தமிழக முதல்வர் விஜய் (CM Vijay) மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவகாரத்து வழக்கு (Divorce Case) விசாரணை ஆகஸ்ட் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய் மனைவி சங்கீதா, கடந்த டிசம்பர் 2025-ல் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “1999-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது; 2021-ஆம் ஆண்டு முதல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக” குறிப்பிட்டிருந்தார்.
மேலும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து வசிக்க தமக்கு உரிமை வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் சங்கீதா இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ”தேர்தல் பிரசாரம் மற்றும் அரசியல் பணிகளின் காரணமாக நேரில் ஆஜராக முடியவில்லை” என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணை ஜூன் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ந் தேதி அறிவிக்கப்பட்டது. விஜய்யின் தவெக அதிக இடங்களை வென்ற நிலையில் சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவுடன் விஜய் முதல்வரானார்.
இந்த நிலையில் முதல்வர் விஜய்- சங்கீதா வழக்கு விசாரணை இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரி இருந்தார் ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
