தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் அக்ஷய பிரியாவின் திருமணம் இன்று (ஜூன் 18) மாலை நடைபெற்றது.
சென்னை பல்லாவரம் 200 அடி சாலையில் உள்ள புது வாழ்வு கொண்டாட்ட மையத்தில், இத்திருமண விழா நடந்து வருகிறது.
இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.
திராவிட கழக தலைவர் கி வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், திமுக எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, டி ஆர் பாலு எம்பி, முன்னாள் அமைச்சர்கள் நேரு, எ. வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் மணமக்களிடம் மாலைகள் கொடுத்து மாற்ற சொல்லி வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து செல்வப் பெருந்தகை, ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதையளித்தார்.
தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது செல்வப் பெருந்தகை உதயநிதி அருகில் சென்று நின்ற நிலையில், ஸ்டாலின் அவரை அழைத்து தன்னருகில் நிற்க வைத்தார்.
பின்னர் மேடையில் இருந்து திமுக தலைவரின் கையைப் பிடித்துக் கொண்டு உணவருந்த அழைத்துச் சென்றார் செல்வப் பெருந்தகை.
இவர்களைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளரும் எம்எல்ஏவும் ஆன பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
ஜோதிமணி எம் பி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் , அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் செல்வப் பெருந்தகையின் மகள் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
