சென்னையில் இன்று ஜூன் 27-ந் தேதி நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் முதல்வர் விஜய் அரசுக்கு வாழ்த்துகள், டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் கோரிக்கை உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) 32 ஆவது பொதுக்குழு, கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் 27.06.2026 சனிக்கிழமை சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம்: 1
மறுமலர்ச்சி திமுக, 2017 டிசம்பர் 3 ஆம் தேதி நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த 9 வருடங்களாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்ந்து வந்தது.
தமிழ்நாட்டில் மதவாத அரசியல் சக்திகளை காலூன்ற விடாமல் தடுப்பதற்கும், திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியக் கோட்பாடுகளைத் தகர்ப்பதற்கு விடப்படும் அறைகூவல்களை முறியடிக்கவும் மறுமலர்ச்சி திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொள்கை அடிப்படையில் இடம் பெற்று இருந்தது.
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவ அடையாளத்தையும், 32 ஆண்டு கால தமிழ்நாட்டு மக்களுக்கான போராட்ட செயல்பாடுகளையும் நீர்த்துப்போக செய்யும் முயற்சிகள் கூட்டணியில் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, எடுத்த முடிவில் உறுதியாக இருந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம்.
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே மே 1 ஆம் தேதி கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பத்திரிக்கை ஊடகங்களில் தீர்க்கமாக கூறியவாறு தமிழ்நாடு அரசியலில் அதிசயிக்கத்தக்க வகையில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு பேராதரவை வழங்கி இருந்தனர்.
தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அரசியல் களத்தில் நடைபெற்ற திரை மறைவு பேரங்கள், மக்கள் வழங்கியத் தீர்ப்புக்கு எதிராக இருந்ததை அனைவரும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்துத்துவ மதவாத சக்திகளோடு கரம் கோர்த்துக் கொண்டு கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலில், வெறும் 47 இடங்களில் வெற்றி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது ஊரறிந்த இரகசியமே;
இதன் மூலம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கை கூட்டணி என்று பிரகடனம் செய்யப்பட்டதெல்லாம், சில அக்கறை உள்ள சக்திகளால் பொருளற்றதாக ஆக்கப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இனியும், திமுக தலைமையிலான கூட்டணியில் தொடரக் கூடாது என்று கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
எனவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று கழகப் பொதுக்குழு முடிவு செய்கிறது.
தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தக்க முடிவுகளை கழகம் மேற்கொள்வது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம்: 2
சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடையநல்லூர் மற்றும் சீர்காழி தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.இராசேந்திரன், இரா.செந்தில்செல்வன் ஆகியோரை ஆதரித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருமக்களுக்கும், களப்பணியாற்றிய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்: 3
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற இயற்கை நெறிமுறைகளுக்கு இணங்க சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்திற்கு அடிகோலிய தமிழக மக்கள், ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைவதற்கு தீர்ப்பு வழங்கினார்கள்.
இந்தியத் துணை கண்டத்திற்கு வழிகாட்டக்கூடிய தமிழ்நாடு இதுவரை பின்பற்றி வந்திருக்கின்ற மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவ கோட்பாடுகள், மாநில உரிமை, தமிழ், தமிழ்நாடு, தமிழர் நலன் ஆகியவற்றில் சமரசத்திற்கு இடமின்றி, புதிய அரசு தமிழ்நாட்டின் தனித்துவ சிறப்புகளை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, மறுமலர்ச்சி திமுக பொது குழு ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்: 4
தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றின் குறுக்கே காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேகேதாட்டு அணைக் கட்ட கர்நாடக மாநில அரசு முனைப்பாக செயல்படுவது கண்டனத்திற்குரியது.
கர்நாடக மாநில அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான புதிய திட்ட அறிக்கையை ஒன்றிய அரசின் நீர்வளத்துறைக்கு அனுப்பலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு தமிழ்நாடு மாநில அரசு தரப்புக்கு பின்னடைவை தந்திருக்கிறது.
இதைப் பயன்படுத்திக் கொண்டு மேகேதாட்டு அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விட்டதாக கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறி வருவது ஏற்கத்தக்கதல்ல.
2007 பிப்ரவரி 5ஆம் தேதி வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி, கடைமடை பகுதியான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக மாநிலம் காவிரியில் எவ்வித நீர்த்தேக்கங்களையும் அமைக்க முடியாது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஜூன் 19ஆம் தேதி, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் முதல்வரின் தனித் தீர்மானத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக முடிவு எடுக்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேகேதாட்டு அணை கட்டவே கூடாது என்பதுதான் தமிழ்நாடு இதுவரை மேற்கொண்டிருந்த நிலைப்பாடு ஆகும்.
தற்போது புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, மேகேதாட்டு அணை குறித்து முடிவு செய்யக் கோருவது கர்நாடக மாநிலத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும்.
எனவே தமிழ்நாடு அரசு மேகேதாட்டு அணைப் பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை திரும்பப் பெறுவதுடன், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, அதில் விவசாய சங்கங்களையும் பங்கேற்கச் செய்து கருத்துக்களைக் கேட்டு கலந்தாய்வு செய்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையை நிலை நிறுத்த வேண்டும் என்று கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: 5
தேசிய கல்விக் கொள்கை 2020இன் தொடர்ச்சியாக, ‘பிரைம் மினிஸ்டர்ஸ் ஸ்கூல்ஸ் ஆப் ரைசிங் இந்தியா’ எனப்படும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை, ஒன்றிய அரசு கடந்த 2022 இல் அறிமுகம் செய்தது.
நாடு முழுவதும் உள்ள 14,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துதல், மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம், ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய தரமான கல்வியை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்துக்கான நிதியில் 60 சதவீதத்தை ஒன்றிய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும். பெரும்பாலான மாநிலங்கள் இதில் இணைந்துவிட்டன. ஆனால், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் இதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை.
தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இருப்பதால், திமுக தலைமையிலான முன்னைய அரசு ஏற்கெனவே பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கையே போதும் எனக் கூறி இந்தத் திட்டத்தில் இணைய மறுத்துவிட்டது.
இதனால், ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட (சமக்ர சிக்ஷா) கல்வி நிதிக்காக ஒதுக்கும் ரூ.3,500 கோடியை தமிழக அரசுக்கு வழங்காமல் நிறுத்தி வைத்தது.
தற்போது ஒன்றிய அரசு மீண்டும் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தின் கீழ் பள்ளிகளை மேம்படுத்த உடனடியாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தமிழ்நாட்டில் இதுவரை கடைபிடிக்கப் பட்டு வந்த இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதில் உறுதியாக இருப்பதுடன், ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டின் கல்வி நிதியைப் போராடி பெற வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 6
2026-2027-ஆம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் ஜூன் 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. நீட் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஆனால், நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக அந்த தேர்வு ரத்துசெய்யப்பட்ட நிலையில், ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நீட் தேர்வு எழுத அச்சம் காரணமாக தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல நகரங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த வெற்றியானந்தம் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏற்கனவே கடந்த 17-ஆம் தேதி கோவையை சேர்ந்த மாணவி அனுகீர்த்தனா இதே காரணத்தால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் ரோஷிணி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமக்கல்லில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். ஜூன் 21ஆம் தேதி தருமபுரியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நீட் மறு தேர்வை எழுத இருந்த நிலையில், முதல் நாள் மாலை வீட்டில் ரோஷிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை மந்தைவெளியை சேர்ந்த பிரபாகரன் அவர்களின் மகள் வித்யா 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு டாக்டராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்காக வீட்டில் இருந்து படித்து வந்தார். வித்யா 3 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். 3 முறையும் தோல்வியடைந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த வித்யா நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோதே தற்கொலை செய்து கொண்டார்.
2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்டோரும், தமிழ்நாட்டில் 40 பேரும் அத்தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மாணவர்களின் தற்கொலைக்கு வழி வகுத்ததைத் தவிர, நீட் தேர்வால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 10 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது.
இதை உணர்ந்து ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அரியலூரில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது இருந்தே நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி கடந்த தி.மு.க ஆட்சியில் மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தீர்மானத்துக்கு ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இனியும் மாணவர்களின் தற்கொலைகள் தொடரக்கூடாது. அதற்காக நீட் தேர்வு தேசிய அளவில் ரத்து செய்யப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 7
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,048 மதுக்கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இதற்காக, 11 மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகளும்; ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து மாதந்தோறும் கொள்முதல் ஆணை கிடைத்த உடனே, மதுபான பெட்டி விலைக்கான ஆயத்தீர்வை வரியை, தமிழக அரசுக்கு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இது தவிர, ஒவ்வொரு பெட்டிக்கும் தலா, 60 ரூபாய் ‘கமிஷன்’ தொகையாக, முந்தைய ஆட்சியாளர்களுக்கு கட்சி நிதியாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மதுபான பெட்டிக்கு 60 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு வந்த கமிஷன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்நிறுவனங்களுக்கு மாதம் 51 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.
மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து, இதுவரை கமிஷனாக பெறப்பட்டு வந்த பணத்தை, அதிகாரப்பூர்வமாக அரசுக்கு கிடைக்கும் வழியை தமிழக முதல்வர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
இதன்படி, மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் பீர் வகை பெட்டி ஒன்றுக்கு 40 ரூபாயும், மது வகை பெட்டிக்கு 90 ரூபாயும், சிறப்பு கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“டாஸ்மாக் மது விற்பனை வாயிலாக, 2025 – 26இல் ஆயத்தீர்வை வருவாயாக 11,836 கோடி ரூபாயும், மதிப்பு கூட்டு வரியாக 39,010 கோடி ரூபாயும் அரசுக்கு கிடைத்துள்ளது. .
கடந்த ஆட்சி காலங்களில் மதுபான நிறுவனங்களின் வாயிலாக தயாரிக்கப்படும் மதுபான வகைகள், பீர் மற்றும் ஒயின் வகைகளுக்கு ஒரு பெட்டிக்கு, ஒரு குறிப்பிட்ட தொகை அரசு கணக்கில் வராமல், தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தனி நபர்களுக்கு சென்றுள்ள விபரத்தை பல்வேறு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த விபரம், முதல்வரின் கவனத்திற்குச் சென்றதும், உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும், அரசு நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத் தன்மை இருப்பதுடன், முறைகேடுகள் எந்த விதத்திலும் நடக்கக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.
மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து, கணக்கில் வராமல் தனி நபர்களுக்கு சென்று வந்த தொகையை, அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில் கூடுதல் கட்டணம் விதித்து, அரசு விதிகளில் திருத்தம் செய்து, இம்மாதம் 5ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, அரசுக்கு உடனடி வருவாயாக ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் கிடைக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் கருவூலத்திற்கு வரவேண்டிய தொகையை தனி நபர்கள் சுரண்டிச் சென்றதை தடுத்து நிறுத்தி, அரசுக்கு வருவாய் கிடைக்க வழி செய்த தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை மதிமுக பொதுக்குழு வரவேற்கிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டது பாராட்டுக்குரியது.
ஆனால் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் கடந்த ஆட்சி காலத்தில் உரிமங்கள் வழங்கப்பட்டு மதுபான கடைகள் தாராளமாக இயங்கி வருகின்றன. அவற்றையும் மூடுவதுடன், படிப்படியாக மதுபான கடைகள் அனைத்தையும் மூடி முழு மதுவிலக்கை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 8
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, தமிழகத்தில் உரம் விலை திடீரென உயர்ந்துள்ளது. பொட்டாஷ் உரம் ரூ.1,850-லிருந்து ரூ.2,250 ஆகவும், பாக்டம்பாஸ் ரூ.1,750-லிருந்து ரூ.2,150 ஆகவும், அம்மோனியம் சல்பேட் ரூ.1,200-லிருந்து ரூ.1,400 ஆகவும் உயர்ந்துள்ளது.
காம்ப்ளக்ஸ் ரூ. 1,550-லிருந்து ரூ. 2,200 ஆகவும் உயர்ந்துள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதனால் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
அரிசி, கோதுமை, சர்க்கரை உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதால், உர விலை உயர்ந்தால் அது நேரடியாக மளிகைப் பொருள்களின் விலையையும் உயர்த்தும் என்று அஞ்சப்படுகிறது.
எனவே ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் யூரியா ,உரம் விலையை கட்டுப்படுத்த வேண்டுமென்று கழகப் பொது குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 9
இந்திய நிறுவனங்கள் கடந்த மே 15ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தத் தொடங்கின. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107.87 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 99.65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒருகிலோ சிஎன்ஜி 97 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஈரான் போர் காரணமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 8 ரூபாய் விலை உயர்ந்துள்ளன. அதுவும் குறுகிய 15 நாட்களுக்குள்ளேயே இந்த விலை ஏற்றப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலையில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி ரூ 60 உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு, ஜூன் 7 ஆம் தேதி 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளையின் விலையில் மேலும் ரூ 29 உயர்த்தியது. இதனால் சமையல் எரிவாயு உருளையின் விலை 957 ரூபாய் 50 ஆக அதிகரித்துவிட்டது.
இந்த விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ,அமெரிக்கா -ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணம் என்று கூறுகின்றன.
தற்போது ஈரான் போர் முடிவுக்கு வந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 77 டாலர் என வரலாற்று உச்ச விலையில் இருந்து 30 சதவீதம் சரிந்துவிட்டது.
எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் என்பது தான் கோடிக்கணக்கான சாமானிய மக்களின் கேள்வி. இதனை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்று கழக பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: 10
கடந்த மே 30ஆம் தேதி ஒன்றிய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்
“இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு விதிக்கப்படும் சுங்க வரி மற்றும் ‘வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம்’ (Agriculture Infrastructure and Development Cess) ஆகியவற்றில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும். இந்த 11 சதவீத வரி ரத்து நடவடிக்கையானது, வரும் ஜூன் 1 முதல் அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும்.
இந்திய ஜவுளித் துறைக்கான பருத்தி இருப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்காலிக வரி விலக்கு ஜவுளி மற்றும் ஆடைத் துறையில் பெருமளவில் மூலதன செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் லாபம் கிடைக்கும். மேலும், உள்நாட்டு விவசாயிகளின் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும்.
மொத்தத்தில், இந்த நடவடிக்கை உள்நாட்டு ஜவுளித் துறையில் ஈடுபட்டிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும், சந்தையில் பருத்தியின் கையிருப்பை உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரி ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது.இதனால், பருத்தி ஜவுளி ஏற்றுமதி மீள்வதற்கு சாதகமான சூழல் உள்ளது. ஐரோப்பாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்கிறது.
இந்த வரிவிலக்கு ஆண்டுதோறும் ஒவ்வொரு முறையும் கோரிக்கை விடுத்து பெறும் நிலையில் உள்ளது. ஆனால், வரிவிலக்கு காலம் முடிந்ததும், 11 சதவீத இறக்குமதி வரியால், விலையில் போட்டி தன்மையை இழக்கும் சூழல் உள்ளது.
எனவே பருத்திக்கு தற்காலிக வரி விலக்கை, சீசன் அல்லாத காலங்களில் தொழில்துறையினர் பயனடையும் வகையில் நிரந்தரமாக அறிவிக்க வேண்டும்” என்று ஜவுளி தொழில்துறையினர் விடுத்துள்ள கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என கழகப் பொது குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 11
1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் போராடிய பொழுது பொள்ளாச்சி நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த தியாகத்தை போற்றும் வண்ணம்- ஆதிக்க இந்தியை எதிர்த்து அன்னை தமிழ்மொழி காக்க தங்கள் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு பொள்ளாச்சி நகரில் மொழிப்போர் அருங்காட்சியகம் நூலகத்தோடு கூடிய மொழிப்போர் மணிமண்டபம் அமைத்து மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று அரசு சார்பில் மரியாதை செலுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுக் குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 12
கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், தென்காசி போன்ற மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் தேங்காய்க்கு தமிழ்நாடு அரசு 1 விழுக்காடு செஸ் வரி வசூல் செய்து வருகிறது..
கேரளா, கர்நாடகம் போன்ற தேங்காய் அதிகம் விளையும் மாநிலங்களில் தேங்காய்க்கு செஸ் வரி இல்லை . மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை நீக்கியதை போல அழுகும் பொருளான தேங்காய் மீதான செஸ் வரியை நீக்கி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என கழக பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 13
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கண்காணிப்பில் தொடர்ந்து அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள், இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தையும், அவர்களது கனவுகளையும் சிதைத்து விட்டன. நம் ஜனநாயகத்தின் மிக முக்கியமான கூறான பொதுக் கல்வி, தகுதி அடிப்படையிலான தேர்வு முறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மோடி அரசு முற்றிலுமாகச் சீர்குலைத்துள்ளது.
பல ஆண்டுகள் கடுமையாகப் படித்து நீட் தேர்வை எழுதிய 23 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் வாழ்வாதாரம் வினாத் தாள் கசிவு காரணமாக கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டின் முதன்மைத் தேர்வு முகமைகளின் மீதான நம்பிக்கை முற்றிலுமாகச் சிதைந்து போய்விட்டது.
நீட் தேர்வு மட்டுமின்றி, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டி லும் மிகப்பெரிய டிஜிட்டல் முறைகேடு நடந்துள்ளது. விடைத்தாள்களை இணை யதளத்தில் திருத்தும் ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்’ (ஓஎஸ்எம்) என்ற புதிய முறை அவசர அவசரமாக அறிமுகப்படுத்தப் பட்டது ஏன்? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. குறிப்பாக போர்டல் முடக்கம், பக்கங்கள் விடுபடுதல், விடைத்தாள்கள் மாறுதல் போன்ற குளறுபடிகளால் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற முக்கியப் பாடங்களில் மாணவர்களின் மதிப்பெண்கள், தேர்ச்சி விகிதம் வரலாறு காணாத அளவில் சரிந்தது.
இந்த டிஜிட்டல் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்ற ‘கோயம்ட்’ என்ற நிறுவனம், ஏற்கெனவே தெலங்கானா அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஒன்று என்பது எத்திகல் ஹேக்கர்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவதற்காக விதிகளில் 3 முறை தளர்வுகள் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இதற்காக சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் மாற்றப்பட்டது மிகக் குறைந்த நடவடிக்கை, அதுவும் மிகத் தாமதமாக எடுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
உயர்மட்ட அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் விதிகளில் மாற்றம் செய்திருக்க முடியாது. அதனால் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமை, சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை குறித்து குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சுதந்திரமான நீதித்துறை அல்லது வல்லுநர் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 14
தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் கொள்முதல் செய்திருக்கும் நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நெல் மூட்டைகள் நீரில் நனைந்து வீணாகி வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது விவசாயிகளிடையே கவலை, வேதனை மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்து சேதமடைந்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் பெய்த மழையில் பல நெல்மூட்டைகளுக்குள் மழைநீர் புகுந்து நெல் சேதமானது, மேலும் சில மூட்டைகளில் இருந்த நெல்மணிகள் முளைத்து காணப்பட்டன.
விவசாயிகளின் பல மாத உழைப்பின் பலனாக விளைந்த நெல் மூட்டைகள், இப்படி மழையில் நனைந்து சேதமாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மழை காரணமாக திறந்த வெளியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெல் சேதமடைந்தால் அரசுக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாகவும், இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க நிரந்தர சேமிப்பு கிடங்குகள் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் கவலையைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக நெல் மூட்டைகளை சேமிப்பதற்கு உரிய கட்டமைப்புகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 15
தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கழகப் பொதுச் செயலர் வைகோ அவர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கழகப் பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்தார். மீண்டும் இந்த வழக்கை மார்ச்சு 18 ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் உரிய வகையில் அகற்றப்பட வேண்டும். இதற்காக 39 வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், மனுதாரரின் ஆலோசனைகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படுவதை ஓய்வுபெற்ற இரு நீதிபதிகள் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பார். உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான குழுவினர் தென் மாவட்டங்களில் நடைபெறும் பணிகளையும், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினர் வட மாவட்டங்களில் நடைபெறும் பணிகளையும் கண்காணிப்பார்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக போராடி இந்த வழக்கில் உத்தரவு பெற்றுத் தந்த கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு பொதுக்குழு பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 16
தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 இலட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசு, அரசுத்துறைகளில் உள்ள அனைத்துக் காலியிடங்களும் நிரப்பப்படும் என்று அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கழகப் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: 17
சுகாதாரத் துறை கட்டமைப்பில் நாட்டிலேயே சிறப்பிடம் பெற்று தமிழ்நாடு திகழ்வதற்கு அடிப்படையாக இருப்பவர்கள் அரசு மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் ஆவார்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கடந்த ஐந்தாண்டு காலமாக கீழ்கண்ட இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வந்தனர்.
(1) அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்பட வேண்டும்
(2) கொரோனா பேரிடரில் மக்களை காப்பாற்றப் போராடி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு உரிய நிவாரணமும், அரசு வேலைக்கான ஆணையும் முதல்வரின் கைகளால் வழங்கி, அந்த குடும்பத்தின் கண்ணீரை துடைக்க வேண்டும்.
இக் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை பரிசீலித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 18
தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கள உதவியாளர் (Field Assistant) மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பணியாளர் சங்கங்களும், மின்வாரிய வட்டாரங்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. இதன் காரணமாக மின்கம்பங்கள் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மின் இணைப்பு வழங்குதல், அவசரகால மின் தடைகளை சரிசெய்தல் உள்ளிட்ட களப்பணிகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் 15,000 நபர்கள் கேங்மேன்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் பத்தாயிரம் நபர்களுக்கு 2021-ஆம் ஆண்டு கேங்மேன் பணி வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கேங்மேன் பணியாளர்கள் மின்வாரியத்தின் களப்பணிகளில் நேரடி அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். மின் விநியோக கட்டமைப்பு, மின் பாதை பராமரிப்பு, மின்தடை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஏற்கனவே திறமையுடன் செயல்பட்டு வருகின்றனர். தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களைத் தவிர தேர்வு செய்யப்பட்ட ஐந்தாயிரம் பேர் கேங்மேன் பணிக்கு தேர்வான நிலையில் அவர்களுக்கு நிரந்தர பணி வழங்காமல், தற்போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் மின்துறையில் பணி செய்து வருகின்றனர். அந்த 5,000 நபர்களை கேங்மேன்களாக பணி அமர்த்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடைகள் மற்றும்
பழுதுகளை உடனடியாக சரிசெய்ய போதுமான களப்பணியாளர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இந்நிலையை மாற்றுவதற்கு புதிய பணியாளர்களை நியமித்து மீண்டும் பயிற்சி அளிப்பதை விட, ஏற்கனவே அனுபவம் பெற்ற கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக நியமிப்பது மின்வாரியத்திற்கும், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் நடைமுறையாக அமையும்.
மேலும், களப்பணியாளர் பற்றாக்குறையால் தற்போதுள்ள பணியாளர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை ஏற்படுவதுடன், மின் பழுதுகள் சரிசெய்யப்படும் நேரமும் தாமதமாகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே, தமிழ்நாடு மின்வாரியத்தில் நீண்ட காலமாக பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள கேங்மேன் பணியாளர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கி, காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் அவர்களை நிரந்தரமாக நியமிக்கவும், 2020-ஆம் ஆண்டு கேங்மேன் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஐந்தாயிரம் பேரை கேங்மேன்களாக பணியமர்த்துவதற்கு தமிழக அரசும், தமிழ்நாடு மின்வாரிய நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 19
சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கினைச் செய்த, கேடு விளைவித்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை எதிர்த்து பல ஆண்டுகள் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், வணிகர் சங்கங்களும், தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அன்றைய தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எடுபிடியாக மாறி, போராட்டக்காரர்களை நசுக்கும் நோக்கத்தில் காவல்துறை 13 பேரை சுட்டுக் கொன்றது. ஸ்டெர்லைட் வழக்கு உயர்நீதிமன்றத்திலும் ஆண்டுக் கணக்கில் நடத்தப்பட்டு, இறுதியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் ஆகியோர் அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியது.
இந்தியாவில் தாமிரம் கிடைப்பது இல்லை என்று அண்மையில் பிரதமர் நநேரந்திர மோடி தெரிவித்துள்ளார் .
அப்படி தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டுமானால் அவரது குஜராத் மாநிலத்திலேயே அமைக்கலாமே? பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமைக்கலாமே? என்று கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டை நாசமாக்கும் விதத்தில் நம் மாநிலத்தில் வேதாந்தா குழுமம் தாமிர உற்பத்தி ஆலையைத் தொடங்க திட்டமிட்டு, “ பசுமைத் தாமிரம்“ உற்பத்தி என்ற பெயரில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசை அணுகி அனுமதி பெற முயற்சிக்கிறது.
தமிழ்நாடு அரசு,வேதாந்தா குழுமம் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எவ்விதத்திலும் அனுமதி கொடுக்கக் கூடாது. சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கக் கூடாது என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 20
தமிழர்களின் பூர்வீகத் தாயகம் இலங்கைத் தீவு. வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து அவர்கள் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.
பிரிட்டிசார் வெளியேறுகிறபோது, அதுவரை தமிழர்களின் நிர்வாகப் பகுதிக்குள் வராத சிங்களவர்களின் அதிகார நுகத்தடியில் தமிழர்களைச் சேர்த்துவிட்டுப் போய்விட்டார்கள். தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமை கேட்டனர். ஆனால், அவர்கள் நாலாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டனர். ஈழத்துக் காந்தி தந்தை செல்வா தலைமையில் நீதி கேட்டனர்.
தமிழர்கள் நடத்திய அறப்போராட்டத்திற்குப் பரிசாக, துப்பாக்கிச் சூடு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை இதுதான் நடைபெற்றன. தமிழர்கள் தொடர்ந்து வதைக்கப்பட்ட காரணத்தால், ‘சுதந்திரத் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு’ என்று வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில் தமிழர்கள் தீர்மானம் எடுத்தனர்.
இளைய தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும் என்று தந்தை செல்வா பிரகடனம் செய்தார். அதையொட்டித்தான் உலகில் எவரும் இதுவரை கண்டும், கேட்டும் இராத நிகரற்ற சாகசங்கள் நிறைந்த யுத்தத்தை நான் நெஞ்சல் பூசிக்கும் தலைவர் பிரபாகரன் முன்னெடுத்தார்.
உலகத்தில் தாயக விடுதலைக்காக ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஆயுத உதவிகள் கிடைத்தன. எந்த உதவியும் இல்லாமல் தரைப்படை, கப்பல் படை, விமானப் படை அமைத்து ‘ஓயாத அலைகள்’, ‘அக்னி அலைகள்’ ‘யானையிரவுச் சமர்’ என்று வெற்றி மேல் வெற்றிகளை தமிழர்கள் குவித்து வந்த நேரத்தில், சிங்களவர்களுக்கு உலக நாடுகளின் ஆயுதங்கள் கிடைத்தன. ஆனால், தமிழர்களுக்கு எந்த ஆயுதங்களும் கிடைக்காத சூழல்.
அன்றைய அதிபர் மகிந்த ராஜபக்ச. இன்றைய அதிபர் கோத்தபய ராஜபக்ச, ராணுவ அமைச்சராக இருந்தபோது நடத்திய ராணுவப் படுகொலையில், லட்சக்கணக்கான தமிழர்கள் கிளிநொச்சியை நோக்கி வருகை தந்தனர்.
மருத்துவச் சாலைகள், பள்ளிகள் மீது சிங்களவர்கள் குண்டுகளை வீசினர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், இளம்பெண்கள் நாசமாக்கிக் கொல்லப்பட்டனர்.
இப்படிப்பட்ட படுகொலைகள் நடைபெற்ற வேளையில், உலகத்தின் நீதி கிடைக்காதா? நாதி கிடைக்காதா? என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் 2009,மே 17, 18 ஆகிய தேதிகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதற்கு நீதி வேண்டும் என்று இன்றைக்கு நாங்கள் கேட்கிறோம். மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகிறோம்.
அர்மீனியர்களுக்குக்கூட ஜெர்மானிய நாடாளுமன்றம் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போடுகிறது.
தமிழர்கள் நாதியற்றவர்களா? எங்களுக்கு நீதி கிடையாதா? லட்சக்கணக்கான தமிழர்கள் வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 90 ஆயிரம் பெண்கள் இன்றைக்கு கணவர்களை இழந்திருக்கிறார்கள்.
மனிதகுலத்தின் நீதிமன்றமாகக் கருதுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் நீதி கேட்கிறோம்.
என்ன நீதி? கொடூரமான படுகொலைகளைச் செய்த மகிந்த ராஜபக்ச கூட்டம் சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். காணாமல் போன தமிழர்கள் கண்டுபிடித்துக் கொடுக்கப்பட வேண்டும். சிறைப்பட்டத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர்களின் காணிகளை, நிலங்களை அபகரித்துக்கொண்டு ராணுவத்தைக் கொண்டுபோய் குடியேற்றி இருக்கிறார்கள். அந்த நிலங்கள் மறுபடியும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகெங்கும் அகதிகளாக வாழுகின்ற தமிழர்களை அந்தப் பொது வாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 21
கடந்த பிப்ரவரி மாதம் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர், பாம்பன் மீனவர்கள் 12 பேர் என மொத்தம் 16 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன்பிறகு, வெளிச்சிறை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மீனவர்கள் விடுவிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு மேல் கடந்தும் அவர்களை தாயகம் அனுப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை .
இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள்
“இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும் நாங்கள் சிறையில் இருப்பதுபோல் தான் இருக்கிறோம். வெளிச்சிறை முகாமில் நெருக்கமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர்.
சாக்கடை ஓடும் பகுதியில் தங்க வைத்துள்ளதால் கொசுக்கடியால் சரியான தூக்கமின்றி அவதிப்பட்டு வருகிறோம். இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. சரியான நேரத்திற்கு உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறோம்.
இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை பற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை. சிறை அதிகாரியிடம் ஏன் எங்களை இந்தியாவிற்கு அனுப்பவில்லை என்று கேட்டால் அலட்சியமாக பார்க்கின்றனர்.”
என்று கண்ணீர் பொங்கல் தெரிவித்துள்ளனர். இந்த காணொளிப் பதிவு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு 16 மீனவர்களும் தாயகம் திரும்ப உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் , அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும் தொடர்கிறது.
இவ்வாறு கைதாகும் மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றதால் கடும் சிறை தண்டனையுடன், பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது.
ஒன்றிய பாஜக அரசு ,தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப் படுவதையும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, மீன்பிடி படகுகள், கருவிகளைப் பறிமுதல் செய்வதையும் தடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்:: 22
தமிழகத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் 2025 மே 1 முதல் 2026 பிப்., 28 வரை சிறு, குறு, பெரு விவசாயிகள் பெற்ற பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்தது.
ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தொகை, அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும். அதன்படி தமிழகத்தில் 14.43 லட்சம் விவசாயிகளுக்கு இருந்த ரூ.5932 கோடியே 23 லட்சம் பயிர் கடனை அரசு தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் அனைத்து பயிர்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அளித்த வாக்குறுதியை த வெ இ அரசு நிறைவேற்ற வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள நீண்ட, மத்திய கால கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 23
2002 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு என்எல்சி நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளை விற்க முடிவு செய்து அறிவித்தபோது, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். பின்னர் பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து வலியுறுத்தி பங்குகள் விற்பனையை கைவிடச் செய்து, என்எல்சி நிறுவனம் தனியார் மயமாகாமல் தடுத்து நிறுத்தினார்.
அதன் பின்னர் 2006 இல் என்.எல்.சி., நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை விற்பதற்கு மன்மோகன்சிங் அரசு முயன்றபோது, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
2011ஆம் ஆண்டுக்கு முன்பு, என்.எல்.சி., பங்குகள் ஒன்றிய அரசிடம் 93 சதவிகித பங்குகள் இருந்தது. 7 சதவிகித பங்குகள் ஊழியர்கள் வசம் இருந்தது. அதே ஆண்டு ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு பிறகு, அரசின் பங்கு 90 சதவிகிதமாக குறைந்தது. 2013 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு 5 சதவிகித பங்குகளை விற்கப் போவதாக அறிவித்தது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கு விற்பனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழக அரசு சார்பில் 3.56 சதவிகித பங்குகளை வாங்கினார். அதனால் அப்போதும் பங்கு விற்பனை முயற்சி கைவிடப்பட்டது.
பின்னர், 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை ஓ.எப்.எஸ்., (Offer for Sale) நடவடிக்கைகள் மூலமாக அரசின் பங்குகள் 79.20 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு மீண்டும் 7 சதவிகித பங்குகள் விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் என்.எல்.சி.,யின் 3 சதவிகித பங்குகளை விற்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நவரத்தினா பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் என்எல்சி ஆண்டுக்கு 3670 கோடி ரூபாய் இலாபமிட்டும் நிறுவனமாக சிறப்பாக இயங்குகிறது.
நிலக்கரி சுரங்கம் அமைக்கவும், அனல் மின் உற்பத்தி நிலையம் அமைந்திடவும் நெய்வேலியைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் வீடு, நிலங்களை அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர்.
இந்நிலையில் என்எல்சி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை மீண்டும் விற்பதற்கு ஒன்றிய பாஜக அரசு முனைந்திருப்பது கண்டனத்துக்குரியது.
என்எல்சி நிறுவன பங்குகள் விற்பனையைக் கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுக்குழு வலியுறுத்துகிறது.
