சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் (NEET) தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி கோபிகா, தற்கொலை ( student suicide) செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கோவையைச் சேர்ந்த மாணவி அனு கீர்த்தனா, 2 நாட்களுக்கு முன்னர் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து சேலம் எடப்பாடி அருகே மாணவி கோபிகா நேற்று ஜூன் 19-ந் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் வேதனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சேகர் – புவனேஷ்வரி தம்பதியினரின் 2வது மகள் கோபிகா, நீட் தேர்வு அச்சத்தால் தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக வந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. மாணவி கோபிகாவை இழந்து வாழும் அவரது பெற்றோர்களுக்கு என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் கலங்கி நிற்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நீட் தேர்வு எதிர்ப்பு என்ற கொள்கை நிலைப்பாட்டில் அஇஅதிமுக தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. மாணவச் செல்வங்கள் நீட் தேர்வு அச்சத்தால் உயிரை விடத் திணிப்பது தவறு என்று பலமுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், என் சார்பிலும் வலியுறுத்தி வந்துள்ளோம். மாணவச் செல்வங்களே- தேர்வு என்பது மட்டுமல்ல, எந்த ஒரு விஷயமும் உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியமானது அல்ல. மருத்துவர் படிப்பு மட்டுமல்லாது, மருத்துவத்துறை தொடர்பாக பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நீங்கள் இருந்து சாதிக்க வேண்டியதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உங்கள் சாதனைகளைப் பார்த்து மகிழ உங்கள் பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக எந்தவொரு தவறான முடிவையும் எடுக்காமல், பிரச்சனைகளை எதிர்கொண்டு வெல்லுங்கள்! இனியும் இதுபோன்ற தவறான வழிக்கு எந்த மாணவ, மாணவியும் செல்லக்கூடாது என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
நீட் தற்கொலைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.
மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் – சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.
இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி – தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், நீட் மறுதேர்வு அச்சத்தால் 2 நாள்களில் இரு மாணவிகள் தற்கொலை: மாணவர்கொல்லி நீட் தேர்வை ஒழிப்பது மட்டும் தான் ஒரே தீர்வு! வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரால் ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு நாளை மறுநாள் மீண்டும் நடத்தப்படவுள்ள நிலையில், அத்தேர்வின் முடிவுகள் என்னவாகுமோ? என்ற அச்சத்தில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவி கோபிகாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த கோபிகா கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றதால், அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதனால், நடப்பாண்டில் மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, இம்முறையும் நம்மால் வெற்றி பெற முடியாதோ? என்ற அச்சம் மற்றும் கவலை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே கடந்த 17-ஆம் தேதி கோவையை சேர்ந்த மாணவி அனுகீர்த்தனா இதே காரணத்தால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனால் ஏற்பட்ட கவலையும், பதட்டமும் விலகும் முன்பே அடுத்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இரு நாள்களுக்குள் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு கடந்த பத்தாண்டுகளில் தேசிய அளவில் 200-க்கும் மேற்பட்டோரும், தமிழ்நாட்டில் 40 பேரும் அத்தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாணவர்களின் தற்கொலைக்கு வழி வகுத்ததைத் தவிர மாணவர் கொல்லி நீட் தேர்வால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 10 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது. இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசு செவிமடுக்கவில்லை. இனியும் மாணவர்களின் தற்கொலைகள் தொடரக்கூடாது. அதற்காக நீட் தேர்வு தேசிய அளவில் ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
