ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்! தலைமை ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்புவோம்- அமைச்சர் ராஜ்மோகன்

Published On:

| By Pandeeswari Gurusamy

Rajmohan

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்துக் காலிப்பணியிடங்களையும் நிரப்ப மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வித்துறையின் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள் வருமாறு:

ADVERTISEMENT

ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்துக் காலிப்பணியிடங்களையும் நிரப்ப மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கடந்த ஆட்சியின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது உள்நோக்கத்துடன் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தற்போதைய அரசு முழுமையாகத் திரும்பப் பெறும்.

ADVERTISEMENT

தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டண விபரங்களைத் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும். பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய ஆட்சியில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுவதால், தனியார் பள்ளிகள் எந்தவொரு காரியத்திற்கும் மூன்றாம் நபர்கள் மூலம் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

அரசுப் பள்ளிகளில் படிப்படியாக ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளை உடனடியாக மூடுவதற்கோ அல்லது வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கோ உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.” என்றார்.

ADVERTISEMENT

போதை இல்லா தமிழகமே இலக்கு!

மேலும் பேசிய அமைச்சர் “குற்றங்களின் தாய்மடியே போதைப்பொருள் தான். ஒரு குழந்தை போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் வன்முறையைக் கையில் எடுக்கும். எனவே, போதையை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஒரே வாரத்தில் மட்டும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 1,238 குற்றவாளிகளைத் தமிழக அரசு கைது செய்துள்ளது. ‘போதை இல்லா தமிழகம்‘ உருவாக்குவதே எங்களின் முதன்மை இலக்கு” என்று உறுதியளித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share