தமிழக காங். புது தலைவர் மாணிக்கம் தாகூர் சபதம்!

Published On:

| By Mathi

TNCC Manickam Tagore Vows to Strengthen Party

“தமிழகத்தில் தவெகவுடன் இணைந்து நல்லாட்சியை வழங்குவதும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் எங்களது முதன்மை இலக்குகள்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் (Manickam Tagore) தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தந்தி டிவி சேனலுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கார்கே, அன்னை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்பது மிக முக்கியமான மற்றும் பொறுப்புமிக்க பணியாகும்; பெரும் தலைவர்கள் அலங்கரித்த இந்த பொறுப்பை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று கருதுகிறேன்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இது மிக முக்கியமான தருணமாகும்; 59 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியில் பங்கு வகிக்கிறது.

தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு வகிப்பதால், எங்கள் மீதான பொறுப்பு கூடியுள்ளது. தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சியை வழங்குவதும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் எங்களது முதன்மை இலக்குகள்.

ADVERTISEMENT

ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதே தேசத்தின் தேவை; அவரை பிரதமராக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சியைத் தயார்படுத்துவதே எனது முக்கியப் பணியாகும்.

உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி தொடரும். தேர்தல் அறிவிப்பு வரும்போது கூட்டணி இடங்கள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கிடையிலான வலுவான உறவு, தமிழக மக்கள் மத்தியில் இந்த கூட்டணிக்கும் தலைவர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது கூட்டணி இடங்கள் தொடர்பான புகார்கள் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது; இது தொடக்க காலம்.

தற்போது கிடைத்துள்ள அமைச்சரவை வாய்ப்பைப் பயன்படுத்தி, 2 அமைச்சர்களின் துணையுடன் காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் மிக பலமான இயக்கமாக மாற்றுவதே எனது ஒரே இலட்சியம்.

காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடினோம்; தற்போது அந்த மரியாதை கிடைத்திருக்கிறது. இந்த மரியாதையுடன் மக்களுக்கான பணியில் கட்சி மிக கவனமாகச் செயல்படும். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share