ரவிக்குமார்
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நுழைவுத் தேர்வான ‘நீட்’ தேர்வின் வினாத்தாள்கள், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே கசிந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்துத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் மனமுடைந்து 10 க்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர்.
ஜூன் 21 அன்று மறு தேர்வு நடத்தப்பட்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வினாத் தாள்களைக் கொண்டு செல்ல இந்திய விமானப்படையின் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வினாத்தாள் கசிவு டெலிகிராம் (Telegram) செயலி மூலம் நடந்ததாகக்கூறி ஒன்றிய அரசு அந்தச் செயலியையும் தடைசெய்துள்ளது.

வினாத்தாள் கசிவு வழக்கை இப்போது மத்திய புலனாய்வுத் துறை (CBI) விசாரித்து வருகிறது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்வு தொடர்பான விவகாரம் இந்தியா முழுவதும் போராட்டங்களைத் தூண்டியுள்ளது.
இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டுமென வலியுறுத்தி காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டங்களை ஆரம்பித்தது. நீட் தேர்வின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 1 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து அதே பிரச்சினைக்காக நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இப்போது களத்தில் இறங்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

2026 ஆம் ஆண்டுக்கான நீட் வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டதில், சுமார் 22.6 லட்சம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஏற்பட்ட மனஅழுத்தமும், பொருளாதார இழப்பும் மிகப்பெரியது.
இந்தச் சம்பவத்திற்கு சில அதிகாரிகளையோ தனியார் நிறுவனங்களையோ மட்டும் காரணமாகக் காட்டுவது போதாது. இந்தப் பிரச்சினை மேலும் ஆழமானது. ஒன்றிய கல்வி அமைச்சர் முன்வைக்கும் முழுமையான கணினி மயமாக்கல் போன்ற யோசனைகள் இதற்கான நிலையானத் தீர்வைத் தராது. ஏனெனில், தேசியத் தேர்வு முகமையின் (NTA) உருவாக்கமே ஏற்கத்தக்கதல்ல.
இந்தியா முழுவதும் நுழைவுத் தேர்வுகளை மையப்படுத்துவது அதை நடத்துவதற்கென ஒரு அமைப்பை ஏற்படுத்துவது மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிப்பது மட்டுமின்றிக் கல்வியின் தரத்தையும் சீரழிப்பதாகும்.
கணினி மயமாக்குவதால் வினாத்தாள் கசிவுகளை முற்றிலும் தடுக்க முடியாது. மாறாக, சமூகத்தில் நிலவும் டிஜிட்டல் பாகுபாடு காரணமாக பல சமூகப் பிரிவுகள் மேலும் பாதிக்கப்படும். பல கட்டங்களாகத் தேர்வு நடத்த வேண்டியிருப்பதால், வெளிப்படைத்தன்மையும் குறையும். நீட் தேர்வு மட்டுமின்றி சிபிஎஸ்இ (CBSE )தேர்வுகளிலும் கணினி மயமாக்கல் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொழில்நுட்பத்தை மந்திரத் தீர்வாகக் கருதுவது சரியல்ல.

நீட் வினாத்தாள் கசிவுகளை சில தனிநபர்களின் தவறாகப் பார்ப்பதைவிடவும் பயிற்சி மையங்களும் வினாத்தாள் தயாரிப்பாளர்களும் இணைந்த லாப நோக்கக் கூட்டணியின் விளைவாகப் பார்க்கவேண்டும். நீட் வினாத்தாள்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அதற்காக , முன்பணமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
ஒரே தேசியத் தேர்வு, பல்தேர்வு வினாக்கள் (MCQ) மட்டுமே திறமையை அளவிடும் கருவி என்ற ஒன்றிய அரசின் தவறான கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. MCQ முறை, அறிவை, தகவல் துண்டுகளாகப் பிரித்து மாணவர்களின் மனப்பாடம் செய்யும் திறனை மட்டுமே சோதிக்கிறது. கல்வி வளர்க்க வேண்டிய விமர்சனச் சிந்தனை, கருத்தாக்கத் திறன், சமூகப் புரிதல் போன்றவற்றை அது அளவிட முடியாது.
, “திறமை” என்ற கோட்பாடே மருத்துவக் கல்வியில் போலியானதாக மாறியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மேலாண்மை ஒதுக்கீட்டில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், ஜீரோ மதிப்பெண் பெற்றவர்கள் தம்மிடம் அதிக பணம் இருந்தால் டாக்டராகிவிடலாம் என்ற நிலை உள்ளது. பட்ட மேற்படிப்புகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஆகவே, நீட் முறை உண்மையான திறமையை அளவிடுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.

இப்போது, 58,000 மாணவர்கள் மட்டுமே குறைந்த கட்டணமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறுகின்றனர்; மற்றவர்கள் ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை செலுத்தி தனியார் கல்லூரிகளில் சேருகின்றனர். மீதமுள்ள பெரும்பாலான மாணவர்கள் ஆண்டுக் கணக்கில் பயிற்சி மையங்களுக்காக செலவழித்து தோல்வியடைந்து வெளியேறுகின்றனர். இதனால் “கல்வித் துறை”யை விட “தேர்வுத் தொழில்” ஆதிக்கம் செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது. குடும்பங்கள் கடனில் சிக்குகின்றன; ஆசிரியர்கள் தேர்வுத் தயாரிப்புக் கருவிகளாக மட்டுமே மாறுகின்றனர்.
மருத்துவக் கல்வியின் நோக்கம் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப மருத்துவர்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும். சமூகப் பணி உணர்வு, மக்களுடன் தொடர்பு கொள்ளும் திறன், சேவை மனப்பான்மை போன்றவற்றைத் தேர்வுகளால் அளவிட முடியாது. இடஒதுக்கீடு, மதிப்பெண் சலுகை, முன்னுரிமைச் சேர்க்கை போன்ற வழிமுறைகள் மூலம் மாநிலங்கள் தங்களது சுகாதாரத் தேவைகளுக்கேற்ப மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தங்களில் மருத்துவக் கல்வியில் அதிகரித்திருக்கும் தனியார்மயமாக்கலே இன்றைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மருத்துவப் பட்டதாரிகள் உருவாகின்றனர்; ஆனால் அவர்கள் சமூகத் தேவைகளை நிறைவேற்றும் மனப்பான்மையுடன் உருவாகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நீட் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசும் மாணவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் சில மாநிலங்களும் இப்போது அதை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. வெளிப்படைத்தன்மை, சமூக நீதியுடன் கூடிய அணுகுமுறை, மக்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் மருத்துவர்களை உருவாக்கும் நோக்கம் ஆகியவற்றுடன் மாநிலங்கள் தமக்கேற்ற மாணவர் சேர்க்கை முறைகளை வடிவமைக்க அனுமதிக்கப்பட வேண்டும். அதுதான் இந்தச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
கட்டுரையாளர்

