சுயபுராணம், ரீல்ஸ் கண்டென்ட், ஸ்டிக்கர் அரசு.. ஆளுநர் உரை குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!

Published On:

| By Mathi

Udhayanidhi Stalin criticizes Governor's Address in Assembly

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் இன்று வாசித்த உரையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டசபை வளாகத்தில் இன்று ஜூன் 18-ந் தேதி செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: ஆட்சி அமைந்த பிறகு இன்றைக்கு முதன்முறையாக நம்முடைய ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், சட்டமன்றத்திற்கு வருகை தந்து, உரையை வாசித்திருக்கிறார். பொதுவாக ஆளுநர் உரை என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரை கிடையாது. இது அரசு தயாரித்து கொடுக்கக்கூடிய உரை. அரசினுடைய பாலிசி நோட் என்று சொல்லுவோம். ப்ளூ பிரின்ட். இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள், அதெல்லாம் எப்படி செயல்படுத்தப் போறாங்க, அதற்கான நிதி ஒதுக்கீடு இதெல்லாம் எப்படி செய்யப்போறாங்க அப்படிங்கறது, ஒரு முன்கூட்டியே சொல்லக்கூடிய ஒரு பாலிசி நோட்டாகத்தான் எப்பொழுதுமே ஆளுநர் உரை இருக்கும். ஆனா இன்னைக்கு பார்த்தீங்கன்னா ஆளுநர் உரை எடுத்து பார்த்தீங்கன்னா அது இன்னைக்கு இருக்கக்கூடிய ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கண்டென்ட் மெட்டீரியலாக அமைஞ்சிருக்கு.

ADVERTISEMENT

சுயபுராண உரை

முதலமைச்சர் தன்னைப்பற்றியும் தன்னுடைய கட்சியைப் பற்றியும் தம்பட்டம் அடித்துக்கொள்ளக்கூடிய சுயபுராணம் பாடிக் கொள்ளக்கூடிய ஒரு உரையாகத்தான் இன்றைக்கு இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கு.

பாஜகவுக்கும் தவெகவுக்கும் கனெக்‌ஷன்

கடந்த 5 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கும்போது, திராவிட மாடல் அரசு இருக்கும்போது எங்களுடைய முதலமைச்சர் எங்களுடைய அரசு தயாரித்து கொடுக்கக்கூடிய எந்த உரையையும் ஆளுநர் முழுசா படிச்சதே கிடையாது. அதுல பல திருத்தங்களை ஆளுநர் செய்வார். ஆனா, இந்த முறை பார்த்தீங்கன்னா ஆளுநர் அவர்கள், இந்த அரசு என்ன தயாரித்து கொடுத்திருக்கிறதோ அதை அப்படியே ஒரு வரி மாற்றாமல், ஒரு எழுத்து மாற்றாமல் அப்படியே வாசித்திருக்கிறார். இதிலிருந்தே இந்த அரசுக்கும் ஆளுங்கட்சிக்கும் பாஜகவுக்கும் ஒரு இணக்கமான ஒரு சூழ்நிலை ஒரு கனெக்ஷன் ஏற்பட்டு விட்டதோ அப்படிங்கிற எண்ணம் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கு.

ADVERTISEMENT

ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள ஒலிம்பிக் மையங்கள் திறன் பயிற்சி மையங்கள், 69 சதவீத சதவீத இட ஒதுக்கீடு, இருமொழி கொள்கை தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, நிலுவையில் இருக்கக்கூடிய கல்வி நிதி கேட்டு கோரிக்கை, வறுமை இல்லா தமிழ்நாடு, உயர்நீதிமன்றத்தில தமிழ் வழக்காடு, சென்னையில உச்சநீதிமன்ற கிளை, கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சிகள்.. இவை அனைத்தும் எங்களுடைய அரசினுடைய திட்டங்கள் சாதனைகள் கோரிக்கைகளைத்தான் மீண்டும் இவங்க படிச்சிருக்காங்க.

காழ்ப்புணர்ச்சி

கடந்த திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மேல ஸ்டிக்கர் ஒட்டிட்டு, இவங்க ஆட்சியினுடைய தோல்விக்கான பழியைத் தூக்கி மீண்டும் திராவிட மாடல் அரசின் மீது திமுக அரசின் மீதே போட்டிருக்காங்க. மிகுந்த காழ்ப்புணர்வோடு காழ்ப்புணர்ச்சியோடு இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கு.

ADVERTISEMENT

திமுக அரசின் நிர்வாகம் சரி இல்லை என்பதா?

திமுக அரசினுடைய நிர்வாகம் சரியில்லை அப்படின்னு ஆளுநர் உரையில் குறிப்பிட்டு காட்டிருக்கறாங்க இதை நாங்க வன்மையாக கண்டிக்கிறோம். அப்படி ஆட்சி நிர்வாகம் சரியில்லாம இருந்திருந்தா எப்படி இவங்க சுட்டிக்காட்டி இருக்கிற மாதிரி பல திட்டங்களை எங்களுடைய அரசு நிறைவேற்றி இருக்கும்?

முரண்பாடுகளின் மொத்த உருவம்

நம்முடைய முதலமைச்சர் விஜய், டெல்லிக்கு போய் நிதி ஆயோக் கூட்டத்துல நம்முடைய தமிழ்நாடு கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு திட்டங்களைச் செஞ்சிருக்கிறோம் எவ்வளவு சாதனைகளை செஞ்சிருக்கிறோம், இன்னைக்கு இந்தியாவிலேயே பொருளாதாரத்துல 2-வது இடத்தில இருக்கோம்னு பெருமை பேசியிருக்கார். அதெல்லாம் அவருடைய ஒரு மாத ஆட்சியின் சாதனைகளா? கிடையாது. எங்களுடைய தலைவர் எங்க முன்னாள் முதலமைச்சர் எங்களுடைய தலைவர் எங்களுடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளைத்தான் போய் டெல்லியில போய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வாசிச்சுட்டு வந்திருக்கிறார். அந்த வகையில, மொத்த முரண்பாடுகளுடைய உருவமாகத்தான் இன்றைக்கு இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கு.

ஸ்டிக்கர், காபி பேஸ்ட் அரசு

இந்த அரசு அமைந்து 38 நாட்கள் ஆகிவிட்டது. இவங்களுக்குன்னு சொல்றதுக்கு சாதனைகள் எதுவுமே இல்லை. இவங்க சொல்றது எல்லாமே எங்களுடைய திராவிட மாடல் அரசினுடைய திட்டங்கள் தான். அதனுடைய நீட்சி தான். இந்த அரசு வெறும் ஒரு காப்பி பேஸ்ட் அரசாக, ஸ்டிக்கர் அரசாக தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

ஏமாற்றம் தரும் அறிக்கை

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தேர்தல் வாக்குறுதியில பல்வேறு திட்டங்களை இவங்க சொல்லியிருக்காங்க. அந்த திட்டங்களை எல்லாம் எப்படி நிறைவேற்றப் போறாங்கன்னு ஒரு புளூ பிரிண்ட்டாக, ஒரு முன்னோட்டமாக ஒரு டிரைலராகத்தான் இன்னைக்கு இந்த உரை இருக்கும்னு நாங்கள் நினைச்சோம். மக்களும் அதை எதிர்பார்த்தாங்க. ஆனா இவங்களுடைய அறிவிப்புகளை எப்படி நிறைவேற்றப் போறாங்கன்னு எதிர்காலத்தில ஒவ்வொரு ஒவ்வொரு திட்டத்தையும் எந்த காலத்தில் நிறைவேற்றப் போறாங்கன்னு இந்த ஆளுநர் உரையில இடம்பெறணும்னு நாங்க எல்லாம் நினைச்சோம். மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது.

வாக்குறுதிகளில் இருந்து எஸ்கேப்

தந்த வாக்குறுதிகளில் இருந்து எப்படியெல்லாம் என்ன காரணம் எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆயிடலாம் அப்படிங்கறதுக்காக நேற்று முன்தினம், அதற்கு ஒரு முன்னோட்டமாக ஒரு வெள்ளை அறிக்கைனு சொல்லி ஒரு வெற்று அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டாங்க. அதைப்பற்றி நேற்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கார். கேள்விகளும் கேட்டிருக்கிறார். அதற்கு எந்த பதிலும் இதுவரைக்கும் இல்லை.


மோசமான சட்டம் ஒழுங்கு

இது எல்லாத்துக்கும் மேல சட்ட ஒழுங்கு இன்னைக்கு எந்த அளவுக்கு மோசமா இருக்குன்னு நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்க ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் நீங்களே ஒளிபரப்பிட்டு இருக்கீங்க.கடந்த ஒரு மாசத்துல மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள் 4 சாதிய ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கு. இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது எப்படியெல்லாம் டயலாக் பேசினார், வீர வசனம் பேசினார்ன்னு தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பார்த்தாங்க. நீங்க அத்தனை பேரும் பார்த்திருப்பீங்க. என்ன சொன்னாரு? பச்சை புள்ளைங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொண்ணுங்க, வீட்ல இருக்கிற பொண்ணுங்க, வேலைக்கு போற பொண்ணுங்க, இவங்க எல்லாருக்கும் நடக்கிற கொடுமையை சொல்ல முடியலையே சி.எம் சார் அப்படின்னு எங்க தலைவரைப் பார்த்து அப்ப இருக்கு இருக்கக்கூடிய முதலமைச்சரைப் பார்த்து இன்றைய முதலமைச்சர் அவர்கள் வீர வசனம் பேசினார். இன்னைக்கு அவங்களுடைய ஆட்சியில தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய இந்த கொடுமைகளெல்லாம் குற்றங்களெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு திரைப்படத்தில் வருமே, சார் கண்ணாடி பார்த்துப் பேசிட்டு இருக்கீங்க சார் அப்படிங்கிற நிலைமையை இன்றைக்கு முதலமைச்சர் ஏற்படுத்தி இருக்கிறார். அதுவும் வேலியே பயிரை மேய்ஞ்ச கதையாக இன்றைக்கு நடக்கக்கூடிய அனைத்து குற்றங்களிலும் யாரு ஈடுபடுறாங்கன்னு பார்த்தீங்கன்னா ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களுடைய கட்சியினர் அந்த குற்றங்களில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு நிலைநாட்ட , இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகுதுன்னு ஆளுநர் உரையில எந்தவிதமான ஒரு குறிப்பும் கிடையாது. நான் முதல்வன் திட்டம்

அதேபோல ஏற்கனவே நல்லா இருக்கக்கூடிய திட்டங்களைக் கெடுக்கிறத எதிர்கட்சிகள் நாங்க வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

நான் முதல்வன் திட்டத்தை முடக்கி இருக்காங்க. பேரை மாற்றி இருக்காங்க. அது எங்களுடைய தலைவர் பெயர்ல இருக்கக்கூடிய திட்டமும் கிடையாது, டாக்டர் கலைஞருடைய பெயர்ல இருக்கக்கூடிய ஒரு திட்டமும் கிடையாது. ஒரு நல்ல திட்டம். ஏன் நீக்கி இருக்காங்கன்னா நான் முதல்வன் அப்படின்னு சொன்னாலே முதல்வன் அப்படின்னு சொன்னாலே மக்களுக்கு எங்களுடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவருடைய பெயர்தான் மக்களுக்கு ஞாபகம் வரும் அப்படின்னு, அப்படிங்கிற ஒரு சிறிய குறுகிய எண்ணத்தோடு அந்த திட்டத்தோட பெயரையே நீக்கி இருக்காங்க. அந்த திட்டத்தோட அச்சீவ்மெண்ட்ஸ் அந்த வீடியோஸ் எல்லாம் சோசியல் மீடியாவில் இருந்து அக்கவுண்ட்டில் இருந்து நீக்கி இருக்காங்க.

விர்ச்சுவல் அப்யூசர்ஸ்

தமிழ்நாட்டுல இன்னைக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சனைகள், ஆனா எத்தனை பிரச்சனை நடந்துட்டு இருந்தாலும் இன்னைக்கு முதலமைச்சர் கோட் சூட் போட்டு இருக்காரு, இன்னைக்கு முதலமைச்சர் வேட்டி கட்டி இருக்காரு, இன்னைக்கு முதலமைச்சர் டிபன் பாக்ஸ்ல லஞ்ச் எடுத்து வந்து சாப்பிடுறாரு, கோட்டையிலேயே சாப்பிடுறாரு அப்படின்னு அவங்க கட்சியுடைய விர்ச்சுவல் அப்யூசர்ஸ் எல்லாம் இப்படிப்பட்ட கன்டென்ட் எல்லாம் ட்ரோல் பண்ணிட்டு இருக்காங்க… உண்மையான பிரச்சனைகளைப் பற்றி என்னைக்கு நம்முடைய முதலமைச்சர் வாயைத் திறப்பார் அப்படின்னு கேட்கிறதுக்குதான் இன்னைக்கு நாங்க எதிர்க்கட்சியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள், தயவுசெஞ்சு வாயைத் திறங்க சி.எம். சார், பதில் சொல்லுங்க சி.எம். சார் அப்படின்றதுக்காகத்தான் இன்னைக்கு இந்த பேட்ஜை நாங்க அணிந்து வந்து இருக்கிறோம்.

Panic Buying

பீரோ புள்ளிங்னு சொல்வாங்க. அது மாதிரி இன்னைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அதிமுகவுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எம்.எல்.ஏ புள்ளிங் பண்ணிட்டு இருக்கிறாரு. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை சொல்வாங்க ‘panic buying’ அப்படின்னு ஒரு வார்த்தை இருக்கு. திடீர்னு ஒரு பேரழிவு காலமோ இல்லை ஒரு கடை அடைப்போ அப்படி நடக்கும்போது மக்கள் எல்லாம் போய் அவசர அவசரமாக போய் வீட்டுக்கு தேவையான சாப்பாடு பொருட்கள் வண்டிக்கு தேவையான பெட்ரோல், டீசல் எல்லாம் போட்டு வச்சிப்பாங்க. அதுக்கு பேர் panic buyingனுவாங்க. ஒரு ஆர்ட்டிபிஷியல் டிமாண்ட் கிரியேட் பண்றது. அதுமாதிரி இன்னைக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் போயி ஆட்சி அமைந்த நாளிலிருந்து இன்னைக்கு வரைக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களா போய் தன்னுடைய ஆட்சியை காப்பாத்திக்க பேனிக் பையிங் பண்ணிட்டு இருக்கிறாரு. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share