தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதியம் திட்டம் நிறுத்தப்பட்டது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் திமுக அரசு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும்போது, கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை மாத ஓய்வூதியமாகப் பெறுவார்கள். இதற்காக, அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் 10 சதவீதத்தை பங்களிக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக தனது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதியளித்தது.
இந்நிலையில், TAPS ஓய்வூதிய திட்ட விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை இடைக்கால நிவாரணம் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 16ஆம் தேதியிட்ட அந்த அரசாணையில், ’முழுமையான விதிகள் மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அவை தயாராகும் இடைப்பட்ட காலத்தில், தகுதியுள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வாழ்வாதார ஆதரவு அளிப்பதற்காக இந்த இடைக்கால மாதாந்திர நிதியுதவி (Interim Payout) அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியை முடித்து, 01.01.2026 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வயது முதிர்வு பெற்று ஓய்வு பெறும் ஒவ்வொரு தகுதியுள்ள அரசு ஊழியரும், TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரை வாழ்வாதாரத்திற்கான மாதாந்திர இடைக்கால நிவாரணத்தை பெறத் தேர்வு செய்யலாம்.
வயது முதிர்வு ஓய்வுக்குப் பிந்தைய வாழ்வாதாரத்திற்கான இடைக்கால விநியோகம் என்பது, கடைசியாகப் பெறப்பட்ட மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் முப்பது சதவீதமாக (30%) அல்லது ரூ.10,000/- இதில் எது அதிகமோ அத்தொகையாக, முற்றிலும் ஒரு தற்காலிக நடவடிக்கையாகக் கணக்கிடப்படும். இத்துடன் அதன் மீதான 60% அகவிலை நிவாரணமும் சேர்த்து, வழக்கமான உறுதி அளிக்கப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.
வயது முதிர்வு மற்றும் பணியின் போது மரணம் தவிர பிற காரணங்களால் பணியை விட்டு விலகியவர்கள் இதை பெற முடியாது. 01.01.2026-க்கு முன்பே பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் அல்லது விலகியவர்கள் இதில் தகுதி பெறமாட்டார்கள்.
இந்த இடைக்கால நிதியுதவியைப் பெற விரும்புவோர், இந்த அரசாணை வெளியிடப்பட்ட தேதியிலிருந்து (16.06.2026) 60 நாட்களுக்குள் குறிப்பிட்ட படிவத்தில் (Form I/II) தங்களது விருப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




