சட்டமன்றத்தில் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை – முதல்வரை விளாசிய உதயநிதி

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay Udhay

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, அதலபாதாளத்தில் விழுந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற, மத்திய மாவட்ட அயலக அணி தலைவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி, திருமணத்தை நடத்தி வைத்தார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அவர் பேசுகையில், “”தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு இன்று படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து கழகத்தின் சார்பில் சட்டமன்றத்தில் நாங்கள் விரிவாகப் பேசினோம். ஆனால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சரிடம் எந்தப் பதிலும் இல்லை. ஆளுங்கட்சியினர் சட்டசபையில் என்னென்ன கூத்து அடித்தார்கள் என்பதை நீங்கள் அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது; இது மக்கள் பிரச்சினைகளைப் பேசும் சட்டமன்றமா, இல்லை சினிமா தியேட்டரா அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டா என்று கேட்கும் அளவிற்குச் சட்டமன்றத்தின் தரத்தையே ஆளுங்கட்சியினர் குறைத்துவிட்டார்கள்.

எதற்கு எடுத்தாலும் திமுகதான் காரணம் என்கிற ரெடிமேட் பதிலை இன்றைய ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். நம்முடைய தலைவர் செய்த நல்ல பணிகளால் ஏதேனும் நன்மை நடந்தால், அதற்கு இந்த ஆட்சியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி உரிமை கொண்டாடுகிறார்கள். அதுவே ஏதேனும் பிரச்சினை என்றால், உடனே திமுகதான் காரணம் என்று பழிபோடுகிறார்கள்.

ADVERTISEMENT

நம் தலைவரைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ‘அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசுகிறார். நம் தலைவர் எப்போதுமே தேடிச் சென்று கண்டுபிடிக்கும் இடத்தில் இருந்ததே இல்லை. மிசா காலத்தில் போலீஸார் அவரைக் கைது செய்யக் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தபோது, ‘என் மகன் கழகப் பணிக்காக வெளியூர் போயிருக்கிறார், வந்ததும் நானே அனுப்பி வைக்கிறேன்’ என்று கலைஞர் கூறினார். சொன்னபடியே கழகப் பணி முடிந்து வந்தவுடன், தலைவரை உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

இன்று மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் திட்டம் எனப் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மூலமாக நம்முடைய தலைவர் தமிழகம் முழுவதும் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் தினமும் மக்களோடு மக்களாக, மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

ADVERTISEMENT

“சென்னையில் இருக்கும் முதலமைச்சரின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் தொகுதி மக்கள் இன்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘தெரியாமல் ஒருத்தரை ஜெயிக்க வைத்துவிட்டோமே, அவர் எங்கே போனார், யாராவது பார்த்தீர்களா?’ என்று தேடும் அவலநிலை அங்குள்ளது. இந்த ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழகமும் மின்சாரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகள் சிறப்பாக இருந்த சட்டம்-ஒழுங்கை இன்று மக்கள் தேடும் நிலை உருவாகியுள்ளது.

நம்மை கிண்டல் செய்வதாக நினைத்துக்கொண்டு முதலமைச்சர் தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொள்கிறார். அவர் இன்னும் சட்டமன்றத்தில் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை; அடுத்த கூட்டத்தொடரில் நிச்சயம் ஒரு டான்ஸ் பெர்ஃபார்மன்ஸும் இருக்கும் என்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு.” என்றார்.

தொண்டர்களுக்கு அழைப்பு

மேலும் பேசிய அவர் “தமிழகம் இன்று இவ்வளவு பேரிடரில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. இந்தப் பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டியது உடன்பிறப்புகளாகிய நம்முடைய பொறுப்பு. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. எனவே, கட்சியையும் தலைவரையும் மனதில் வைத்து, வருங்காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும்,” என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share