செந்தில் பாலாஜிக்கு சரமாரி பதில் கொடுத்த அமைச்சர் நிர்மல் குமார்.. விரைவில் ’வெள்ளை அறிக்கை’ வெளியீடு!

Published On:

| By Mathi

Minister Nirmal Kumar Targets Senthil Balaji Over Power Sector Corruption

மின்சாரத் துறை தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji) முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் (Nirmal Kumar) விரிவான பதில் அளித்துள்ளார்.

மதுரையில் இன்று ஜூன் 14-ந் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: செந்தில் பாலாஜி எந்த லட்சணத்தில் டிரான்ஸ்பார்மர்களை வாங்கினார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் வாங்கிய டிரான்ஸ்பார்மர்களின் தரம் என்ன? அவர் எந்த லட்சணத்தில் டிரான்ஸ்பார்மர்களை வாங்கினார்? 44,000 டிரான்ஸ்பார்மர்களை வாங்கியதில் எவ்வளவு கோடி ஊழல் செய்யப்பட்டது? அரசுக்கு எவ்வளவு முறை இழப்பு ஏற்பட்டது? உயர்நீதிமன்றம் வரை சென்று, நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் என்னென்ன? 35 கம்பெனிகள், 25 கம்பெனிகள் ஒரே இடத்தில், ஒரே ஐ.பி (IP) முகவரியில் இருந்து எப்படி டெண்டர் கோரினார்கள்? 7 லட்சம், 8 லட்சம் மதிப்புள்ள டெண்டர்கள் எப்படி 30%, 40%, 50% உயர்த்தப்பட்டு கோரப்பட்டன? எஸ்டிமேஷனை எப்படி இப்படி நிர்ணயம் செய்தீர்கள்? எப்படிப் பிரித்துக் கொடுத்தீர்கள் என்று உயர்நீதிமன்றம் மிகக் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் இன்று சி.பி.ஐ (CBI) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அவர் இந்தத் துறையைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமே இல்லை.

ADVERTISEMENT

போக்குவரத்துத் துறையும் செந்தில் பாலாஜியும் (Senthil Balaji)

செந்தில் பாலாஜி, இதற்கு முன்பு இருந்த துறைகளில் ஏதாவது வழக்கு வாங்காமல் வந்திருக்கிறாரா? இதற்கு முன்பு போக்குவரத்துத் துறையில் இருந்தார். போக்குவரத்துத் துறையில் ஆயிரக்கணக்கானவர்களிடம் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய வழக்குகள் உள்ளன. அந்த வழக்கினை எவ்வளவு மோசமாக நான்கு வழக்குகளை ஒன்றாக இணைத்து, எல்லா வழிகளையும் முடக்கி, ஏற்கனவே இரண்டு வருடம் சிறையில் இருந்துவிட்டு, மீண்டும் அந்த வழக்கு நடைபெறாத வகையில் பல மனுக்களைப் போட்டு இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவு பேரிடம் வசூலித்த இந்த ‘ஜாப் ராக்கெட்’ (Job Racket) வழக்கு என்பது மிகவும் கேவலமான வழக்கு. எத்தனை பேரை நீங்கள் ஏமாற்றியிருக்கிறீர்கள், எத்தனை பேருக்கு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியிருக்கிறீர்கள்.. அதற்கான அனைத்து ஆதாரங்களோடும் பிடிபட்டு, கிரைம் பிராஞ்சில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

அழிந்து கொண்டிருக்கும் போக்குவரத்து துறை

செந்தில் பாலாஜி இருந்த எந்தத் துறையும் மீண்டு வருவதே பெரிய கஷ்டமாக உள்ளது. போக்குவரத்துத் துறைக்கு அவர் எந்த நாளில் சென்றாரோ, அன்று முதல் அந்தத் துறையின் நிலைமை என்னவானது என்று எல்லோருக்கும் தெரியும். அந்தத் துறையின் அழிவை ஒவ்வொரு நாளும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

மின்சார துறை வெள்ளை அறிக்கை- நிர்மல்குமார் (Nirmal Kumar)

மின்சாரத் துறையில் நாங்கள் விரைவாக வெள்ளை அறிக்கையை வெளியிடுவோம். கடந்த 5 ஆண்டுகள் என்ன செய்யப்பட்டது? அதற்கு முன்பு 10 ஆண்டுகள் என்ன செய்தார்கள்? எவ்வளவு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டன? அதற்கு முன்பு எவ்வளவு கொள்முதல் செய்யப்பட்டன? எவ்வளவு துணை மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டன? அதற்கு முன்பு எவ்வளவு துணை மின்நிலையங்கள் உருவாக்கப்பட்டன? என்னென்ன வகையில் இவர்கள் மின்சாரத் துறையில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தினார்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

சோலார், காற்றாலை துறை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) துறையைப் பொறுத்தவரை, 90-களில் சோலார் மற்றும் காற்றாலை மின்சாரம் முதன்முதலில் அதிக அளவில் கொண்டுவரப்பட்டது தமிழகத்தில்தான். இன்று தமிழகம் அந்தத் துறையில் எவ்வளவு பின்தங்கியுள்ளது.. இன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடுகள் மிகவும் மோசமான அளவில் உள்ளன. இதற்கு என்ன காரணம்? இவர்களுக்குச் சார்ந்த 4 அல்லது 5 குடும்பங்கள், தனிநபர்கள் பயன்பெறும் வகையில் ஒரு குழுவை (Lobby) அமைத்து, யாருமே உள்ளே நுழைய முடியாதபடி செய்துள்ளனர். சோலார் துறையில் ஒரு விண்ணப்பம் கொடுக்க வேண்டுமென்றால் கூட எத்தனை லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது ஊருக்கே தெரியும்.

ADVERTISEMENT

குமுறிய முதலீட்டாளர்கள்

அன்று நாங்கள் விற்பனையாளர் மேலாண்மை (Vendor Management) கூட்டத்தைக் கூட்டினோம். அனைத்து முதலீட்டாளர்களையும் அழைத்து பேசினோம். முதலீட்டாளர்கள் என்ன சொன்னார்கள் என்றால், ‘எங்களுக்கு உள்ளே போய் விண்ணப்பம் கொடுக்க வேண்டுமென்றால் கூட, நான்கு-ஐந்து தரகர்களைச் சந்திக்காமல் விண்ணப்பமே உள்ளே போகாது. ஒரு மெகாவாட்டிற்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை கொடுத்தால் தான் விண்ணப்பமே உள்ளே செல்லும்’ என்று கூறினார்கள். பிறகு எப்படி முதலீடு வரும்? தரமான முதலீடுகள் எப்படி வரும்?

சோலார் துறையும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களும்

சோலார் என்று போனால், ரியல் எஸ்டேட் துறையில் 300-400 ஏக்கர் நிலத்தை ஒரு தரகர் வாங்கி வைத்திருப்பார். அந்தத் தரகரிடம் போய் நிலத்தையும் வாங்க வேண்டும், அவரிடமே விண்ணப்பத்தையும் கொடுக்க வேண்டும். அவர்கள் மூலமாகத்தான் கமிஷனும் செய்ய வேண்டும். அவர்களே ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள். அவர்களே சிறிய துணை மின்நிலையங்களை வைத்திருப்பார்கள், அவர்கள் மூலமாகத்தான் கமிஷனும் செய்ய வேண்டும். ஒரு சாதாரண நபர் முதலீடு செய்ய வேண்டுமென்றால், இத்தனை தரகர்களைத் தாண்டி வர வேண்டிய சூழல் இருந்தது. இந்தத் துறையைச் சீரமைப்போம், இது எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிப்போம்.

70,000 காலி பணியிடங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பேரை வேலைக்கு எடுத்தீர்கள்? 70,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. எத்தனை ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்தீர்கள்? ஏன் அந்தப் பணியிடங்களை நிரப்பவில்லை? ஏன் இவ்வளவு துணை மின்நிலையங்களை உருவாக்கவில்லை? ரெனியூவபிள் எனர்ஜியில் இவ்வளவு தடைகளை மீறி, இத்தனை தரகர்களுடன் ஏன் செயல்பட்டீர்கள்? அதனால்தான் உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி சென்டர்களை ஏன் மூடினோம்? அனைத்தும் முறைகேடு நடைபெற ஒரு மையத்தை உருவாக்கி, அதன் மூலமாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதை மாற்றி அமைக்கவே அந்த இரண்டு மையங்களை மூடிவிட்டோம். பல முன்னெடுப்புகள் இந்த நான்கு வாரங்களில் நடத்தப்பட்டுள்ளன.

கொள்கைகளில் மாற்றம்

இந்தத் டிரான்ஸ்பார்மர் முறைகேடுகளில் எஸ்டிமேஷன் எப்படித் தவறாக இருந்தது என்று பார்த்தோமோ, அதுபோன்ற தவறுகள் இனி நடக்காத வகையில் டெண்டர் மற்றும் எஸ்டிமேஷன் கொள்கையை மாற்றியுள்ளோம். கொள்கை ரீதியான முடிவுகளை நிறைய மாற்றியுள்ளோம். பசுமை மின்சாரத்தில் எதற்காக எல்லா விண்ணப்பங்களையும் நிறுத்தி வைத்திருந்தோம் என்றால், இனி வெளிப்படையாக வழங்கப்போகிறோம் என்பதற்காகத்தான். யாரும் எந்தத் தரகரிடமும் 25 லட்சம், 30 லட்சம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை. யார் முதலீடு செய்ய நினைக்கிறார்களோ, அவர்களுக்கு வெளிப்படையாகக் கிடைக்கும். ஒரு சில நாட்களில் அது சோதனையில் உள்ளது, விரைவில் தொடங்க உள்ளோம். இந்தத் துறையை எவ்வளவு மோசமாகச் சீர்கேடு செய்ய முடியுமோ, அவ்வளவு மோசமாகச் செய்திருக்கிறார்கள்.

சிவசங்கர் மீது விமர்சனம்

இப்போது எதற்குத் தேவையில்லாமல் செந்தில் பாலாஜி ஆஜராகிறார்? இதற்கு முன்பு இருந்த அமைச்சர் சிவசங்கர் தானே? ஏன் சிவசங்கர் ஆஜராகவில்லை? சிவசங்கரன் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருந்தார். அவருக்கு எதில் கையெழுத்து போடுகிறோம் என்பதே தெரியாது. கடந்த இரண்டு வருடம் அமைச்சராக இருந்த சிவசங்கரைக் கூப்பிட்டு வைத்து, அவருக்குப் பதில் செந்தில் பாலாஜி ஏன் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்? அவர் எதற்காகப் பதில் சொல்கிறார் என்று கேட்டுப்பாருங்கள். அந்தத் துறையை மறைமுகமாக நடத்தி வந்தது செந்தில் பாலாஜிதான். அவரோட தம்பி அசோக் மற்றும் நாங்கள் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்த தரகர்கள் எல்லாம் சேர்ந்துதான் இதைச் செய்தார்கள். நீங்கள் இந்தத் துறையின் அமைச்சர் இல்லையே, பிறகு எதற்கு ஆஜராகிறீர்கள்? உங்களுக்கு இதில் என்ன சம்பந்தம் இருக்கிறது? இந்தத் துறையை இவ்வளவு மோசமாகக் கொண்டு போனதற்கு முக்கிய காரணமே செந்தில் பாலாஜிதான்.

இந்தத் துறையின் தற்போதைய நிலைமையை நாங்கள் கண்டிப்பா வெளியிடுவோம். இதை மீட்டெடுக்க முதல்வருடைய உத்தரவுப்படி முயற்சிகளை எடுத்து வருகிறோம். எவ்வளவு கொள்முதல் செய்ய வேண்டும், எவ்வளவு துணை மின்நிலையங்கள் உருவாக்க வேண்டும் என்று கணக்கெடுக்கிறோம். இப்போது இருக்கும் மின்சுமைத் திறனில், 10-12 வருஷங்களுக்கு முன்பு எவ்வளவு தேவையோ, அந்த அளவுக்குத்தான் உள்கட்டமைப்பு உள்ளது. இன்று கிட்டத்தட்ட எவ்வளவு துணை மின்நிலையங்கள் தேவை என்று கணக்கெடுக்கிறோம். நாலரை லட்சம் டிரான்ஸ்பார்மர்களில் எவ்வளவு பழையவை, எவ்வளவு 20 வருஷங்களுக்கு முன்பு போடப்பட்டது, எவ்வளவு 15 வருஷங்களுக்கு முன்பு போடப்பட்டது என்று கணக்கெடுக்கிறோம்.

கண்டிப்பாக தமிழக மக்களுக்கு இந்த உள்கட்டமைப்பைச் சரி செய்வதற்கான வெள்ளை அறிக்கையைக் கொடுத்து, எவ்வளவு சீக்கிரம் துணை மின்நிலையங்களைக் கொண்டு வர முடியுமோ கொண்டு வருவோம்.

எந்தத் துறையிலும் டெண்டரை நாங்கள் நிறுத்தவில்லை, டெண்டர் கொள்கையையும் மதிப்பீட்டு கொள்கையைத்தான் மாற்றியுள்ளோம். அதைச் சரி செய்த பிறகு அனைத்து டெண்டர்களும் விடப்படும். 30%, 40% கமிஷன் இனி கிடையாது. மக்களுக்கான அரசு, மக்களுக்கான துறை இது. தவறு எங்கே நடந்தது, எவ்வளவு பணம் மிச்சப்படுத்தப்பட்டது என்று வெள்ளை அறிக்கையாக விரைவில் கொடுப்போம். மற்ற அமைச்சர்கள் பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் தான் ஆகிறது, எல்லா இடங்களிலும் இருப்பு மதிப்பீடு (Stock Assessment) செய்து கொண்டிருக்கிறோம். மின்சாரத் துறையில் என்ன தேவை, அடுத்த இரண்டு வருடங்களுக்கான தேவை என்ன என்று கணக்கிட்டு அடுத்த கட்டத்திற்குப் போவோம்.

மின்வெட்டு நிலவரம்

தற்போது மின்சுமையைத் தாங்க முடியாமல் பவர் ஃபெயிலியர் (Power Failure) ஆகும் இடங்களில், கூடுதல் பணியாளர்களைப் போட்டுச் சரி செய்து கொண்டிருக்கிறோம். 500 பேர் சென்னையில் மட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 125 குழுக்களைப் போட்டு அந்தப் பட்டியலையும் வெளியிட்டுள்ளோம். தினமும் பவர் ஃபெயிலியர் எங்கே நடக்கிறது, எவ்வளவு நேரத்தில் சரி செய்யப்படுகிறது என்று வெளியிட்டு வருகிறோம். உள்கட்டமைப்பு சரியாக இல்லை, அதைச் சரி செய்யும் பணிகளையும் மேற்கொள்வோம். 500 யூனிட், 200 யூனிட் குறித்து சமூக வலைதளங்களில் தவறாகப் பதிவு செய்திருந்தார்கள், அதற்கு நாங்கள் விளக்கம் கொடுத்துள்ளோம். டிரான்ஸ்பார்மர் முறைகேட்டில் முதல் கட்ட எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணையில் எத்தனை கம்பெனி இன்வால்வ் ஆகியிருக்கிறது, ஐ.பி முகவரி என்னவென்று எல்லாமே ஆதாரப்பூர்வமாக உள்ளது. மக்களின் பணத்தைத் திருடிவிட்டு யாரும் தப்பிக்க முடியாது.

இந்த ஜாப் ராக்கெட் வழக்கு 2015-ல் போடப்பட்டது, 11 ஆண்டுகள் ஆகிறது, இன்னும் குற்றப்பத்திரிகை (Charge Sheet) கூட தாக்கல் செய்யவில்லை. நீங்கள் தைரியமான ஆள்தானே, பிறகு ஏன் மனுக்கள் மீது மனுக்கள் போட்டு வழக்கை முடக்கினீர்கள்? நீங்கள் ஆட்சியில் இருந்த ஐந்து வருடங்களில் இந்த வழக்கை ஒரு அங்குலம் கூட நகரவிடாமல் ஏன் பார்த்தீர்கள்? உச்ச நீதிமன்றம் தலையிட்டு இவ்வளவு அழுத்தம் கொடுத்ததுனால்தான் இந்த வழக்காவது இன்று உயிர்ப்புடன் இருக்கிறது. மின்சாரத் துறையில் தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share