தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, நேற்று (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முதல்வர் விஜய் – சங்கீதா தம்பதி 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரிந்து வாழும் நிலையில், இந்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த விரிவான வாதங்கள், புகார்கள் மற்றும் அதற்கு நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவுகள் தனித்தனியாக வருமாறு:
சங்கீதா முன்வைத்த புகார்கள்
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
- விவாகரத்து மனுவில், விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருப்பதாகக் குற்றம் சாட்டினர்.
- 2021-லேயே இந்த விவகாரம் தனக்குத் தெரிந்தாலும், உறவை முடித்துக் கொள்வதாக விஜய் அளித்த வாக்குறுதியை மீறி, அந்த நடிகையுடன் தொடர்ந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
- அந்த நடிகை விஜயுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததால், தனக்கும் தங்கள் குழந்தைகளான ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகியோருக்கும் கடுமையான மனரீதியான துன்புறுத்தலும், பொதுவெளியில் அவமானமும் ஏற்பட்டதாக சங்கீதா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
- விஜய் தன்னைத் தனிமைப்படுத்தி, வீட்டு வசதிகளைக் குறைத்து, பணக் கட்டுப்பாடுகளை விதித்து உளவியல் ரீதியாக கொடுமை செய்ததாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
- இதன் அடிப்படையில் தங்களுக்கு உரிய நிரந்தர ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்றும், நீலாங்கரையில் உள்ள குடும்ப வீட்டில் தான் தொடர்ந்து வசிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் விவாகரத்து மனுவில் கோரினார்.
- பாதுகாப்பு மற்றும் விஐபி அந்தஸ்து காரணங்களால் வழக்கை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த தங்களுக்குச் சம்மதம் என்றும் தெரிவித்திருந்தார்.
விஜய் தரப்பு விளக்கங்கள்:
- கடந்த ஏப்ரல் 20 அன்று நடைபெற்ற முதல்கட்ட விசாரணையின் போது, சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் மற்றும் அரசியல் பணிகள் காரணமாக ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரினர்.
- இதையடுத்து ஜூன் 15ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால் பாதுகாப்பு, ரசிகர்கள் கூட்டம் மற்றும் நிர்வாக நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
- எனவே, இந்த வழக்கை நீதிமன்றத்திற்கு நேரில் வராமல் காணொளி காட்சி மூலமாகவே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
- அதேசமயம் முந்தைய நீதிபதியிடம் வக்காலத்து படிவத்தை ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாகவும், வீடியோ கான்பரன்ஸ் முறைக்கு முந்தைய நீதிபதி அனுமதி வழங்கியிருந்ததாகவும் விஜய் தரப்பில் கூறப்பட்டது.
- அத்துடன் முதலமைச்சருக்கு தற்போது அரசின் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், அடுத்த கட்ட விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா தரப்பு உத்தரவுகள்
- இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுஜாதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த நீங்கள் மனு தான் போட்டிருக்கிறீர்கள், ஆனால் அதற்கு நீதிமன்றம் தற்போதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை.
- முந்தைய நீதிபதியிடம் ‘அப்பியரன்ஸ்’ கோரி பெட்டிஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
- வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்த அவர்களும் அனுமதி அளிக்கவில்லை, நானும் கொடுக்கவில்லை.
- வக்காலத்து தாக்கல் செய்திருந்தால் அதற்கான பிரிண்ட் அவுட்டை ஏன் கோப்பில் சமர்ப்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
- மேலும் அடுத்த விசாரணையின்போது அதனைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
- மனுவில் முதலமைச்சர் விஜயின் வீட்டு முகவரி மட்டுமே உள்ளது, இரு தரப்பினரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
- சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி, விவாகரத்து கோரும் தம்பதியை முதலில் சமரச மையத்திற்கு அனுப்பிப் பேச வைக்க வேண்டும். அதன் பின்னரே எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
- அடுத்த கட்ட விசாரணையின்போது வக்காலத்து பிரிண்ட் அவுட் மற்றும் இரு தரப்பினரின் மின்னஞ்சல் ஐடியை சமர்ப்பித்த பின்னரே, வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கை நடத்துவதா அல்லது நேரில் வரவழைப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க முடியும் என்றார்.
- விஜய் தரப்பின் பணிச்சுமை கோரிக்கையை ஏற்று, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
