தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் (TMC) இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜா (Yuvaraja) திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமாகா தலைவர் ஜிகே வாசனுக்கு யுவராஜா எழுதியுள்ள கடிதம்: கடந்த 25 ஆண்டுகளாக நான் என் உழைப்பையும், நேரத்தையும் அர்ப்பணித்து பயணித்த அரசியலிலிருந்து விலகுவதற்கான முடிவை இன்று எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனது அரசியல் வாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் ஆரம்ப கட்டத்திலிருந்தே எனக்கு ஒரு நல்ல தலைவராகவும், வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்தவர் நீங்கள். எனது அனைத்து இன்ப, துன்ப நிகழ்வுகளிலும் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தது உங்கள் அன்பும் ஆதரவும் தான்.

ஒரு சாதாரண தொண்டனாக இருந்த என்னை மக்கள் மத்தியில் “யுவராஜா” என்று அடையாளப்படுத்திய பெருமை முழுவதும் உங்களையே சாரும். இன்று அரசியல் களத்தில் நான் அறியப்படுகிறேன் என்றால், அதற்கான அடித்தளத்தை அமைத்தது உங்கள் நம்பிக்கையும், ஊக்கமும், வழிகாட்டுதமும்தான். நீங்கள் எனக்கு அளித்த அந்த அடையாளம் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.
தொடர்ந்து இரண்டு முறை தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு அளித்ததற்கும், தமிழ் மாநில காங்கிரஸில் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்று செயல்பட வாய்ப்பு வழங்கியதற்கும், அதன் பிறகு மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி கட்சியின் வளர்ச்சிக்காக பங்களிக்க வாய்ப்பளித்ததற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மக்கள் சேவையில் என்னை ஈடுபடுத்தும் வகையில் சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று முறை போட்டியிடும் வாய்ப்பை வழங்கி என் மீது வைத்த நம்பிக்கை வைத்த உங்களுக்கும், என்னை ஆதரித்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 25 ஆண்டுகளில் கட்சிக்காக நான் ஆற்றிய பணிகள், மேற்கொண்ட போராட்டங்கள், சந்தித்த வெற்றிகளும் தோல்விகளும் அனைத்தும் என் வாழ்க்கையின் பொக்கிஷமான நினைவுகளாகவே இருக்கும். அந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கும், நம்பிக்கை வைத்ததற்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் அமைப்பை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல. குறிப்பாக என் இளமைப் பருவம் முதல் என் வாழ்வின் முக்கியமான காலகட்டங்களை இணைத்துக் கொண்ட கட்சியிலிருந்து விலகுவது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கட்சியிலிருந்து விலகினாலும்; ஆனால் நீங்கள் என் மீது வைத்த அன்பையும் உங்களிடத்தில் நான் கற்றுக்கொண்ட நேர்மையும், எளிமையும் ஒருபோதும் விட்டு விலகாது. அவை என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் பயணிக்கும்.
என் வாழ்வில் அழியாத தடம் பதித்த உங்களுக்கும், என்னுடன் பயணித்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கட்சியை விட்டு விலகுகிறேன்; ஆனால் நன்றியையும், மரியாதையையும், விசுவாசத்தையும் அல்ல.” இவ்வாறு யுவராஜா தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சியில் இணைவது? யுவராஜா தீவிர ஆலோசனை
இது தொடர்பாக நாம் யுவராஜா தரப்பில் விசாரித்த போது, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமாகா விலகுவதாக நேற்று ஜிகே வாசன் அறிவித்தார். இந்நிலையில் இன்று யுவராஜா தமாகாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே தமாகாவில் இருந்து விலகுவது என்கிற முடிவில்தான் யுவராஜா இருந்தார். தமாகாவில் இருந்து விலகி திமுகவில் இணைவதா? ஆளும் தவெகவில் இணைவதா? என்பது குறித்தும் நெருங்கிய சகாக்களிடம் கருத்துகளை யுவராஜா கேட்டு வந்தார்” என்கின்றனர்.
