பாதிக்கப்பட்ட பெண்களின் குரல் கேட்கவே இல்லையா? முதல்வர் விஜய்க்கு செவித்திறன் கருவி பார்சல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவையில் முதலமைச்சருக்குச் செவித்திறன் கருவி அனுப்பி சமூக ஆர்வலர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி, இன்று (ஜூன் 17) கோவை தலைமை தபால் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து சென்னை பனையூரில் உள்ள தமிழக முதலமைச்சர் விஜய்யின் அலுவலக முகவரிக்கு செவித்திறன் கருவி ஒன்றை அவர் பார்சல் மூலம் அனுப்பி வைத்தார்.

ADVERTISEMENT

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

“தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. ஆனால், இவ்விவகாரங்களில் அரசு தரப்பில் இருந்து எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் கூட முதலமைச்சர் உரிய பதில்களை அளிப்பதில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது கூட மக்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்களின் வேதனைக் குரலும், தமிழக மக்களின் குமுறல்களும் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் இந்தச் செவித்திறன் கருவியை அவருக்கு பார்சல் அனுப்பியுள்ளேன். இதன் மூலமாவது அரசு விழித்துக்கொண்டு, சட்டம்-ஒழுங்கைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர் பெரியார் மணி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

ADVERTISEMENT

முதலமைச்சரின் பனையூர் அலுவலக முகவரிக்குத் தபால் மூலம் செவித்திறன் கருவி அனுப்பப்பட்ட இந்த நூதனப் போராட்டம், கோவையில் இன்று பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share