TAPS ஓய்வூதிய திட்டம் தொடபாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 111 தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சு. ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் மற்றும் மு. செல்வக்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: தேர்தல் காலத்தில், திமுக ஆட்சியால் அறிவிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) ஒழித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கனிவுடன் பரிசீலிப்போம் என்று தற்போதைய த.வெ.க அரசு உறுதியளித்தது.
நம்பிக்கையை சீர்குலைக்கும் அரசாணை
ஆனால், வெளியிடப்பட்டுள்ள அரசாணை, அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் திசை வழியில் செல்லாமல், TAPS திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக ஏற்பாடுகளை மட்டுமே செய்துள்ளது. இது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
நியாயப்படுத்த முடியாத செயல்
மேலும், 01.01.2026-க்கு முன்னர் ஓய்வு பெற்று CPS-இல் தங்களது இறுதிப் பலன்களைப் பெற்றுக்கொண்ட 60,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து இந்த அரசாணையில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. ஓய்வூதிய நீதியைப் பற்றிப் பேசும் அரசாங்கம், ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களை முழுமையாக புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும்.
பழைய ஓய்வூதிய திட்டம்தான் தேவை
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கை புதிய பெயரில், புதிய திட்டம் அல்ல. அவர்கள் கோருவது ஒன்றே ஒன்று – முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டமே.
நம்பிக்கையை அரசு இழந்துவிடும்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உணர்வுகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் புறக்கணித்து, அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டும் கேட்டு தமிழக அரசு செயல்படுமானால், அதன் விளைவுகள் அரசியல் ரீதியாக த.வெ.க. அரசிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் தற்பொழுது கிடைத்துள்ள தனது செல்வாக்கை முழுமையாக இழக்கும் என்பதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறோம்.
அதிமுக, திமுகவுக்கு பாதிப்பு
மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்ததும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்ததும், தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்துவோம் என்று வாக்குறுதி தந்து, அதை நிறைவேற்றாமல், பொறுப்பில் இருந்த உயர் அதிகாரிகளின் தவறான வழிகாட்டலால் இன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளன, என்பதனையும், 20 இலட்சம் அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் குடும்பங்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையும், பழைய ஓய்வூதியத்திட்டமே என்பதனையும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறோம்.
அரசியல் மாற்றங்களுக்கு காரணம்
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நம்பிக்கையை வெல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை இழப்பது மிகவும் எளிது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகளும், அவர்களது குடும்பங்களின் ஆதரவும் பல அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருந்துள்ளன என்பதை அரசு மறந்துவிடக்கூடாது.

TAPS திட்டத்தை கைவிடுக
எனவே தமிழக அரசு உடனடியாக TAPS திட்டத்தை கைவிட வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 01.01.2026-க்கு முன்னரும் பின்னரும் ஓய்வு பெற்ற அனைவருக்கும் பொருந்தும் வகையில் முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
காலக்கெடுவுடன் கூடிய தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
போராட்டம் – எச்சரிக்கை
இல்லையேல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், மாநிலம் தழுவிய தீவிரமான ஜனநாயகப் போராட்டங்கள் தவிர்க்க முடியாததாக மாறும் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு மிகுந்த வேதனையுடன், அதே நேரத்தில் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாக்குறுதியை நிறைவேற்று! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து! இல்லையேல் தமிழகம் முழுவதும் போராட்டக் களமே!. இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
