அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்- சபாநாயகர் ஏற்பு- 6 தொகுதிகள் காலி!

Published On:

| By Mathi

AIADMK MLA Vijayabaskar Resigned

அதிமுகவின் (AIADMK) முன்னாள் அமைச்சரான சி. விஜயபாஸ்கர் (Vijayabaskar), தமது விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை இன்று ஜூன் 16-ந் தேதி ராஜினாமா செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து சி.விஜயபாஸ்கர் தமது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதனையடுத்து விஜயபாஸ்கரின் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் எஸ்பி வேலுமணி அணியில் 25 எம்.எல்.ஏ.க்கள் இணைந்திருந்த போது அந்த அணியின் கொறடாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயபாஸ்கர். பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர், சிவி சண்முகம் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தனர். இதனை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதால் 21 எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கையை சபாநாயகர் கைவிடுவதாக அறிவித்தா.

அதே நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்த 4 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மேற்கொண்டுள்ளார். இதற்காக 4 பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநயார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ADVERTISEMENT

சி.விஜயபாஸ்கர் (Vijayabaskar) ராஜினாமா

இந்நிலையில், விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர் இன்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார். இக்கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

ராஜினாமாவுக்கு முன் போட்ட ட்வீட்

தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக எக்ஸ் பக்கத்தில், “தலைமை என்பது
அதிகாரமோ, ஆணவமோ அல்ல…

ADVERTISEMENT

‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’

உழைக்கும் தொண்டர்களின் மனதை
வெல்ல முடியாத தலைமை,
மக்களின் மனதை எப்படி வெல்லும்?

ADVERTISEMENT

உணர்வுகளை மதிக்காத இடத்தில்
உண்மையான பயணம் சாத்தியமா?” என்று சி. விஜயபாஸ்கர் பதிவிட்டிருந்தார்.

அதிமுகவின் (AIADMK) பலம் குறைந்தது

சட்டசபை தேர்தலில் அதிமுக மொத்தம் 47 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பலம் 42 ஆக குறைந்துள்ளது.

6 சட்டசபை தொகுதிகள் காலி

தமிழகத்தில் ஏற்கனவே முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால் திருச்சி கிழக்கு தொகுதியும் அதிமுகவின் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளும் காலியாக உள்ளன. தற்போது சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் விராலிமலை தொகுதியும் காலியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

அதிமுகவினர் கொண்டாட்டம்

இதனிடையே விராலிமலை தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை சி. விஜபாஸ்கர் ராஜினாமா செய்ததை அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அப்போது, ‘துரோகி’ விஜயபாஸ்கர் என அதிமுகவினர் முழக்கமிட்டனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share