அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ. (CV Shanmugam) கடுமையாக விமர்சித்துள்ளார்.
திண்டிவனத்தில் இன்று ஜூன் 14-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஒன்றரை மாதம் காலம் ஆகிறது. இந்த தேர்தலிலே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்திருக்கிறது. தோல்வியை அடைந்தது என்று சொல்வதை விட, முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எடப்பாடி தலைமையில் தொடர் தோல்வி
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்று, அதன் பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், பிறகு எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியேற்ற பிறகும், இன்று வரை தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்குத் தேர்தல், கழகத்தினுடைய வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. மக்களுடைய நன்மதிப்பை இழந்து கொண்டே வருகிறது.

சர்வாதிகார போக்கின் பிடியில் அதிமுக
அன்றைக்கு நீதி கேட்டு தொடங்கப்பட்ட இயக்கம் இது.. திமுகவில் கேள்வி கேட்டதற்காகவே திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் எம்ஜிஆர். இன்றைக்கு அந்த இயக்கத்தினுடைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கேள்வி கேட்டதற்காக தொடங்கப்பட்ட இயக்கம், இன்றைக்கு அந்த இயக்கத்திலே யாரும் கேள்வி கேட்கக்கூடாது, பேசக்கூடாது, கருத்து சொல்லக்கூடாது என்று ஒரு சர்வாதிகாரப் போக்கிலே இந்த இயக்கம் இருக்கிறது.
யாருடைய ஆலோசனையோ, யாருடைய கருத்தையும் நான் கேட்க மாட்டேன், ஏற்றுக்கொள்ள மாட்டேன், என் குடும்பத்தாருடைய கருத்தை மட்டும் கேட்பேன், பணம் யார் கொடுப்பார்களோ, பணம் யார் பெற்றுத் தருவார்களோ, அவருடைய கருத்தை மட்டும்தான் கேட்பேன் என்று எடப்பாடி பழனிசாமி செயல்பட்ட காரணத்தால், இன்றைக்கு மிகப்பெரிய ஒரு இழப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதிமுக தலைமைக்கழகத்திலிருந்து கீழே இருக்கிற அடிப்படைத் தொண்டன் வரை, ஏன் தோல்வி அடைந்தோம், எதற்காக தோல்வி அடைந்தோம், என்ன காரணம் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.. ஒருவரைத் தவிர.. அந்த ஒருவர்தான் இந்த இயக்கத்தை வழிநடத்தக் கூடிய அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

தவறான வழியில் செல்கிறது அதிமுக
ஒரு இயக்கத்திற்கு நம்பிக்கை கொடுக்கக்கூடியவர் யார்? அந்த கட்சியினுடைய தலைமை. அந்த தலைமைதான் அந்த இயக்கத்தை வழிநடத்த வேண்டும். தொண்டர்களுக்கும், மக்கள் மத்தியிலும் நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக இன்றைக்கு இந்த இயக்கம் தவறான வழியிலே செல்கிறது.
ரத்தத்தில் ஊறிய திமுக எதிர்ப்பு
அதிமுக, என்ன நோக்கத்திற்காக, என்ன சிந்தனைக்காக, எந்த எண்ணத்திற்காக தொடங்கப்பட்டது? திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார் எம்ஜிஆர். திராவிட முன்னேற்றக் கழகம், அதன் தலைவர் தீய சக்தி ஒழிக்கப்பட வேண்டும் என்று தொடங்கப்பட்ட இயக்கம் தான் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஒவ்வொரு தொண்டனுடைய ரத்தத்திலும் திமுகவினுடைய எதிர்ப்பு ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட இயக்கம் இது.
திமுகவுடன் இணைந்து முதல்வராக ஆசை
திமுகவோடு இணைந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்த போதே, அண்ணா திமுக.. தன்னுடைய.. அந்த வார்த்தையை சொல்வதற்கு கூட கூச்சமாக அச்சமாக இருக்கிறது. இன்றைக்கு தன்னுடைய சுய நிலையை இழந்து இருக்கிறது.
சீட்டு கட்டு போல சரிந்து கொண்டிருக்கும் அதிமுக
அண்ணா திமுகவிலிருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் கொத்துக்கொத்தாக விலகி கொண்டிருக்கிறார்கள். சீட்டுக்கட்டு போல் இன்றைக்கு அண்ணா திமுக சரிந்து கொண்டிருக்கிறது.
இந்த கட்சிக்காக உழைத்தவர்கள் 50 ஆண்டு காலம், பாடுபட்டார்கள். தங்களுடைய உழைப்பு, ரத்தம், பணம் குடும்பத்தை பார்க்காமல் செலவு செய்தவர்கள் கோடிக்கணக்கான பேர்… இன்றைக்கு அப்படி உழைத்தவர்கள் இந்த இயக்கத்தை விட்டு செல்கிறார்கள் என்றால், அவர்களுடைய மன வேதனை என்ன?
யார் துரோகி?
அவர்களைப் பார்த்து சாதாரணமாக சொல்லுகிறார் துரோகி என்று. எம்ஜிஆர்-ஐ கூடத்தான் துரோகி என்று சொன்னார்கள். எம்ஜிஆர் துரோகியா? திமுக விட்டு நீக்கும்போது என்ன சொன்னார்கள்? எம்ஜிஆர் ஒரு துரோகி என்றார்கள். அப்ப எம்ஜிஆர் துரோகியா? அந்த இயக்கத்திற்காக திமுகவுக்காக, காக எவ்வளவு பாடுபட்டார்? திமுக வெற்றி பெறுவதற்கு காரணமே எம்ஜிஆர்! அண்ணா முதலமைச்சர் ஆவதற்கு காரணமே எம்ஜிஆர்! கலைஞர் முதலமைச்சர் ஆவதற்கு காரணமே எம்ஜிஆர்! அப்படிப்பட்ட எம்ஜிஆர்-ஐயே துரோகி என்று சொன்னவர்கள். அதானால் எம்ஜிஆர் துரோகி ஆகிடுவாரா?
தவறை உணராத எடப்பாடி பழனிசாமி ((Edappadi Palaniswami)
இன்னும் தங்களுடைய தவறை உணராமல், தங்களுடைய செயல்பாட்டினுடைய குறைகளை உணராமல், மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை புறக்கணித்த மக்கள்
அதிமுகவுக்கு தொடர் தோல்வி, தொடர் தோல்வி. இது தோல்வி அல்ல. அண்ணா திமுக மக்கள் மத்தியிலே புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி என்று சொல்லுகிறார் எடப்பாடி பழனிசாமி.
பாமக போட்ட பிச்சை
எப்படி வெற்றி? 47 தொகுதிகளில் 31 தொகுதி, பாட்டாளி மக்கள் கட்சி போட்ட பிச்சை. பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி இல்லையென்றால், இங்கே வட மாவட்டத்திலே அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, ஏன் சேலத்திலே இவரே தப்பித் தவறி தான் தட்டுத்தடுமாறி தான் ஜெயிச்சிருப்பார். அண்ணா திமுக 7 அல்லது 8 தொகுதிகளில் மட்டும்தான் ஜெயிச்சிருக்கும், இதான் நிதர்சனமான உண்மை.
இன்னமும் மக்கள் நம்பிக்கை இருக்கிறது..
நாம் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி இருக்கிற தொண்டர்களை காப்பாற்ற முடியும். இந்த இயக்கத்தை இன்னும் நம்பி இருக்கிற மக்கள், அண்ணா திமுக இருக்க வேண்டும்.. மக்களுக்காக உழைக்க வேண்டும். சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக தலைமை மீது குற்றச்சாட்டுகள்
இன்றைக்கு என்ன நடந்து கொண்டு இருக்கிறது? தினந்தோறும் அண்ணா திமுகவின் நிர்வாகிகள், இந்த கட்சிக்காக உழைத்தவர்கள் இந்த இயக்கத்தை விட்டு போய்க்கொண்டு இருக்கிறார்கள். காரணம் என்ன? என்ன காரணம்? என்ன குறை சொல்லுகிறார்கள்? தலைமை மீது. தலைமை அனுசரித்து போகவில்லை. என்றுதான் சொல்கின்றனர்.
அதிமுக தலைமை தன் தவறை திருத்திக்கொள்ள மறுக்கிறது. எடப்பாடி பழனிசாமி, யாருடைய கருத்தையும் கேட்க தயாராக இல்லை. தன்னைச் சுற்றி ஒரு வேலியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார். அதிலே ஒரு நான்கைந்து ஜால்ராக்களை வைத்துக்கொண்டு இருக்கிறார். அவர் சொல்வதற்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போடுகிறவர்களை வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த இயக்கம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது, சாதாரண தொண்டன் முதலமைச்சராக வரலாம், அமைச்சராக வரலாம், சட்டமன்ற உறுப்பினராக வரலாம், நாடாளுமன்ற உறுப்பினராக வரலாம். இதுதான் அண்ணா திமுகவுடைய சிறப்பு அம்சம். அதனால்தான் இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களை இணைத்துக் கொண்டார்கள். லட்சக்கணக்கான இளைஞர்களும் பலபேர் இந்த இயக்கத்தில இணைத்துக் கொண்டு, உழைத்து வந்திருக்கிறார்கள். சாதாரண தொண்டன், சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கிறார்கள்.
அதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்கள் கட்சி
அண்ணா திமுக என்பது ஒரு குடும்ப கட்சி அல்ல. இது தொண்டர்கள் கட்சி. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை? அண்ணா திமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்று கொண்டு இருக்கிறது. குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல, இன்றைக்கு சோசியல் மீடியாவில் ஒரு செய்திகளை பரவ விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று அவர் கூட்டம் நடத்தியதாகவும் சொல்கிறார்கள்.
மகனை அரசியலுக்கு கொண்டு வாங்க..
‘உங்கள் மகனை அரசியலுக்கு கொண்டு வருவோம்’னு பேசுறீங்க.. கொண்டு வாங்க, அதுல எந்த ஆட்சேபனையுமே இல்லை, அதுக்கு எதுக்கு இந்த டிராமா? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். உங்கள் பிள்ளை வரக்கூடாதுன்னு நான் சொல்லவில்லை, அவருக்கும் முழு உரிமை உண்டு. வரட்டும். நேரடியாக வரட்டும். அரசியலுக்கு வரட்டும், பணியாற்றட்டும், சேவை செய்யட்டும், வளரட்டும். அதில் யாரும் எந்த மாற்றுக்கருத்தும் படலை. ஆனால், இப்படிப்பட்ட நாடகம் ஏன் ? டிராமாவை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்?

தோல்விக்கு காரணம்.. பதவி வெறி..
இந்த இயக்கம், இன்றைக்கு படுதோல்விக்கு காரணம் பணம், பதவி வெறி. ஆகவே, இதையெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்போதும் சொல்லுகிறோம், நீங்கள் தான் பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிசாமி). குறைகள் இருக்கலாம், எங்கள் பக்கத்திலும் குறைகள் இருக்கலாம், குறை, நிறை இல்லாத மனிதர்களே கிடையாது. ஆனால் ஒரு தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்? எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக, போகிறவர்கள் போகட்டும், யார் வேண்டுமானாலும் போகட்டும், போக வேண்டும் என்ற சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். உருவாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலைமை போக்கப்பட வேண்டும், தவிர்க்கப்பட வேண்டும். மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலிமையான ஒரு இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும். மக்கள் மத்தியிலே நம்பிக்கையை உருவாக்க வேண்டும். கட்சியினுடைய தொண்டர்கள் மத்தியிலே ஒரு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கு, நீங்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்லுங்கள். நாங்கள் அன்றே சொன்னதுதான், தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். இதுவரை இல்லை.
அதிமுக பொதுக்குழுவை கூட்டுங்கள்..
2024 நாடாளுமன்ற தேர்தலின் போது சொன்னோம். அப்போதும் நீங்கள் செவிசாய்க்கவில்லை. இப்போதாவது சொல்லுகிறோம், பொதுக்குழுவை கூட்டுங்கள். உங்கள் விருப்பப்படியே ஒரு தேதியில கூட்டுங்கள்.
செயற்குழுவையாவது கூட்டுங்கள்..
பொதுக்குழுவை கூட கூட்ட காலதாமதமானால், செயற்குழுவையாவது கூட்டுங்கள். கட்சியினுடைய செயற்குழுவை கூட்டுங்கள். ஆண்டுக்கு 2 முறை கூட்டப்பட வேண்டும். இந்த ஆண்டு தொடங்கி 6 மாதம் கடந்துவிட்டது.. செயற்குழு கூட்டம் ஆண்டுக்கு 2 முறை கூட்டப்பட வேண்டும். அந்த செயற்குழு கூட்டத்தையாவது கூட்டுங்கள். எல்லோரையும் அழையுங்கள். அழைத்து அதிலே விவாதியுங்கள். ஏன்? என்ன காரணம்? என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? இது சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவாதியுங்கள். விவாதம் செய்யுங்கள். ஏன் அஞ்சுகிறீர்கள்? ஏன் அச்சப்படுகிறீர்கள்?
மாற்றுக் கருத்தும் ஜெயலலிதாவின் அணுகுமுறையும்..
ஒரு ஜனநாயக நாட்டிலே, ஒரு இயக்கத்திலே மாற்றுக்கருத்து இருக்கத்தான் செய்யும். அதை ஏற்றுக்கொள்ளுகிற தலைவர் தான் ஒரு சிறந்த தலைவர். ஏன் ஜெயலலிதா, , தனக்கு மாற்றுக்கருத்து சொன்னவர்கள் எல்லாம் திரும்பவும் இயக்கத்தில இணைத்து, அவர்களுக்கு அமைச்சர் பதவி தரவில்லையா?
தோல்விக்கு பொறுப்பேற்ற ஜெயலலிதா
1996-ல் அதிமுக மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு நானே பொறுப்பு. ஒரு தலைவருக்குரிய தகுதியோடு தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்ட தலைவர் ஜெயலலிதா. ஆனால் இத்தனை தொடர் தோல்விக்கும் இன்றுவரை யாருமே பொறுப்பேற்கவில்லை. ஏற்க மறுக்கிறார். தோல்வி என்று சொல்வதற்கு கூட மனம் வரவில்லை. ஆனால் அன்றைக்கு ஜெயலலிதா என்ன சொன்னாங்க? நானே பொறுப்பு. மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிறுவுவேன் என்று சபதம் எடுத்தாங்க,
அன்று ஜெயலலிதா செய்தது என்ன?
ஜெயலலிதாவை விட பெரிய தலைவர் யாரும் இல்லை. அப்படிப்பட்ட ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்திற்குச் சென்றாங்க. நேரடியாகப் போனாங்க. மதிமுக அலுவலகத்திற்குச் சென்றாங்க. அந்தப் படி ஏற முடியாது, குறுகிய படியில் ஏறி போனாங்க. ஜிகே மூப்பனார் அவர்களைப் போய் சந்திச்சாங்க. பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்துக்கு போய் சந்திச்சாங்க. காங்கிரஸ் கட்சியினரை போய் சந்திச்சாங்க. எல்லா கட்சி வீட்டுக்கும் தானே நேரடியாகப் போய் சந்தித்து, அவர்களை எல்லாம் இணைத்து மிகப்பெரிய கூட்டணியை வைத்து, மிகப்பெரிய ஒரு வெற்றியைப் பெற்றுத்தந்த தலைவர் ஜெயலலிதா.
வெற்றி பெற வேண்டும்.. அதற்கு என்னெல்லாம் தேவையோ இறங்கி போகணும். நான் முதலமைச்சரா இருந்தவன் என்கிற அதே நிலைப்பாட்டில் இருந்தால் எப்படி?
கனவு உலகத்தில் எடப்பாடி பழனிசாமி
அடிக்கிற காத்துல அம்மியே பறக்குது. இன்றைக்கு மமதா பானர்ஜியின் நிலைமை என்ன? உங்க நிலைமை என்ன ஆயிருக்கும்? நிலைமை இப்பவும் மாறவில்லை. கனவு உலகத்தில இருக்காதீங்க. வெளியில் வாங்க. உண்மையை உணருங்க. உணர்ந்து செயல்படுங்கள். இந்த இயக்கத்தைக் காப்பாற்றுங்கள். அண்ணா திமுகவை காப்பாற்றுங்கள். மீண்டும் சொல்கிறோம்.. எல்லோரையும் அழையுங்கள். வருகிறோம். கலந்து பேசுங்க. நடவடிக்கை எடுங்க.. திருத்துங்க. சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை, நீங்கள் கலந்து பேசி முடிவெடுங்கள். கூட்டத்தைக் கூட்டுங்கள். ஏன் தயங்குகிறீர்கள்? நாங்க என்ன விரோதிகளா? பகைவர்களா?
மாற்று கருத்தை ஏற்கவில்லையா?
ஏற்கனவே நம்ம எல்லாம் சாதாரண ரூம்ல பேசவில்லையா? மாற்று கருத்துகளை பேசவில்லையா? நீங்க சொன்ன கருத்தை நாங்க ஏற்றுக் கொள்ளவில்லையா? இந்த 8 வருஷமா இதுதானே நடந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் உங்களிடம் நாங்கள் மாற்றுக்கருத்தைச் சொல்வோம். இது சரியில்லை, சரியில்லைன்னு. பிறகு கடைசியாக நீங்க எதைச் சொன்னாலும் சரி, எங்களை சமாதானப்படுத்தி, நீங்க சொன்ன கருத்தை நாங்க ஏற்றுக் கொண்டுதானே போயிருக்கிறோம்.
பிரச்சனையே திமுகவுடனான இணக்கம்தான்
நீங்க திமுகவோட போகணும்னு சொன்னதால்தான் உடன்பட முடியாது என நாங்கள் வெளியே வந்தோம். அதைத் தவிர்த்து இந்த 8 ஆண்டு காலம் நீங்கள் சொன்ன அனைத்து கருத்தையும் நாங்க ஏற்றுக் கொண்டோம்.. செயல்படுத்தி இருக்கிறோம். அந்த பாவத்துக்கு தான் இன்றைக்கு நாங்கள் அனுபவிக்கிறோம். இப்போதும் சொல்றேன்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஈகோ கூடாது..
காலம், கையை விட்டுப் போகவில்லை. இன்னமும் கொஞ்சம் மக்கள் நம்ம மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.. தொண்டர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை உங்களுடைய ஈகோவால சில பேருடைய தவறான வழிகாட்டுதலில் இருக்காதீர்கள்..
செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுங்கள்..
இந்த இயக்கத்தை, காப்பாற்றுங்கள். எங்களுடைய ஒரே கோரிக்கை, செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுங்கள். இல்லையென்றால் நாங்கள் சில காலம் பொறுப்போம். எங்களுக்கு என்ன வழிமுறைகள் என்று எங்களுக்கும் தெரியும். எங்களை அந்த நிலைக்கு நீங்கள் தள்ளாதீர்கள். வேண்டுதலா வைக்கிறோம். பொதுச்செயலாளர் என்ற முறையில் உங்களுக்கு கோரிக்கை வைக்கிறோம். இந்த இயக்கத்தை காப்பாற்றுங்கள். இவ்வாறு சிவி சண்முகம் கூறினார்.
