மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் தலைவர்களான அழகு சுந்தரம், சிவந்தியப்பன், டிஆர்ஆர் செங்குட்டுவன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மதிமுகவில் இருந்து ஒதுங்கி இருந்த அழகு சுந்தரம், சிவந்தியப்பன், டிஆர்ஆர் செங்குட்டுவன் ஆகியோர் இன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுடன் மதிமுகவின் முன்னாள் மாவட்ட நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிஆர்ஆர் செங்குட்டுவன், “ தமிழகத்தில் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடிய கட்சி திமுகதான்.. முன்னோடி தலைவர் ஸ்டாலின்தான்.. திமுக தேர்தலில் தோற்று போய் இருக்கலாம்.. ஆனால் மக்களுக்காக எப்போதும் நிற்கும் இயக்கம் திமுக” என்றார்.
பொடா அழகு சுந்தரம் கூறுகையில், “ வைகோ பேச்சை நம்பி ஏமாந்து போனோம். தன்னை மட்டுமே பாதுகாக்கக் கூடியவர் வைகோ. மதிமுகவில் அதிருப்தியாக இருக்கும் பலரும் இனி திமுகவில் இணைவார்கள்” என்றார்.
பொடா சிவந்தியப்பன் கூறுகையில், “ஈழப் பிரச்சனையில் வைகோ உண்மையானவராக இருக்கவில்லை. நமக்கு எதுக்கு தனிக்கட்சி? திமுகவுடன் இணைந்துவிடலாம் என்று சொன்னதற்காக என்னை கட்சியை விட்டு நீக்கினார். திமுக கூட்டணியில் இருந்தாலும் திமுகவை ஒருபோதும் காப்பாற்றுகிற எண்ணம் கொண்டவர் இல்லாதவர் வைகோ” என்றார்.
