‘சாராய விற்பனையை’ கைவிடும் தமிழக அரசு? தனியாரிடம் டாஸ்மாக் மதுபான கடைகள்? அமைச்சர் விக்னேஷ் தந்த விளக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister Vignesh

டாஸ்மாக் கடைகளை தனியார் மயம் ஆக்கினால் எப்படி இருக்கும், ஏன் இதுவரை தனியார் மயம் ஆக்காமல் இருந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் இப்போதுதான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர்க்குப்பம் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் மதுபான ஆலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ADVERTISEMENT

இந்தத் தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், நாளொன்றுக்குச் சுமார் 30 ஆயிரம் பெட்டி மதுபானங்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று அங்கு சென்ற அமைச்சர் விக்னேஷ், தொழிற்சாலையில் எவ்வளவு பேர் பணியாற்றுகின்றனர், தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா, உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் அளவு என்ன மற்றும் அவை முறையாக டாஸ்மாக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள கடைகளின் எண்களுடன் அதுகுறித்த விளக்கமான பட்டியல் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூடப்பட்ட மதுபானக் கடைகளின் மூலம் வந்த வருவாயை எவ்வாறு மற்ற துறைகளின் மூலம் ஈட்டுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அரசுக்கு போதிய வருவாய் கிடைத்த பிறகு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ADVERTISEMENT

டாஸ்மாக் கடைகளை தனியார் மயம் ஆக்கினால் எப்படி இருக்கும், ஏன் இதுவரை தனியார் மயம் ஆக்காமல் இருந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் இப்போதுதான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் அரசுக்கும் மக்களுக்கும் எது நல்லதோ அதை மட்டும்தான் நாங்கள் செய்வோம். வியாபார நோக்கத்தில் இந்தத் துறையைத் தமிழக அரசு பார்க்காது. இந்தத் துறையில் சம்பாதித்துதான் அரசு நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சருக்கு ஒரு சதவீதம் கூட கிடையாது. அதனால்தான் இத்தனை கடைகளை மூடுவதற்கு முதலமைச்சர் ஒத்துக் கொண்டார்” என்று தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share