முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே கூட்டணி உருவாகவில்லை என்று விசிக (VCK) தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. (Thirumavalavan) தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனல் நிகழ்ச்சியில் இது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது: நாங்க (விசிக) தவெக அமைச்சரவையில் சேருவது என ஏன் முடிவெடுத்தோம்? ஏனெனில் தவெகவுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதாவது, “இடதுசாரிகளும் வெளியே இருந்து ஆதரவு தருகிறார்கள்.. விசிகவும் வெளியே இருந்து ஆதரவு தருகிறது.. எந்த நேரத்திலும் திடீரென இவர்கள் அனைவரும் ஆதரவை திரும்பப் பெற்றால் என்ன செய்வது? என்பதுதான் அந்த சந்தேகம்.
தவெக ஆட்சி அமைக்க நாங்க ஆதரவு தரும்போது அதுக்கு அவங்க ரிவார்டு கொடுத்தாங்க.. அதுதான் அமைச்சர் பதவி. அவ்வளவுதான். எந்த நேரத்துலயும் நாங்க அமைச்சரவையில் இருந்து வெளியே வரலாம் இல்லையா? அப்படி எல்லாம் வர முடியாது என இருக்கிறதா?
தவெக அமைச்சரவையில் சேர்ந்துவிட்டதாலேயே தவெக- விசிக கூட்டணி அமைந்துவிட்டது என சொல்ல முடியாது. தவெக- விசிக இடையே கூட்டணி உருவாகவில்லை. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
அமைச்சர் வன்னி அரசு விளக்கம்
இதற்கு விசிக துணை பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு தமது எக்ஸ் பக்கத்தில், “ ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது வேறு; அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது என்பது வேறு. அமைச்சரவையிலிருந்து வெளியேறினாலும் ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவு நீடிக்கும் என்பது தான் எமது திருமாவளவன் கருத்து. இதில் உள்நோக்கம் கற்பிப்பது திரிபுவாதமாகும்” என விளக்கம் அளித்துள்ளார்.
