பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமாகா விலகல்- ஜிகே வாசன் அறிவிப்பு

Published On:

| By Mathi

G.K. Vasan Announces TMC Quit from BJP-led NDA

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா TMC) “நட்புடன்” விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என்றும் ஜிகே வாசன் (GK Vasan) தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ஜூன் 14-ந் தேதி ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமாகாவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமாகாவை பலப்படுத்த வேண்டும், கூட்டணி அரசியல், இயக்க வளர்ச்சி அரசியல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தோம்.

ADVERTISEMENT

தமாகாவின் நோக்கம் நிறைவேறவில்லை

தமாகா தொடங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்களது நோக்கம் இன்னமும் நிறைவேறவில்லை. சட்டசபை, நாடாளுமன்றத்துக்குள் தமாகாவினர் செல்ல வேண்டும்; உள்ளாட்சியில் அதிக பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என நினைக்கிறோம்.

சட்டசபைக்குள் நுழைய முடியலை

2016, 2019, 2024, 2026 தேர்தல்களில் கூட்டணி கட்சிகளில் இடம் பெற்றது தமாகா. ஆனால் எங்களால் இலக்கை அடைய முடியவில்லை. கடந்த 3,4 தேர்தல்களில் கூட்டணியும் எதிர்பார்த்த வெற்றியை தமிழகத்தில் பெற முடியவில்லை. தமாகாவால் சட்டசபைக்குள் நுழைய முடியவில்லை.

ADVERTISEMENT

ஆகையால், தமாகாவை வலுப்படுத்த வேண்டும்; வளர்க்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். கூட்டணி பொறுப்பில் இருப்பதால் தமாகாவினர் பணி குறைவாக கருதுகின்றனர்.

தேர்தல் காலங்களில் கூட்டணி அவசியம் என்பதில் தமாகாவுக்கு மாற்று கருத்து இல்லை. 2016-ல் 3-வது அணியில் தமாகா இருந்தது. 2019-ல் அதிமுகவுடன் கூட்டணி. அதில் பாஜக இருந்தது. 2024-ல் மீண்டும் மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா இடம் பெற்றது. இந்த தேர்தலில் எங்களால் வெல்ல முடியவில்லை.

ADVERTISEMENT

தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஆட்சி மலர்ந்துவிட்டது.

தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி; தேர்தலுக்கு பின்பு ஒரு கூட்டணி என பல அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தற்போது ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு; கூட்டணியில் இருந்து இன்னொரு கூட்டணிக்கு என மனமாற்றங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. இதுதான் இன்றைய தமிழக அரசியல்.

இந்த சூழலில் தமாகாவை பலப்படுத்த வேண்டும்; உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ரீதியாக வெற்றி பெறும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதை ஆலோசிக்க இன்றைய செயற்குழு கூட்டம் நடந்தது.

கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை

தமாகாவைப் பொறுத்தவரையில் எந்த கூட்டணியோடும் எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது; சண்டை- சச்சரவுகள் கிடையாது. எந்த கூட்டணியாக இருந்தாலும் பல சவால்களை அறிந்திருந்தோம். கேட்ட இடங்கள், கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனாலும் கூட்டணி தர்மத்தை மதித்து நடந்த கட்சி தமாகாதான். கூட்டணி வெற்றி பெற பொறுப்புணர்ச்சியுடன் தமாகா பணியாற்றியது.

தற்போது பாஜக , அதிமுக அதனைச் சார்ந்த கூட்டணி கட்சிகளுடன் எந்த சண்டையும் கிடையாது; நட்பு கட்சியாகவே அவர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மறுபக்கம், தேர்தல் முடிவுகள் குறித்து இன்றைய கூட்டத்தில் முக்கியமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. 600 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 450 பேர் கருத்துகளை நேரடியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்துள்ளனர்.

அனைவரது கருத்தும், “உள்ளாட்சித் தேர்தல் வரும் வரை தமிழகத்தில் தனித்தன்மையுடன் தமிழ் மாநில காங்கிரஸ் செயல்பட வேண்டும்” என்பதுதான். தமாகாவுக்கு அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும். கூட்டணி அரசியலால் தமாகாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு குறைகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பதில் மாற்று கருத்து இல்லை.

தேர்தல் இல்லாத நேரத்தில் தங்களுடைய இயக்க பணிகளை பொறுப்பாளர்கள் செய்ய வேண்டிய நிலைமை உருவாக வேண்டும். அதற்கு தனித்தன்மையுடன் தமாகா செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து (NDA) விலகல்

இதனடிப்படையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.. மாநிலத்தில் அதிமுக மற்றும் ஒத்த கருத்துள்ள கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நட்பு கட்சியாகவே விலகுகிறது.

வரும் காலங்களில் தமாகா, தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள நகரம் முதல் கிராமம் வரை மீண்டும் எங்களது பணியை துவக்குவோம். 12 ஆண்டுகாலம் கூட்டணி அரசியலில் இருந்ததால் எங்களது வலு குறைந்ததாக கருதுகிறோம்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவெடுப்போம். அதுவரை எங்கள் கட்சியை வலுப்படுத்துவோம் என்ற முடிவை இன்றைய செயற்குழு எடுத்துள்ளது. இவ்வாறு ஜிகே வாசன் கூறினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share