4 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் – சபாநாயகருக்கு நோட்டீஸ்

Published On:

| By Pandeeswari Gurusamy

Speaker JCD Prabhakar

அதிமுகவைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவசரமாக ஏற்றுக்கொண்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்தது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் , திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்று பின்னர் அந்த எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

ADVERTISEMENT

கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்த தவெக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்தனர். இதையடுத்து அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகருக்கு மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ஆகிய நான்கு பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உடனடியாக தவெகவில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இந்த நான்கு ராஜினாமாக்களையும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதே நாளில் ஏற்றுக்கொண்டு அரசிதழில் அறிவித்தார். இதனால் திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகள் காலியாகின. இடைத்தேர்தல் நடத்த தயாரிப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போதே ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டது கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும் மக்களின் தீர்ப்பையும் மீறிய செயல் என்று கூறி, தேசிய மக்கள் கட்சி சார்பிலும் மற்றும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இன்று (ஜூன் 17 ) தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜராகி வாதாடினார்.

அதிமுக தரப்பு வாதம்

  • அதிமுக கொறடா தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மறுநாள், அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆளுநருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புகார் அளித்திருந்தார்.
  • மே 25 ஆம் தேதி மூன்று எம்.எல்.ஏ.க்களும், 26 ஆம் தேதி ஒரு எம்.எல்.ஏ.வும் என நான்கு எம்எல்ஏக்களும் பதவிகளை ராஜினாமா செய்ததுடன், அடுத்த சில நிமிடங்களில் தலைமைச் செயலகத்திலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை பார்த்து தவெகவில் இணைந்துள்ளனர்
  • ராஜினாமா கடிதங்கள் மதியம் 2.30 மணிக்கு கொடுக்கப்பட்டு, 3.30 மணிக்கே ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
  • தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்ததால், ராஜினாமாவை ஏற்பதற்கு முன்பு சபாநாயகர் உரிய விசாரணை நடத்தியிருக்க வேண்டும்.
  • குதிரை பேரம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், ராஜினாமாவின் பின்னணியை ஆராயாமல் சபாநாயகர் தன்னிச்சையாக ஏற்றுக்கொண்டது சரியா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அரசு தரப்பு வாதம்

மறுபுறம் தவெக அரசுத் தரப்பு மற்றும் சபாநாயகர் தரப்புக்காக ஆஜராகி வாதிட்ட தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “சபாநாயகரின் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், சட்டமன்ற விதிகளின்படிதான் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் வாதிட்டார்.

சபாநாயகருக்கு நோட்டீஸ்

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறினர். சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் மற்றும் ராஜினாமா செய்த 4 உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதற்கு நீதிபதிகள், “நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம். அவர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கட்டும்” என்று தெரிவித்து உத்தரவிட்டனர்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share