5 ஆண்டுகளுக்குள் சீமைக்கருவேல மரங்கள் கட்டுப்படுத்தப்படும்: ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம்

Published On:

| By Pandeeswari Gurusamy

selvam

தமிழகத்தில் நீர்நிலைகள், நீர்நிலை அல்லாத புறம்போக்கு நிலங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இவை அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், இவைகளின் ஆக்கிரமிப்பால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே செல்கிறது.

இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சீமைக்கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமையிலான குழுவினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இதன் ஒரு பகுதியாக, மதுரை அடுத்த எஸ். கொடிக்குளம் கண்மாய் பகுதியில் நடைபெற்று வரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம், “தமிழகத்தில் நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களின் பரவல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.

ADVERTISEMENT

இப்போதுதான் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 15 நாட்கள் கழித்துத்தான் இது குறித்து முழுமையாகக் கூற முடியும். இந்த மரங்களை வேரோடு அழிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். கேரளாவில் 5 ஆண்டுகளில், சுழற்சி மூன்று சுற்றுகளாகப் பணிகள் நடைபெற்று இந்த மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன. தற்போது கேரளாவில் இந்த மரங்கள் இல்லை. எனவே, தமிழகத்திலும் மூன்று சுற்றுகளாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பது சாத்தியமில்லாத ஒன்று அல்ல; இதற்கான தேவையான நிதியைத் தமிழக அரசு உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு நிலங்களில் இருக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்ககப்படும்” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share