மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த நீட் (NEET) தேர்வருக்கு ‘அபுதாபி’ நாட்டில் உள்ள பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த அப்துல்லா என்ற நீட் (NEET-UG) தேர்வருக்கு நாளை ஜூன் 21-ந் தேதிநடைபெறும் நீட் மறுதேர்விற்காக அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அப்துல்லாவின் தந்தை முகமது தாலிப் கூறுகையில், “ஹால் டிக்கெட்டை நேற்று மாலை பதிவிறக்கம் செய்தபோது, தேர்வு மையமாக அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் அத்தகைய ஆப்ஷனையே தேர்வு செய்யவில்லை. இவ்வளவு ஏன், மகன் அப்துல்லாவுக்கு பாஸ்போர்ட் கூட எடுக்கவில்லை.
இதனால் நீட் ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைத்து புகார் கொடுத்தோம். ஆனால் புகாரை இ மெயிலில் அனுப்ப சொன்னார்கள்.
நாங்களும் இ மெயில் அனுப்பினோம். அந்த இ மெயிலுக்கு, “புதிய ஹால் டிக்கெட் வழங்கப்படும்” என்று பதில் வந்துள்ளது.
மகாராஷ்டிராவின் 3 மாவட்டங்களை விருப்பமாகத் தேர்வு செய்திருந்தோம், ஆனால் இப்படி அதிர்ச்சி கொடுத்துவிட்டது நீட் தேர்வு முகாமை.
அதனால் நாக்பூரையே தேர்வு மையமாக வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்” என்றார்.
நீட் தேர்வை முன்வைத்து ஏராளமான சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில் நீட் மறுதேர்விலும் குழப்பமா? என மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
