அதிமுக 4 எம்.எல்.ஏ-க்கள் விளக்கம்: அடுத்து என்ன? – சபாநாயகர் அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

JCD

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நால்வரும் உரிய காலத்திற்குள் விளக்கம் அளித்துள்ள நிலையில் ஆய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் இன்று (ஜூன் 17) தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக தரப்பில் இருந்த 25 எம்.எல்.ஏ-க்கள் கொறடா உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்களில் சத்தியபாமா, மரகதம் குமாரவேல், ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். இதுதொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்துத் தங்களது விளக்கத்தை அளித்தனர்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:

“1986ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சித் தாவல் காரணமாகத்) தகுதியின்மையாக்குதல் விதிகளின்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அளித்த மனு பரிசீலிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பந்தப்பட்ட மரகதம் குமாரவேல் (மதுராந்தகம் தொகுதி), எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி), சத்தியபாமா (தாராபுரம் தொகுதி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் தொகுதி) ஆகிய நான்கு பேருக்கும் விதியின் கீழ் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, அந்த நான்கு பேரும் தங்களது விளக்கத்தினை உரிய காலத்திற்குள் தற்போது சமர்ப்பித்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான முறையான ஆய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நான் அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

அவர்கள் கொடுத்துள்ள விளக்கம் போதுமானதாக இருக்கிறதா? கடிதம் மூலமாக விளக்கம் அளித்தார்களா அல்லது வாய்மொழியாகவா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர், “விளக்கத்தை இப்போதுதான் கொடுத்துள்ளார்கள். அதனை முழுமையாகப் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகே முறையான தீர்ப்பை வழங்க முடியும். இதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும். உரிய நேரத்தில், உரிய முறையில் சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்கப்படும். நாளை காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடுகிறது. இத்துடன் இந்தப் பேட்டி முடிந்தது” என்று கூறினார்.

செய்தியாளர்கள் தொடர்ந்து அவரிடம் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்ப முயன்றபோதும், அதற்குப் பதிலளிக்காமல் உடனடியாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share