அதிமுக (AIADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அக்கட்சியின் மூத்த தலைவர் சி.வி. சண்முகத்துக்கு (C.V. Shanmugam) அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி (Pasupathi) பதிலடி கொடுத்துள்ளார்.
திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதில் தரும் வகையில் விழுப்புரத்தில் இன்று ஜூன் 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பசுபதி கூறியதாவது: சிவி சண்முகம்தான், எந்த கட்சியுடனும் கூட்டணி எதுவுமே இல்லை என்று அறிவித்தார். தவெகவுக்கு ஆதரவு அளிக்கப்போகிறோம் என்று சிவி சண்முகம்தான் சொன்னார். தன்னுடைய ஆதரவாளர்களிடம் அமைச்சராகப் போவதாகவும், அவர்களுக்குப் பதவி வாங்கித் தருவதாகவும் அவர் கூறினார்.
ஆனால் ”குதிரை பேரம்” நடப்பதாக விமர்சனம் வந்தது. அதனால் தவெகவின் கூட்டணியில் இருந்த கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் சிவி சண்முகத்துக்கு அமைச்சர் பதவி வழங்க முடியாது என்று தவெக சொல்லிவிட்டது. தவெகவில் சேர்ந்து சிவி சண்முகம் அமைச்சராகி இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுகிற நிலைதான்.
இதை தெரிந்து கொண்டுதான் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவும் சிவி சண்முகம் முடிவெடுத்தார். இதை தமது ஆதரவாளர்களிடமும் தெரிவித்தார். தலைமை செயலகத்தில் பலரும் சிவி சண்முகத்துக்காக காத்திருந்தார்கள். ஆனால் திடீரென இவர்தான் போகவில்லை.
இதற்கு பிறகு தனது தொகுதி நிலவரம் எப்படி இருக்கிறது? தாம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் வெற்றி வாய்ப்பு கிடைக்குமா? என தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என தொகுதிக்குள் சென்றார். ஆனால் 400 ஓட்டு போட்ட கிராமங்களில் 4 பேர் கூட சிவி சண்முகம் கூட்டத்துக்கு வரவில்லை. கூட்டணி இல்லை என்று அறிவித்ததால் பாமகவினர் சிவி சண்முகத்தை புறக்கணித்துவிட்டனர்.
தற்போது தவெகவில் யாருமே சிவி சண்முகத்தை மதிக்கவில்லை. அதனால் நான் மீண்டும் அதிமுகவுக்கே வருகிறேன்.. பொறுப்புகளை எனக்கு கொடுங்க என்கிறார்.. இது எந்த வகையில் நியாயம்?
தற்போது அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறுகளை பரப்பி வருகிறார். தவெகவின் கைக்கூலியான சிவி சண்முகத்தின் கனவு ஒரு போதும் பலிக்காது. இவ்வாறு பசுபதி கூறினார்.
சிவி சண்முகத்துக்கு பதில் பசுபதி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்ட போது அனைவரது கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டன. சிவி சண்முகத்திடம் இருந்தும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான் பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
