ராஜன் குறை
இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பின் இறுதியில் ராகுல் காந்தி உணர்ச்சிமிகு உரையாற்றியுள்ளார். நூறாண்டுகளுக்கு முன்னால் காலனீய ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் எதிர்ப்பியக்கம் துவங்கியதுபோல இப்போது மீண்டும் துவங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்! நாடு முழுவதும் இலட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் போராடத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்! அந்த போராட்டத்தில் பாஜக-வுடன் முரண்படும், நாட்டின் மக்களாட்சி அமைப்புகளை காக்க விரும்பும் அனைத்துக் கட்சிகளும் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்!
மேலும், அவருடைய நோக்கம் மாநில கட்சிகளுடன் மோதுவது அல்ல, பாஜக-விற்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைப்பதுதான் என்று கூறியுள்ளார்! அது மட்டுமல்லாமல் பாஜகவிற்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க-வும் இணைந்து நிற்கும் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளார்! காங்கிரஸ் அனைவரையும் அன்பால், அஹிம்சையால், சத்தியத்தால் ஒருங்கிணைக்கும் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு நாளும் ஆர்.எஸ்.எஸ்-சிற்கு அடிபணிய மாட்டார்கள்; காங்கிரஸ் அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ் கருத்தியலுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகளெல்லாம் தேர்தல்களில் வழக்கம் போல வெல்லலாம் என்று நம்புவது தவறு என்றும், பாஜக தேர்தல் கமிஷன் உள்ளிட்ட நிறுவனங்களையெல்லாம் கைப்பற்றி விட்ட து என்றும் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் ஒரு எதிர்ப்பியக்கமாகவே பிறந்து வளர்ந்தது என்பதால் அது போராடத் தயங்காது என்று கூறியுள்ளார். அனைத்து கட்சிகளும் அதனுடன் சேர்ந்து போராட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது உரை பலராலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அவசியம் பாஜக-விற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து இயங்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், ராகுல் காந்தி மாநில தேர்தல்களில் இயங்கும் முறை அவருடைய இந்தப் பேச்சிற்கு எதிராக உள்ளது. மாநிலங்களில் பாஜக-வை எதிர்த்து நிற்கும் கட்சிகளை அவர் கடுமையாக விமர்சிக்கிறார். அவற்றுடன் ஒத்துழைக்க மறுக்கிறார். பீஹார் தேர்தலில் தேஜஸ்வி யாதவுடன் அவர் இணக்கமான உறவைப் பேணவில்லை. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் பிணக்கத்தை உருவாக்கியதுடன், தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க-வை கடுமையாக எதிர்த்த த.வெ.க-வுடன் சென்று இணைந்துவிட்டார். கேரளாவில் பினரயி விஜயனைக் கடுமையாகத் தாக்கியதுடன், சி.பி.ஐ.(எம்) கட்சிக்கும் பாஜக-விற்கும் ரகசிய உறவு இருக்கிறது என்று கூறினார். தமிழ்நாடு, கேரளா தேர்தல் முடிவுகளைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின், ராகுல் காந்தியின் இந்த முரண்பட்ட நிலையை எப்படி புரிந்துகொள்வது? ஒரு புறம் மாநில தேர்தல்களில் பாஜக-வை கடுமையாக எதிர்க்கும் மாநில கட்சிகளை எதிர்க்கிறார். மற்றொருபுறம் தேசிய அளவில் அவற்றை பாஜக-விற்கு எதிராக ஒருங்கிணைக்க விரும்புகிறார். என்னால் பினரயி விஜயனை கட்டிப் பிடிக்க முடியாது என்கிறார். நீங்கள் கட்டிப் பிடிக்க வேண்டாம், எதற்காக எட்டி உதைக்கிறீர்கள் என்று கேட்கிறார் இடதுசாரி தோழர் ஒருவர். இப்படி ஒரு குழப்பமான நிலை எப்படி உருவாகியது என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.
சமகால அரசியலின் வரலாற்று வேர்கள்
நமக்கு அறியக்கூடிய வரலாற்றில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் பெளத்தம் பரவியபோதுதான் பேரரசு உருவாக்கமும் வலுவடைந்தது. அதன் பின் வேதகால சமஸ்கிருதம் பேசிய ஆரியர்கள் புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திரங்கள் ஆகியவற்றை இயற்றி தங்களை மறுதகவமைப்பு செய்துகொண்ட பின், பெரும்பாலும் இந்திய அரசியலில், சமூக ஒழுங்கை வடிவமைப்பதில் கணிசமாகப் பங்காற்றினார்கள். நால்வர்ண சமூக அமைப்பு என்பது அதன் முக்கியமான கட்டமைப்பாக இருந்தது. ஐரோப்பாவிலும், பிற இடங்களிலும் மூவடுக்கு சமூகமாக, பூசாரிகள், அரசர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள், பொதுமக்கள் என்று இருந்தது இந்தியாவில் நாலடுக்காக வடிவம் பெற்றது. ஆனால் பிற இடங்களில் இல்லாதபடி இது பிறப்படையாளமாகவும், மறுபிறவிக் கோட்பாட்டுடன் பிணைக்கப் பட்ட தாகவும் ஒரு கருத்தியல் வலுவாக இறைநம்பிக்கையுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டது. அதாவது ஒருவர் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கேற்ப அவர் அடுத்த பிறவியில் குறிப்பட்ட வர்ணத்தில் பிறப்பார் என்று கூறப்பட்டது. யாராவது இந்த ஏற்றத்தாழ்வைக் கேள்வி கேட்டால், அது போன ஜென்மத்தில் செய்த பாவத்தால் அல்லது புண்ணியத்தால் விளைந்தது என்று கூறிவிடுவார்கள்.

இந்த நால்வர்ண கோட்பாட்டின் அடிப்படையில் பல்வேறு ஜாதிப் பிரிவினைகள் தோன்றி அவை பல்வேறு தொழில்களுடன் பிணைக்கப்பட்டு சமூக ஒழுங்கு என்பது இறுக்கமானதாகக் கட்டமைக்கப்பட்டது. அவர்ணர்கள் என தீண்டப்படா த பிரிவினரும் உருவானார்கள். எந்த சமூக அமைப்பும் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் இருக்காது என்பதால் சிலபல தளர்வுகள் ஏற்பட்டன என்றாலும் பரவலாக இந்த வர்ண அமைப்பு அரசுருவாக்கங்களின், பேரரசு உருவாக்கங்களுக்கு அனுசரணையாகவே இருந்தது. பூசாரிகளாகவும், சமஸ்கிருதம் பயின்றவர்களாகவும், இந்த வர்ண தர்மத்தை கட்டிக் காப்பவர்களாகவும், அரசு நிர்வாகத்தில், வரி வசூலில் எல்லாம் பங்களிப்பவர்களாகவும் இருந்த பார்ப்பனர்கள் மிக முக்கியமான அரசியல் சக்திகளாக இருந்தார்கள். சத்திரியர்கள் போரிட்டு நிலங்களை கைப்பற்றி அரசமைத்தாலும். ஆட்சியை நிலைநிறுத்த பார்ப்பனர்கள் தேவைப்பட்டார்கள். மராத்திய பேரரசர் சிவாஜிக்கு முடிசூட எப்படி காகபட்டர் என்ற விஷ்ணுகுப்தரின் அங்கீகாரம் தேவைப்பட்ட து என்ற வரலாற்று நிகழ்வை மையப்படுத்தி அண்ணா எழுதிய “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சம்ராஜ்யம்” நாடகம் இந்த நெடிய வரலாற்றின் முக்கிய அம்சங்களை விளக்கும் ஆற்றல் பெற்றது எனலாம்.
ஐரோப்பாவில் வர்த்தகம் பெருகி, தொழில்முனைவோர்கள் தோன்றி, முதலீட்டிய உற்பத்தி முறை உருவாகத் துவங்கியபோது நிலபிரபுத்துவம் பலவீனமடைந்தது. அப்போது அச்சு இயந்திரம் வடிவமைக்கப் பட்டதால் நூல்கள் அச்சிடப் படத் துவங்கி, கல்வி பரவலானது. அதன் விளைவாக அறிவுசேகரம் சமூக இயக்கமாக மாறியதில் பல்வேறு புதிய இயந்திரங்களை உருவாக்குவதும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதும் அதிகரித்தது. இவையெல்லாம் மன்னாராட்சிக்கு பல கட்டுப்பாடுகளை விதிப்பதும், மக்கள் தொகுதிகளின் பிரதிநிதிகள் முடிவெடுப்பதில் பங்கெடுப்பதுமான பல்வேறு குடியரசு வடிவங்கள் உருவாகத் துவங்கின. இதன் விளைவாக ஐரோப்பிய வர்த்தகர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்து கால்பதிக்கத் துவங்கினார்கள். இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களில், ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி அதிகம் வேரூன்றி, இந்திய மன்னர்களுக்கிடையிலான போர்களில் பங்கெடுக்கத் துவங்கி, மெல்ல மெல்ல ஆட்சியதிகாரத்தில் பங்கெடுக்கத் துவங்கினார்கள். இறுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியா நிலப்பகுதி முழுவதையும் நேரடியாக இங்கிலாந்து மன்னராட்சியில் இணைத்தார்கள்.
அதன் பிறகான காலனி ஆட்சியில் இந்தியாவில் ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த மாற்றங்களெல்லாம் கால்பதிக்கத் துவங்கின. அச்சு இயந்திர பயன்பாடு, கல்வி, தொழில் வளர்ச்சி, ரயில் போன்ற போக்குவரத்து வசதிகள், அறிவியல் தொழில்நுட்பம், நீதிபரிபாலனம், ஆட்சி முறை என நவீன வாழ்க்கை முறை தோன்றியது. என்றுமே கல்வியை தங்கள் தனி உரிமையாக வைத்திருந்த பார்ப்பனர்கள் ஆங்கிலக் கல்வி கற்றதுடன், துரிதமாக காலனீய ஆட்சியின், நவீன சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் முக்கிய பங்கு வகிக்கத் துவங்கினார்கள். இந்திய வர்த்தக சமூகத்தினரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பொருளாதார வளம் பெற்றார்கள். அதே சமயம் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் வளங்களை சுரண்டிய அளவு, இந்தியாவிற்கு நல்லாட்சி வழங்கவில்லை என்றும் உணர்ந்தார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றுவிதமான அரசியல் போக்குகள் உருவாயின. இந்த மூன்றையும் நாம் தெளிவாகப் புரிந்துகொண்டால்தான் சமகால அரசியல் முரண்பாடுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

முதல் வகை இறையாண்மை தீவிரவாதிகள்: மராத்திய பேஷ்வாக்களின் ஆட்சியில் மேலாதிக்கம் பெற்றிருந்த பார்ப்பன சமூகத்தினர் ஆங்கிலேயர் ஆட்சியை உடனே போரிட்டு விரட்ட வேண்டும்; இந்தியர்கள் மீண்டும் தங்களையே ஆண்டுகொள்ள வேண்டும் என்ற தீவிரவாத நோக்கைக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இந்திய மன்னர்கள் 1857-ஆம் ஆண்டு கலகம் செய்த பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடுத்த போரின் தொடர்ச்சியாகவே சிந்தித்தார்கள். இவர்களுக்கு பார்ப்பனீய இந்து அடையாளமே இந்திய தேசிய அடையாளமாக இருந்தது. வங்காள பார்ப்பன சமூகத்திலும் இத்தகைய நோக்கு இருந்தது. வந்தே மாதரம் பாடலை தன் நாவலில் 1882-ஆம் ஆண்டு எழுதிய பங்கிம் சந்திரர் ஒரு உதாரணம். இன்றைய இந்துத்துவ அரசியலின் வேர்கள் இந்தப் பிரிவினரே. இவர்கள்தான் இந்து மஹாசபை, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார்கள். திலகர், சாவர்க்கர், ஹெட்கவார், கோல்வார்கர் ஆகியோர் இப்பிரிவின் முக்கியமான தலைவர்கள்.

இரண்டாம் வகை சுயாட்சி மிதவாதிகள்: இந்திய குடிமைச் சமூக உருவாக்கத்தின் அடித்தளமாக இருந்த வக்கீல்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள். இவர்கள் ஆங்கிலேயர்களிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது, சுயாட்சி உரிமைகளைக் கோருவது ஆகியவற்றுடன் இந்திய சமூகம் பழைய அமைப்பிலிருந்து மாற்றம் பெற வேண்டும் என்ற சீர்திருத்த நோக்கும் கொண்டவர்கள். மக்களிடம் கல்வியும், நவீன சிந்தனைகளும் உருவான பிறகுதான் சுயாட்சிக்கான ஆற்றல் பிறக்கும் என்ற எண்ணம் கொண்டிருந்த மிதவாதிகள். மோதிலால் நேரு, ரானடே, கோகலே உள்ளிட்டவர்கள் இப்பிரிவின் உதாரணங்கள். காந்தி, நேரு, காங்கிரஸ் கட்சி இந்தப் பிரிவின் அரசியல் வடிவங்கள். இவர்கள் மரபுவாதம், சுதந்திரவாதம் ஆகியவற்றிற்கு இடையே ஊசலாடுபவர்கள். மதம், ஜாதி ஆகியவை தனிவாழ்க்கை தொடர்பானவை, பொதுவாழ்க்கையில் அவற்றை நுழைக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள். கோயில் பூசாரிகளாக பார்ப்பனர்களே இருப்பது தனி வாழ்க்கையா, பொதுவாழ்க்கையா என்றால் இவர்களால் உறுதியாக பதில் கூற முடியாது.

மூன்றாம் வகை சமூகப் புரட்சியாளர்கள்: இவர்கள் முதலில் நால்வர்ண சமூக அடுக்கின் ஏற்றத்தாழ்வுகள் ஒழிய வேண்டும் என நினைத்தவர்கள். தீண்டாமையும், பெண்ணடிமைத்தனமும் ஒழிய வேண்டும், அனைத்து மனித உயிர்களும் சமமானவை என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுத்தவர்கள். மராத்திய மாநிலத்தின் மகாத்மா ஜோதிபா பூலேவும், அவர் மனைவி சாவித்ரி பாய் பூலேவும் இதற்கு முக்கியமான உதாரணங்கள். இவர்கள் ஆங்கிலேய ஆட்சி ஏற்படுத்திய கல்வி வாய்ப்புகளை சமூக மாற்றத்திற்கான காரணிகளாகவும், அவர்களது நவீன நீதிபரிபாலன நடைமுறைகளை முன்னேற்றமாகவும் கருதினார்கள் என்பதால் காலனீய ஆட்சியை எதிர்க்கும் அரசியல் வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை தரவில்லை. நவீன இந்திய அரசியலில் அம்பேத்கர் இந்த பிரிவின் மிக முக்கியமான ஒரு தலைவர். அரசியல் இயக்கமாக சொன்னால் தமிழ்நாட்டில் துவங்கிய பார்ப்பனரல்லாதோர் இயக்கம், பின்னாளில் இதன் மாற்று வடிவமான பெரியாரின் சுயமரியாதை இயக்கம், வட மாநிலங்களில் ராம் மனோஹர் லோஹியா, கன்ஷி ராம் ஆகியோரின் இயக்கங்கள் ஆகியவை முக்கியமான தொடர்ச்சிகள். இன்று இத்தொடர்ச்சிகள் பல்வேறு மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர், தலித் கட்சிகளாக விளங்குகின்றன.
காங்கிரஸ் கட்சி என்ற இருதலைக் கொள்ளி எறும்பு
பெரும்பான்மை இந்து மத அடையாளவாதம் பேசும் பாஜக, தெளிவாகவே மூட நம்பிக்கைகளையும், மீட்புவாத சிந்தனையையும், பார்ப்பனர், பூசாரி வர்க்க நலனையும் முன்வைக்கக் கூடியது. அனைத்து இந்தியர்களும் இந்துக்கள் என ஒற்றை தேசிய அடையாளத்தை முன்வைப்பது அவர்களுக்கு சாத்தியமாகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பலர் பொதுவாழ்க்கையில் மத சார்பின்மை என்று கூறினாலும், தனிப்பட்ட முறையில் பார்ப்பனீய கலாசார அடையாளங்களை ஏற்பவர்கள். இதனால் இவர்களால் ஒரு போதும் அம்பேத்கர் போல, பெரியார் போல ஜாதி ஒழிய வேண்டும், குறிப்பாக பார்ப்பனீய மேலாதிக்கம் எதிர்க்கப்பட வேண்டியது என்று பேச முடியாது. அதனால் காங்கிரஸ் பன்மைத்துவம் என்று பேசினாலும் அந்த பன்மைத்துவத்தை வரையறுப்பதில் ஒரு சிக்கலை சந்திக்கிறது.
மிக முக்கியமான உதாரணம் காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசுத் துறைகளில், நிறுவனங்களில் நடை முறைப்படுத்த முன்வரவில்லை. மாநில அரசுகள் வேண்டுமானால் அதனை நடைமுறைப் படுத்திக்கொள்ளலாம் என்று கூறிவிட்டது. அதனால் பிற்படுத்தப்பட்டோர் நலன், முன்னேற்றம் என்பது மாநிலம் சார்ந்ததாக மாறியது. மேலும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் வகுப்பினர்கள் சமஸ்கிருத பின்னணி, ஆங்கிலக் கல்வி என இந்திய அளவிலான வலைப்பின்னலாக இருக்க, வெகுமக்களான பிற்படுத்தப்பட்டோர் அந்தந்த மாநில மொழிகளிலேயே அரசியல் செய்பவர்களாக இருந்தனர். தலித் மக்களும் அந்தந்த மாநில மொழிகளில்தான் அரசியல் பேசுவார்கள் என்பதால் தலித்-பகுஜன் அரசியல் என்பது மாநில தன்மை கொண்டது.
வெகுமக்கள் அரசியல் அணிதிரட்டல் என்பது மாநில அளவிலேயே நடக்கும் என்பதால், மக்களாட்சி நடைமுறைகள் வலுப்பெறும்போது பல்வேறு மாநிலங்களிலும் மாநில கட்சிகள் தோன்றி, காங்கிரஸின் அரசியல் இட த்தை எடுத்துக் கொள்ளத் துவங்கின. குறிப்பாக நெருக்கடி நிலைக்குப் பிறகு உத்திரப் பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் தோன்றிய காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகள் மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் அணிகளாக நிலைபெற்றுவிட்டன. ஜனதா கட்சி ஆட்சியில் நியமிக்கப்பட்ட மண்டல் கமிஷன் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்காக பரிந்துரைகளை வழங்கியபோதும் காங்கிரஸ் அதனை கிடப்பில் போட்டது. மீண்டும் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள ஆட்சி ஏற்பட்ட போதுதான் அந்த பரிந்துரைகள் நடைமுறை படுத்தப்பட்டன. காங்கிரஸ் அதனை ஆதரிக்கவில்லை. மண்டல் அலையில் உ.பி, பீஹார் மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் அணி சேர்க்கை மாநிலங்களை கைப்பற்றியது. இப்போது காங்கிரஸால் மீண்டும் அங்கே காலூன்ற இயலவில்லை. மாறாக, இந்துத்துவ சித்தாந்தம் கொண்ட பாஜக, சிறுபான்மை வெறுப்பரசியல் மூலமாக அங்கே மாநில கட்சிகளுக்கு எதிரணியாக உருவாகிவிட்டது.
இந்த நிலையில்தான் காங்கிரஸ் இந்துத்துவ அணிகளை ஒருபுறமும், மாநில அரசியல் கட்சிகளை மறுபுறமும் எதிர்கொள்ள நேர்கிறது. ஒவ்வொரு மாநில தேர்தல் வரலாற்றையும் முழுமையாக ஆராய்ந்தால் இந்த சிக்கலின் முழு பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடியும். காங்கிரஸ் எப்படியாவது தான் இழந்த மாநில அரசியல் இட த்தை மீண்டும் வென்றெடுக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதற்காக மாநில கட்சிகளுடன் முரண்படுகிறது. மற்றொருபுறம் பாஜக ஒன்றிய அரசை கைப்பற்றி இந்துத்துவ கருத்தியல் பிடியை வலுப்படுத்துவதால் அதனையும் எதிர்க்க வேண்டியுள்ளது. அதற்கு மாநில கட்சிகளின் துணை வேண்டியுள்ளது.
ஒரு கொள்ளிக்கட்டையின் மீது ஒரு எறும்பு பயணிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த கொள்ளிக்கட்டையின் இரண்டு முனைகளிலும் நெருப்பு பற்றவைக்கப்பட்டால் அந்த எறும்பு எங்கே செல்லும்? அதுதான் இருதலைக் கொள்ளி எறும்பு என்ற சொல்லாக்கம். காங்கிரஸால் இந்திய பெருந்தேசியத்தின் பக்கமும் போக முடிவதில்லை; மாநில உரிமைகள் பக்கமும் போக முடிவதில்லை. வர்ண தர்ம சிந்தனையை ஏற்கவும் முடிவதில்லை; முற்போக்காக முற்றிலும் மறுதலிக்கவும் முடிவதில்லை.

காங்கிரஸின் இத்தகைய குழப்பத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் தி.மு.க-வுடனான அதன் எழுபத்தைந்து ஆண்டுகால உறவும், முரணும். பெரியாரின் இட ஒதுக்கீடு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாததால்தான் 1925-ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறினார். ஆனால் காங்கிரஸில் முற்போக்கான சிந்தனையுள்ளவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தி.க., தி.மு.க இரண்டுமே ஆதரவு அளித்துள்ளன. பிற்போக்கான திட்டங்களை எதிர்த்துள்ளன. ஆனால் காங்கிரஸ் ஒரு போதும் தி.மு.க-வின் சமூக நீதி, மாநில சுயாட்சி கருத்தியலை முழுமையாக ஏற்றுக்கொண்டதில்லை. மீண்டும், மீண்டும் தி.மு.க-விற்கு எதிரான நீர்த்துப்போன கொள்கைகளைக் கொண்ட கட்சிகளை ஆதரித்து தி.மு.க-வை தனிமைப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் முயற்சி செய்துகொண்டே வந்துள்ளது.
அதற்கான காரணத்தை கண்டறிவது கடினமல்ல. காங்கிரஸின் பாஜக, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு என்பது சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பரசியல் எதிர்ப்பாக மட்டுமே நிற்பது. அந்த வெறுப்பரசியலின் உள்ளடக்க வடிவமான பார்ப்பனீய வர்ண தர்ம சிந்தனையை எதிர்ப்பதில் காங்கிரஸ் முனைப்புக் காட்டாது. தி.மு.க வர்ண தர்ம சிந்தனையை சனாதன தர்மம் என்று தமிழ் வழக்கப்படி அழைக்கிறது; அதனை ஒழிப்பதை அரசியல் இலட்சியமாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி சட்டமன்றத்தில் கூறியுள்ளார். காங்கிரஸால் அவ்வாறு கூற முடியாது என்பதுடன், தி.மு.க-வின் சமூக நீதி, மாநில சுயாட்சி இலட்சியங்களை அதனால் முற்றிலும் ஏற்கவும் முடிவதில்லை. அதனால் தங்களுக்கு உறுத்தாத, கருத்தியலற்ற ஒரு மாநில கட்சியாக நடிகர் விஜய் கட்சி உருவானவுடன் அது அந்தக் கட்சியுடன் ஒருமித்து சங்கமித்துவிட்டது. காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பின் அடிப்படை கருத்தியல் பலவீனம் இதுதான்.
