தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சியான தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன என்றும், முதல்வர் விஜய்யின் சொந்தக் கட்சி நிர்வாகிகளாலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதபோது நாடு எப்படி நன்றாக இருக்க முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்தே ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களைப் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.
இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதபோது, மக்கள் எப்படி நன்றாக இருக்க முடியும்? உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும்தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்தப் பயமும் வராமல் இருப்பது ஏன்?
மேற்கூறிய வழக்குகளில் எந்தவித ஒளிவுமறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
