தவெகவுக்கு ஆதரவு- காங்கிரஸ் அறிவிப்பு!

Published On:

| By Mathi

Congress TVK VIjay

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முடிவை தெரிவிப்பதற்காக தமிழக காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் விஜய்யை சந்திக்க பனையூர் சென்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரியிருந்தார் விஜய். இது தொடர்பாக டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கேசி வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று மே 6-ந் தேதி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், விஜய் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவைக் கோரியுள்ளார். தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் அரசியலமைப்பு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள ஒரு மக்கள் நல அரசாங்கத்திற்காக மிகத் தெளிவான மற்றும் வலிமையான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அடுத்த அரசாங்கத்தை அமைக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் மதச்சார்பற்ற, முற்போக்கான மற்றும் மக்கள் நல அரசியலின் அடித்தளமாக விளங்கும் கட்சியாகும். தமிழக மக்களின் இந்த ஆணையை மதிப்பதும், நிலைநிறுத்துவதும், நிறைவேற்றுவதும் எங்களது அரசியலமைப்பு கடமையாகும். அதன்படி, தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு முழு ஆதரவை வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் குழு முடிவு செய்துள்ளது.

இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்ற எந்தவொரு வகுப்புவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் எங்களது ஆதரவு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இடையிலான இந்தக் கூட்டணி, தந்தை பெரியாரின் சமூக நீதிப் பாதையிலும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் அரசியலமைப்பு லட்சியங்களிலும் உறுதியுடன் செயல்பட்டு, பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர பாடுபடும்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் அதிகாரப் பகிர்வு அடிப்படையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணி, இந்த ஆட்சி அமைப்பதோடு மட்டுமல்லாமல், வரும் உள்ளாட்சித் தேர்தல், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல்களிலும் தொடரும்.

மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான அரசாங்கத்திற்கான தமிழக மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மதிப்பதாகவும், தமிழக மக்களின், குறிப்பாக இளைஞர்களின் கனவுகளையும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாகவும் விஜய் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து உறுதி பூண்டுள்ளனர் “என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, பனையூரில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்தை தர உள்ளோம். நானும் காங்கிரஸ் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமாரும் பனையூர் செல்கிறோம்” என்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share