”முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து – சமூகநீதிக்கு எதிரானது” : ஜவாஹிருல்லா

Published On:

| By Kavi

இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று, மதம் மாறியவருக்கு ‘பிசி-முஸ்லிம்’ என சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது, 

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (ஜூன் 27 அறிக்கை வெளியிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, ”அரசமைப்புச் சட்டம் தந்த உரிமையின் அடிப்படையில் இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5% தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் சமீபத்திய தீர்ப்பு, தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும் புறக்கணிக்கும் வருத்தமளிக்கும் தீர்ப்பாகும்.

தமிழகத்தில் முஸ்லிம் சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு, நிர்வாக பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல துறைகளில் கடுமையான பின்னடைவை எதிர்கொண்டுள்ள நிலையில், சமூக மற்றும் கல்வி அடிப்படையிலான ஆய்வுகளின் அடிப்படையில் தான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று முத்தமிழறிஞர் கலைஞர் 2007ல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு (பிசிஎம்) 3.5% இடஒதுக்கீடு வழங்கினார்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசிஎம்) அந்தஸ்து வழங்கலாம் என்பதை பல தீர்ப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன:

ஆர் ஆயிஷா எதிர் தமிழ்நாடு அரசு வழக்கில், (CTC 2015 MHC4840), சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 5 2015ல் வழங்கிய தீர்ப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாறிய பின்னரும் பிசிஎம் பிரிவில் சேர முடியும் என்று உறுதிப்படுத்தியது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பல வழக்குகளில் நீதிமன்றம் அதையே முன்னுதாரணமாக எடுத்துள்ளது.

ADVERTISEMENT

நீதிபதியரசர்கள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு வழங்கிய தீர்ப்பில் (W.A.No.2813 of 2021), பிற்படுத்தப்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு பெற்ற பிசிஎம் சான்றிதழ் செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது வாழ்வில் நெறியாக ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு பி.சி.எம். இடஒதுக்கீடு வழங்கப்படாமல் அவர்கள் இதரர் என்று வகைப்படுத்தப்பட்டனர்.

கடந்த 22.4.2022, 11.3.2023 மற்றும் 14.2.2024 ஆகிய நாட்களில் சட்டமன்றப் பேரவையிலும், அதே போல் கடந்த 22.9.2022 தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்தும் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியர்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்றிதழ் வழங்க வேண்டியதின் அவசியம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தினேன்.

இதனை தொடர்ந்து 15.2.2024 அன்று ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் உரையில் எனது கோரிக்கையை குறிப்பிட்டு அதற்கு பதிலளித்த அன்றைய முதலமைச்சர் அது மு.க. ஸ்டாலின் சட்டவல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து நான் வைத்துள்ள கோரிக்கை நிறைவேற்றப்படும் என பதிலளித்தார்.

கடந்த 17.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்று அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறிவித்தார்கள்.இந்த அறிவிப்பின் அடிப்படையில் கடந்த மார்ச் 9, 2024ல் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையின் உதவியால் தமிழ்நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்றிதழ் கிடைக்க மு க ஸ்டாலின் ஆட்சி வழிவகுத்தது

மதம் மாறிய பிறகும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (பிசிஎம்) என்ற உரிமை தொடரும் என்று இந்த அரசாணை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் எம் எஸ் ரமேஷ் தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த அக்டோபர் 25ல் தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், பிசிஎம் அந்தஸ்து புதியதாக வழங்கப்பட்டது அல்ல; ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சமூகநீதிசார் உரிமை என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், “பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்” என்பது தமிழ்நாடு சட்டம் 45/1994-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகப் பிரிவு என்பதை நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு 3.5% பிசிஎம் இடஒதுக்கீட்டை செல்லாததாக்கும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் அணுகுமுறை, சமூக உண்மைகளையும் அரசியல் சட்டப் பாதுகாப்புகளையும் மறுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

தமிழகம் என்பது பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிய சமூகநீதி மண். இங்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறிப்பதற்கான எந்த முயற்சியும் மக்களால் ஏற்கப்படாது.

எனவே, தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உயர்நீதிமன்றத்தின் பெரிய அமர்விற்கு மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share