நடைபாதையில் நடப்பது அடிப்படை உரிமை : உச்ச நீதிமன்றம்!

Published On:

| By Kavi

நடைபாதையில் நடப்பது அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

ஐந்து வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது டேங்கர் லாரி மோதி உடல் நசுங்கி உயிரிழந்தான்.  

ADVERTISEMENT

இந்த விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மணியார் இலியாஸ் vs ஐயப்பன் வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி எஸ் நரசிம்மா மற்றும் ஏ எஸ் சந்தூர்கர், ‘ தன் மகனுடனான கடைசி பயணமாக இது இருக்கும் என்று எந்த தந்தை தான் கற்பனை செய்திருக்க முடியும்’ என்று விபத்து குறித்து வேதனை தெரிவித்தனர். 

ADVERTISEMENT

அப்போது அந்த சாலையில் நடைபாதையோ அல்லது பாதசாரிகள் கடக்கும் இடமோ இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ”அனைத்து குடிமக்களும் இந்தியாவின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாடும் உரிமை உண்டு. இந்த “நகரும் உரிமை” என்பது சக்கரங்களில் பயணிப்பதுடன் மட்டுமே தொடர்புப்படுத்தும் நமது மன தடையை முதலில் அகற்றுவது அவசியமானது. சொல்லப்போனால் அது கட்டாயமானது. 

சட்டப்பிரிவு 19(1)(d) ன் கீழ் முதன்மையான நகரும் உரிமை என்பது நடப்பதற்கான அடிப்படை உரிமையாகும். 

ADVERTISEMENT

இது வாகனங்களில் பயணிக்கும் உரிமைக்கும் முந்தையது. இந்த விலைமதிப்பற்ற உரிமை பாதுகாப்பான மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட நடைபாதையை அணுகுவதை உறுதி செய்வதற்கும் நீட்டிக்கப்பட வேண்டும். 

1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் நடப்பதற்கான அடிப்படை உரிமையை அங்கீகரிக்கும் சட்டமாக ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையில் மோட்டார் வாகன சட்டம், பல வழிகளில் நடப்பவர்களின் விலைமதிப்பற்ற உரிமைகளை சிதைத்துள்ளது. 

நடப்பதற்கு பாதுகாப்பான மற்றும் வசதியான நடை பாதைகள் இல்லாததும் அவை இருந்தாலும் கூட, மோட்டார் வாகன போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுவது ஒரு நாகரிக பிரச்சனையாக இருந்து வருகிறது. 

ஒரு சாலை என்று இருந்தால் அங்கு பாதசாரிகள் நடப்பதற்கு தனியாக நடைபாதை ஒதுக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டியது அதிகாரிகளின் கட்டாய கடமையாகும். 

நடைபாதையில் நடப்பதற்கான அடிப்படை உரிமை என்பது மோட்டார் வாகனங்களின் சிறப்புரிமையை விட மேலானது. 

இந்த விவகாரத்தை ஒரு தனி பொது வழக்காக மாற்றி இந்தியாவில் பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த அறிக்கையை மத்திய அரசும் சட்ட ஆணையமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share