தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த முடிவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, கர்நாடக அரசியல் செல்வாக்குடன், பெங்களூருவை மையமாகக் கொண்டு தொழில் நடத்தி வரும் வெங்கட் கே. நாராயணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நியமனம் தமிழ்நாட்டில் பெரும் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி, கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் பற்றிய புரிதலோ அல்லது கலை, இலக்கியம், பண்பாட்டுத் துறைகளிலோ போதிய அறிவோ இல்லாத ஒருவர், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகச் செயல்படுவதைப் பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு அவரது நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகப் பொருத்தமான வேறொரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
