தவெகவில் இணைந்து வரும் மாற்றுக் கட்சியினர் அனைவருக்கும் உரிய நேரத்தில் பதவிகள் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்களான அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் (Bussy Anand), ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) உறுதியளித்துள்ளனர்.
சென்னையில் தவெக தலைமை அலுவலகமான பனையூரில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்தனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் (எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்), அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.கே. சிவசாமி (அருப்புக்கோட்டை), சுப்பிரமணியன் (திருவையாறு), சாந்தி ஏ. ராமு
(குன்னூர்), திரைப்பட இயக்குநர் ஆர்வி உதயகுமார்(அதிமுக கலைப்பிரிவு முன்னாள் செயலாளர்), நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் தவெகவில் இன்று ஜூன் 20-ந் தேதி இணைந்தனர்.
இந்நிகழ்வில் பேசிய ஜெகன்நாத் மிஸ்ரா எம்.எல்.ஏ, ”நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின்’ 5 மாநிலங்களின் பொறுப்பாளர்கள் 3,000 பேர் தவெகவில் இணைந்துள்ளனர்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் இங்கே இணைய வரும் போது பதவி எதுவும் வேண்டாம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி வழங்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “ செங்கோட்டையனை அதிமுக தூக்கி எறிந்தது. அது செங்கோட்டையனின் தவறு இல்லை.. அதிமுகவின் தவறு. இன்றைக்கு அவர் அமைச்சராக, சட்டசபை முன்னவராக இருக்கிறார்.
கொஞ்சம் பொறுமையாக இருங்க.. இந்த கட்சியில இன்னும் சிறப்பாக செயல்படலாம். தவெகவில் சேர்ந்தாலும் பதவிகள் கொடுக்கப்படவில்லை என சிலர் சொல்கின்றனர்.. இங்கே வியாபாரம் செய்யவில்லை. அதேநேரத்தில் மக்கள் சேவையை சிறப்பாக செய்யக் கூடிய மரியாதையை முதல்வர் விஜய் நிச்சயம் உங்களுக்கு கொடுப்பார்.. அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்துவிட்டது. அதனால்தான் எடப்பாடி தொகுதியில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ஒருவர் கூட இன்று தவெகவில் இணைந்திருக்கிறார்.
அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள் தவெகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். அதிமுக- தவெகவின் குறிக்கோள் எப்போதும் ஒன்றுதான். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக- தவெக நிர்வாகிகள் இணைந்து 99 சதவீத இடங்களை கைப்பற்றுவோம்” என்றார்.
