“வாங்க எல்லோரும் அடிச்சு விளையாடுவோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மாணிக்கம் தாகூர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்த பொறுப்பு என்பது மிகவும் சிரமமான பொறுப்பு என்று எனக்குத் தெரியும். ஆனால், வரலாற்று முக்கியத்துவமாய் இந்த காலத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
59 ஆண்டுகளுக்குப் பின்னால நம்ம, இரண்டு அமைச்சர்கள் ஆட்சியில் பங்கு பெற்றிருக்கிறோம். நம்முடைய லட்சியமாக இருந்தது, ஆட்சியில் பங்கு என்பதுதான்.. அதை அடைந்துவிட்டோம்.
தவெக தலைவர் விஜய்யின் அன்போடும், அவருடைய தலைமையிலும் இந்த ஆட்சி நடைபெறுகிறது. இந்த இப்படி இருக்கும் சூழலி, காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய தலைவராக பொறுப்பேற்பது பெருமிதத்தைச் சேர்க்கிறது.
இப்பொழுது அடுத்த லட்சியம் என்பது, ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். அதற்கு 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற வேண்டும். அதுதான் நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும். அதற்கான ஒரு பலமான கூட்டணி நம்மிடம் இருக்கிறது. அந்த கூட்டணியுடன் மக்களிடம் செல்வதும் மிக மிக அவசியமானது.
ஜூன் 29-ந் தேதி மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பொறுப்பேற்கிறேன். கிரிஷ் சோடங்கர் செல்வப்பெருந்தகை முன்னிலையிலும், மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள்.
என்னை பொறுத்த மட்டிலும் மிகுந்த நம்பிக்கையோடு நம்முடைய துவக்கம் இருக்கும். அடிச்சு விளையாடுவோம், நம்பிக்கையோடு இருப்போம். காங்கிரஸ் கட்சியை பலமான இயக்கமாக்குவோம். எல்லாரும் சேர்ந்து ஒரு பலமான காங்கிரஸ் கட்சியை உருவாக்க உங்கள் அத்துனை பேருடைய ஆதரவும் தேவை.இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
