என் மகன் அரசியலுக்கு வர மாட்டார்- ஈபிஎஸ் ஓபன் டாக்!

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS Son

“என்னுடைய மகன் மிதுன் அதிமுகவில் ஒரு அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். கட்சியில் அவர் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை. மேலும், அவர் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ச. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ADVERTISEMENT

அப்போது அவர் கூறுகையில், “ஆளுநர் உரையில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்த்தோம். புதிய திட்டங்கள் ஏதேனும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. தமிழக அரசின் இந்த முதல் ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் இருந்த விஷயங்கள் தான் ஆளுநர் உரையிலும் இடம் பெற்றுள்ளன. இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்படாமல் ஆங்காங்கே மின்வெட்டு நடைபெறுகிறது. இதனால் மக்கள் பாதிப்படைகின்றனர்.

பலரின் தூக்கத்தை இந்த தவெக அரசு கலைத்திருக்கிறது. தேவையான மின்சாரத்தைக் கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும். ஆனால், அரசு வெவ்வேறு காரணங்களைச் சொல்ல முயல்கிறது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க எந்தவொரு புதிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 38 நாட்களில் மட்டும் 150 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமைகளும், 130 கொலைகளும் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்ற தவெக-வின் வாக்குறுதி என்னானது? பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் “எனது மகன் மிதுன் அரசியலுக்கு வருவது பற்றிப் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அது முற்றிலும் தவறானது. எனது மகன் மிதுன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார்; கட்சியில் அவர் எந்தவொரு பதவியிலும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன். இத்தகைய அவதூறு செய்திகளை இனிமேல் வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share