நடிகை திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி.. ‘கான்ஃபிடன்ட்’ அதிமுக!

Published On:

| By Mathi

Deputy CM Post for Trisha? AIADMK Confident on the Claim

”தமது தோழி நடிகை திரிஷாவுக்கு (Trisha) துணை முதல்வர் பதவியோ அல்லது எது சிறந்ததோ அதை முதல்வர் விஜய் வழங்குவார்” என்று அதிமுக (AIADMK) முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று ஜூன் 27-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பி உதயகுமார் இது தொடர்பாக கூறியதாவது: “கான்ஃபிடன்ட்டா இருங்க, நல்லதே நடக்கும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். அனைத்திலும் வெளிப்படைத் தன்மை (Transparency) இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், தனது பிறந்தநாளை மட்டும் இரவு 12 மணிக்கு மேல், நட்புக்கு இலக்கணமாகக் கருதப்படும் நடிகை திரிஷா அவர்களோடு கேக் வெட்டிக் கொண்டாடியது தேச துரோகக் குற்றம் அல்ல. இருப்பினும், முதலமைச்சராக இருப்பவர் நினைத்திருந்தால், தொண்டர்களோடும் மக்களோடும்கூட எளிமையாக இதைக் கொண்டாடியிருக்கலாம். பிறந்தநாள் விழாவைத் தனது தோழியுடன் மட்டுமே கொண்டாட வேண்டும் என்று அவர் நினைப்பது அவருடைய தனிப்பட்ட உரிமை.

ADVERTISEMENT

ஆனால் நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், அவருடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கும், அவரோடு உடன் பயணித்தவர்களுக்கும் பதவி கிடைக்கும்போது, அவரோடு இருக்கும் அந்தத் தோழிக்கும் ஏதாவது பதவி கிடைக்குமா? நேற்று முன்தினம் காரைக்குடியில் ஒருவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ‘திரிஷாவுக்குப் பதவி வழங்காவிட்டால் கலவரமே வெடிக்கும்’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல, நடிகை திரிஷா அவர்களுக்குத் துணை முதலமைச்சர் பதவியோ அல்லது முதலமைச்சர் பதவியோ.. எது அவருக்குச் சிறந்ததோ அதை முதல்வர் வழங்குவாரா? என்பதுதான் தற்போது தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது; என் காதுக்கு எட்டிய செய்தியைத்தான் நான் சொல்கிறேன்.

யாருக்கு, எப்போது, என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பது மாண்புமிகு முதல்வர் விஜய்க்கு நன்றாகத் தெரியும். ஜெகதீஷ் பழனிசாமி, விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி ஆகியோருக்குப் பதவி கொடுத்திருக்கிறீர்கள்; உங்கள் நண்பர் ஸ்ரீநாத்தை அமைச்சராக்கியிருக்கிறீர்கள். இன்று உங்களுக்கு ஜாதகம் பார்த்த ரத்தன் டாட்டாவுக்கும் பதவி வழங்கியிருக்கிறீர்கள்; ‘ஜனநாயகம்’ படம் எடுத்தவருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியும் கொடுத்திருக்கிறீர்கள். இவ்வளவு பேருக்குப் பதவிகளை வாரி வழங்கும் விஜய், திரிஷாவுக்கு வழங்கமாட்டாரா என்ன? அவருடைய ரசிகர்கள் அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம். கான்ஃபிடன்ட்டா இருங்க, நல்லதே நடக்கும். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share