அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் சூழலில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று (ஜூன் 18) அவரது அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த திடீர் சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக தலைமைக்கு எதிராக அக்கட்சியின் ஒரு தரப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் தனி அணியாகச் செயல்பட்டு வந்தனர்.
இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டு, அது நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில், ஏற்கனவே 4 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதனிடையே, அதிருப்தி அணியில் இருந்த எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தனர். ஆனால், சி.வி. சண்முகம் இதுவரை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்து அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் தற்போது 42 ஆகக் குறைந்துள்ளது.
சட்டப்பேரவையில் வேலுமணியின் செயல்பாடுகள்:
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 15 அதிமுக எம்.எல்.ஏக்கள் அவைக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், பேரவைக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செயல்பாடுகள் பேசுபொருளாகின. வழக்கமாக எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு வரும்போதும், செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் உடன் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, இன்று அவருடன் வரவில்லை. மேலும், அதிமுக எம்.எல்.ஏக்களுக்காக ஒதுக்கப்பட்ட கட்சி அறைக்கும் செல்வதை அவர் தவிர்த்தார்.
சி.வி.சண்முகம் அலுவலகத்தில் தீவிர ஆலோசனை:
சட்டமன்றக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், திருத்தணி ஹரி உள்ளிட்ட முக்கிய அதிமுக தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மூத்த நிர்வாகிகளில் பெரும்பாலானோர் ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களாகப் பதவி வகித்தவர்கள். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் பொறுப்புகள் இதுவரை மீண்டும் வழங்கப்படாததால், எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அவர்கள் கடுமையான அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் எடப்பாடியின் தலைமையை விமர்சிக்கும் வகையில் , “கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமகவால்தான் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது; அது பாமக போட்ட பிச்சை” என சி.வி.சண்முகம் கடுமையான வாதங்களை முன் வைத்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. அப்படியென்றால், அப்போது ஏன் விழுப்புரம் தொகுதியில் சி.வி. சண்முகம் தோல்வி அடைந்தார்?” என பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் மற்றும் சி.வி.சண்முகம் அலுவலகத்தில் நடந்துள்ள இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
