமாக இதுவரை இருந்திருக்கிறதோ, அங்கெல்லாம் நாங்கள் தலைவராக இருந்திருக்கிறோம், துணைத்தலைவராக இருந்திருக்கிறோம், மேயராக இருந்திருக்கிறோம், துணை மேயராக இருந்திருக்கிறோம். அந்த வாய்ப்பு கடந்த காலத்திலே எங்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட வாய்ப்பை நிச்சயமாக தமிழக வெற்றிக் கழக கூட்டணியோடு சேர்ந்து, நாங்கள் நிச்சயமாக பெறுவோம்.

தமிழகத்தில் ஒரு மாத தவெக ஆட்சி சிறப்பாக இருக்கிறது; அனைவரும் பாராட்டுகிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனை பற்றி சட்டசபையில் தீர்மானம் வரும் போது முதல்வர் விஜய் பேசுவார். சிங்கபெண்கள் பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது; அது செயல்பாட்டுக்கு வரும் போது பெண்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இவ்வாறு பேராசிரியர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share