காங்கிரஸ் உமியும், மாநில கட்சி அரிசியும்: ஒட்டுண்ணி அரசியலுக்குப் பெயர் கூட்டணியா?

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை

ஒரு கிராமத்து சொலவடை உண்டு. “நான் உமி கொண்டுவருகிறேன், நீ அரிசி கொண்டு வா; நாம் ஊதி ஊதி தின்னலாம்” என்பதுதான் அது. ஊதினால் உமி பறந்து போய்விடும்; உமியை சாப்பிடவும் முடியாது. அப்போது அரிசியைத்தான்  பகிர்ந்து உண்ண முடியும். ஆனால் உமியைக் கொண்டுவந்தவரும் ஏதோ பங்களிப்பு செய்ததுபோல பேசுவதை கிண்டல் செய்யத்தான் இந்த சொலவடை.

இந்திய தேர்தல் முறையில் பிறரை விட அதிக ஓட்டு வாங்குபவர்தான் ஒரு தொகுதியில் வெல்ல முடியும். அதனால் பரவலாகச் சிதறிய ஆதரவாளர்களைக் கொண்ட சிறிய கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களால் எந்த தொகுதியிலும் வெல்ல முடியாது. அதன் பொருட்டு பெரிய கட்சிகளிடம் கூட்டணி வைத்துக்கொண்டால்தான் சில தொகுதிகளில் வெல்ல முடியும். அப்படி கூட்டணி அமைக்க முனையும்போது எத்தனை தொகுதிகளை சிறிய கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் பேரம் நடக்கும்.

ADVERTISEMENT

ஏனெனில் கட்சிகளின் வாக்கு சதவீதத்தைத் துல்லியமாக அளக்க முடியாது என்பதுடன், அது தேர்தலுக்குத் தேர்தல் சற்றே மாறுபடலாம். அதைத் தவிரவும் தொகுதிகளை ஒதுக்கித் தரும் பெரிய கட்சிக்கும், அந்த கட்சிக்கும் உள்ள உறவின் தன்மையும் முக்கியத்துவம் பெறும். ஏனெனில் தலைமை தொகுதிகளை ஒதுக்கினாலும், பெரிய கட்சியின் வாக்காளர்கள் சிறிய கட்சிக்கும் வாக்களிக்க வேண்டுமல்லவா? அதனால்தான் கூட்டணியில் கணிதம் (அரித்மெடிக்ஸ்) மட்டும் போதாது, வேதியியல் (கெமிஸ்ட்ரி) வேண்டும் என்று பல உருவகங்களைச் சொல்வார்கள்.

இரண்டு கட்சிகள் கொள்கை, கருத்தியல் அளவிலும், தலைவர்கள், உள்ளூர் பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள் ஆகியோரிடையே உள்ள இணக்கமான உறவு என்ற அளவிலும் பொருந்திப் போனால் கூட்டணி சிறப்பாக அமைந்து ஒரு கட்சியின் வாக்குகள் இன்னொரு கட்சிக்குச் செல்லும். உறவில் எந்த மட்டத்தில் கசப்பு இருந்தாலும், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு கட்சியின் வாக்குகள் இன்னொரு கட்சிக்கு விழாமல் போகலாம். அப்போது கூட்டணி இரண்டு கட்சிகளுக்குமே பலன் தராது போகலாம்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தல் வந்தால் எல்லா மாநில கட்சிகளிடமும் இனிக்க, இனிக்க பேசுகிறது. இனிப்பு வாங்கித் தருகிறது. ஆனால் அந்தந்த மாநில தேர்தல்கள் வந்தால் மாநில கட்சிகளை வதைக்கிறது. அதிக தொகுதிகள் கேட்டு முரண்டு பிடிப்பது, எங்களுக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது, தலைவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது, போட்டி வேட்பாளர்களை நிறுத்துவது, வேறுபட்டு பேசுவது என பல அழிச்சாட்டியங்களை செய்கிறது.

பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற தேர்தல்களில் வென்று ஒன்றிய அரசை நடத்தி வருகிறது. காங்கிரஸ் சுதந்திர இந்தியாவில் தான் உருவாக்கி, காப்பதாக பெருமை கொள்ளும் பன்மைத்துவ, மதசார்பற்ற விழுமியங்களை தொடர்ந்து சிதைத்து வருகிறது. அது இதுவரை ஆட்சி செய்யாத மேற்கு வங்க மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றி விட்டது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் (காங்கிரஸ் முக்த் பாரத்) என்று முழக்கத்தையே உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இப்படி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள காங்கிரஸ், பாஜக-வை எதிர்ப்பதில்தானே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்? அதுதான் இல்லை. காங்கிரஸ் பாஜக-வை எதிர்த்து நிற்கும் மாநில கட்சிகளை பலவீனப்படுத்த விரும்புகிறது. மாநில தேர்தல்களில் பாஜக-வை எதிர்க்கும் கட்சிளை பலவீனப்படுத்திவிட்டு, நாடாளுமன்ற தேர்தலில் அவற்றுடன் கூட்டணி அமைக்கக்  கூப்பிடுகிறது.

இப்போதுள்ள மக்களவையில் காங்கிரஸ் 99 உறுப்பினர்களை கொண்டுள்ளது. அதில் குறைந்தது மூன்றில் ஒரு  பங்கு மாநில கட்சிகளின் கூட்டணியால் கிடைத்தவை. எதிர்வரும் தேர்தலில் ஒருவேளை பாஜக ஆதரவு சரிந்தாலும் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டு வெல்லக் கூடிய பெரிய மாநிலங்கள் எட்டுதான்.  அந்த அட்டவணையைப் பார்ப்போம்.

இவற்றில் 100 தொகுதிகளில் வென்றாலே அது பெரும் வெற்றியாகத்தான் இருக்கும். இந்த நிலையில் மாநில கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைக்காமல் காங்கிரஸால் ஒன்றிய அரசில் கூட்டணி அமைச்சரவை கூட அமைக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.

அதே சமயம், பாஜக செல்வாக்கு சரிந்தால் மாநில கட்சிகள் தனியாகவோ, பிற மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ அவற்றின் பலத்தால் வெல்லக்கூடிய பெரிய மாநிலங்கள் பன்னிரெண்டு மாநிலங்கள். அவற்றின் பட்டியல்.

வலுவான கூட்டணி அடையாளத்தை உருவாக்கி, பொதுவான கொள்கைகள், கருத்தியலை வடிவமைத்து, தலைமையையும் உருவாக்கினால்  மாநிலக் கட்சிகளின் மூன்றாவது அணியால் பெரும்பான்மைக்குத் தேவையான 272 தொகுதிகளைக் கூட வெல்ல முடியும்.

பாஜக காங்கிரஸைவிட வலுவாக பல மாநிலங்களில் வேரூன்றியிருப்பதால், (உதாரணமாக மஹாராஷ்டிரா, பீஹார், மேற்கு வங்கம்) அதனை எதிர்க்க காங்கிரஸும், பிற மாநில கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பதே நல்லது என்று பலரும் கருதலாம். ஆனால் காங்கிரஸ் அப்படி நினைக்கவில்லை. அது மாநில கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் தானே கால்பதிக்க வேண்டும், மாநில கட்சிகளுடன் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைக்கிறது.

இதற்கு காங்கிரஸ் சொல்லும் காரணம் வினோதமானது. மாநில அரசியல் வேறு; ஒன்றிய அரசியல் வேறு என்று கூறுகிறது. மாநில அரசியலில் மாநில கட்சிகள் பலவீனமானால் அவை எப்படி நாடாளுமன்ற தேர்தலில் வலுவாகப் போட்டியிடும்? மேலும் காங்கிரஸ் அந்த கட்சிகளுக்கு எதிராக மாநில தேர்தலில் பேசினால், அந்த கட்சிகளின் வாக்காளர்கள் எப்படி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை ஏற்றுக் கொள்வார்கள்? மாநில கட்சி வாக்குகள் எப்படி காங்கிரஸிற்கு விழும்? 

மாநில கட்சிகள் ஏன் பாஜக-வை எதிர்க்கின்றன?

மாநில கட்சிகளில் இரண்டு வகை. ஒரு வகை காங்கிரஸையே எதிர்த்து உருவானவை. மற்றொரு வகை காங்கிரஸிலிருந்து உருவானவை. காங்கிரஸையே எதிர்த்து கட்சிகள் உருவாக ஒரு காரணம், அந்த மாநிலங்களில் காங்கிரஸில் நில உடமை/ ஜாதீய/ முதலீட்டிய ஆதிக்க சக்திகள் செல்வாக்கு செலுத்தியது. மற்றொரு காரணம் மாநில அடையாளத்திற்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் இல்லாதது.

எனவே காங்கிரஸிற்கு எதிராகக் கேரளாவில் கம்யூனிஸ்டுகள், தமிழ்நாட்டில் தி.மு.க, வட மாநிலங்களில் ராம் மனோஹர் லோஹியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்கள் தலைமையில் சோஷலிஸ்டுகள், காஷ்மீரில் தேசிய மாநாடு, பஞ்சாபில் அகாலி தளம் போன்றவை உருவாயின. பெரும்பாலும் தலித் பகுஜன் சமூகங்கள் காங்கிரஸிற்கு எதிரான அணிகளாகவே மாறின.

காங்கிரஸ் கட்சியினுள் அதிகார மையம் டில்லியில் இருந்தது. மாநில காங்கிரஸிற்கு தலைவர் எல்லாம் இருந்தாலும், எல்லா முடிவுகளையும் டில்லியில்தான் எடுப்பார்கள். காலப்போக்கில் மக்களாட்சி வேரூன்றியபோது, மாநிலத்தில் தலைவர்களாக உருவானவர்களால் டில்லி கட்டுப்பாட்டில் இயங்க முடியவில்லை என்பதால் அவர்கள் பிரிந்து சென்று மாநில கட்சிகளை உருவாக்கினார்கள். 

இவ்வாறு உருவான மாநில கட்சிகள் மாநில நலன்களை, மாநில அடையாளத்தை முன்னிறுத்துபவை. இவை வெகுஜன அரசியலில் ஒன்றியத்தில் அதிகாரம் குவிவதை எதிர்த்து இயங்கும் மைய விலக்கு விசைகள். இவ்வாறு மாநில கட்சிகள் அதிகரித்ததற்கு எதிராகத்தான் பெரும்பான்மைவாத இந்து மத அடையாளத்தை முன்னிறுத்தி அதிகாரத்தை மையத்தில் குவிக்கும் பாஜக வலுவடைந்தது. அது மைய ஈர்ப்பு விசையின் வடிவமானது. எனவே பாஜக-விற்கான முழுமையான முரணரசியல் எதிரிகளாக பல மாநில கட்சிகளே இயங்குகின்றன.

காங்கிரஸ் கட்சி இரண்டும் கெட்டானாக இருக்கிறது. அதனால் பாஜக போல பெரும்பான்மை மத அடையாளவாத அரசியல் செய்ய முடியாது. அதே நேரம் மைய விலக்கு மாநில விசைகளை முழுமையாக அங்கீகரிக்கவும் முடியாது. அதன் வரலாற்றில் அதுவும் மைய ஈர்ப்பு விசையாகத்தான் விளங்கியுள்ளது. காங்கிரஸ் மிதவாத மைய ஈர்ப்பு விசை; பாஜக தீவிரவாத மைய ஈர்ப்பு விசை.

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு உணர்த்துவது என்ன?

காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை வாரிசு அரசியல் தலைமை என்று பலர் கூறுவார்கள். உண்மையில் அது பிரச்சினையேயில்லை என்று கூறவேண்டும். அது கட்சியை ஒருங்கிணைக்கும் சரடாக இருப்பதால் எந்த சிக்கலுமில்லை. உண்மையான பிரச்சினை என்னவென்றால் அதனால் மாநில தலைமைகளை உருவாக்க முடியாததுதான். மாநில காங்கிரஸ் அதன் முடிவுகளை எடுக்கும் சுதந்திரத்தை அதன் மைய ஈர்ப்புத் தன்மையால் வழங்க முடிவதில்லை.

ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றால் யார் முதல்வராவது என்பதை அந்த மாநில கமிட்டிதானே முடிவு செய்ய வேண்டும்? அல்லது வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூடித்தானே முடிவு செய்ய வேண்டும்? அப்படி நடக்காது. பல்வேறு குழுக்கள் சென்று டில்லியில் முற்றுகை இடுவார்கள். மேலிட பார்வையாளர்கள் மாநிலத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள். ஏகப்பட்ட பஞ்சாயத்து நடந்த பிறகும் திருப்திகரமான தீர்வு பல சமயம் உருவாகாது. பஞ்சாப் பஞ்சாயத்தில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் பாஜக-விலேயே இணைந்து விட்டார்.   

இப்போது கேரளாவில் வென்ற பிறகுகூட சதீசனை தேர்வு செய்வதில் நெருக்கடி ஏற்பட்டது. மேலிடம் கே.சி.வேணுகோபாலை முதல்வராக்க விரும்பியது. சதீசன் கடுமையாகப் போராடித்தான் தன் உரிமையை நிலைநாட்ட வேண்டியிருந்தது.  கர்நாடகாவில் சீதாராமையாவும், டி.கே.சிவகுமாரும் எத்தனை முறை டில்லி சென்றிருப்பார்கள் என்பதற்குக் கணக்குக் கிடையாது. அவர்களது 2.5 ஆண்டு+2.5 ஆண்டு முதல்வர் பதவி பகிர்வு நடைமுறைக்கு வந்த பின்னும், புதிய மந்திரி சபை அமைக்க டில்லியில் பலரும் முகாமிட்டனர். கட்சியிலேயே எந்த முடிவையும் மாநிலத்தில் எடுக்க முடியாது என்றால் அந்த கட்சி எப்படி மாநில சுயாட்சிக்கு ஆதரவாக இருக்க முடியும்? அதனால் வேறு வழியில்லாமல்தான் வேண்டா வெறுப்பாக மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறது காங்கிரஸ்.

தமிழ்நாட்டில் நடந்தது என்ன? Congress Parasitic Politics

காங்கிரஸ் கட்சி வரலாற்றிலேயே தமிழ்நாட்டில் இப்போது நடந்திருப்பது போன்ற அபத்தம் நடந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது. ஜெயலலிதா, கலைஞர்  மறைந்தபிறகு எப்படியாவது தமிழ்நாட்டில் கால்பதிக்க வேண்டும் என்று நினைத்த பாஜக, அ.இ.அ.தி.மு.க-வை பிளந்தும், ஒட்டியும் பொம்மலாட்டம் நடத்தத் துவங்கியது. தி.மு.க தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் தன் முதல் உரையிலேயே தன்னுடைய அரசியல் பாஜக-வை எதிர்த்துத்தான் என்பதை ஐயம் திரிபுற அறிவித்தார். அதன்படியே காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்து 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் பெரும் வெற்றிகளை ஈட்டினார்.

இந்த தேர்தல்களில் நிகழ்ந்த முக்கியமான மாற்றம் என்னவென்றால், மே 2009 ஈழப்படுகொலைகளை ஒட்டி காங்கிரஸ் மீது பரவலாக ஏற்பட்டிருந்த கசப்பு மறைந்து, ராகுல் காந்திக்கு தமிழ்நாட்டில் உருவான வெகுஜன ஏற்பு எனலாம். மு.க.ஸ்டாலினுக்கும் அவருக்கும் இடையிலான இணக்கமான உறவு பாஜக எதிர்ப்பின் முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக 2019-ஆம் ஆண்டே முன்மொழிந்தார் ஸ்டாலின். ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையை கன்னியாகுமரியில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். சமீபத்திய தேர்தலுக்கு முன்னால் கூட தொலைகாட்சி நேர்காணலில் ராகுல் காந்தியை நம்பிக்கை நட்சத்திரம் என்று வர்ணித்தார் ஸ்டாலின்.

ஆனால் விஜய் கட்சி துவங்கி, பெரிய அளவில் கூட்டம் சேர்வதை பார்த்தபோது ராகுல் காந்தி மனதில் ஒரு ஊசலாட்டம் பிறந்துள்ளது. காரணம் 2009-ஆம் ஆண்டே விஜயை டில்லிக்குக் கூப்பிட்டு பேசியுள்ளார் ராகுல் காந்தி. இதில் பெரும் வியப்பென்னவென்றால் ராகுலின் அரசியல் பயிற்சிக்கு முற்றிலும் எதிர்மறையானவை விஜயின் அரசியல் செயல்பாடுகள்.

ராகுல் நாடு முழுவதும் மக்களோடு மக்களாக நடந்து சென்றவர். தினசரி நூற்றக்கணக்கானவர்களோடு அமர்ந்து மனம் விட்டு பேசியவர். இந்தியாவானாலும், வெளி நாடுகளானாலும் மாணவர்களை சந்திக்கும்போது அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் முகம் சுளிக்காமல் பதில் சொல்பவர். ஊடகங்களை தொடர்ந்து சந்திப்பவர். விஜயோ ஊடகம், நேர்காணல் என்றாலே பதறியடித்து விலகிச் செல்பவர். எழுதிக்கொடுத்த வசன ங்களை மட்டும் படித்துவிட்டுச் செல்பவர். ராகுல் திறந்த புத்தகம் என்றால், விஜய் ஓட்டுக்குள் பதுங்கிய ஆமை. அதைப்பற்றி ராகுல் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

விஜய் தன் கூட்டக்காட்சி அரசியலுக்காக தாமதமாகச் சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த போது கூட ராகுல் விஜயை அழைத்துப் பேசினார். விஜய் பொதுவெளியில் அந்த துயரத்திற்கு தன்னளவில் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது ராகுலுக்குத் தவறாகத் தோன்றவில்லை. பாசிசத்தை எதிர்க்க முனையும் ராகுலுக்கு விஜய் பிம்ப வழிபாட்டின் அவலம் புரியவில்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்று திகைப்பாக இருக்கிறது. இத்தனைக்கும் விஜய் பாஜக-வை கண்டித்து எதுவுமே பேசுவதில்லை; ராகுல் காந்தியின் பாஜக எதிர்ப்பு முன்னெடுப்புகளுக்கு விஜய் எந்த ஆதரவும் தெரிவித்ததில்லை. ஜன நாயகன் படம் சென்சாரால் முடக்கப்பட்ட போது தனக்காக க் குரல் கொடுத்த ராகுல் காந்திக்கு நன்றிகூட கூறவில்லை விஜய்.

இத்தனைக்கும் பிறகும் தமிழ்நாட்டு அரசியல் களத்திற்குத் தொடர்பேயில்லாத பிரவீன் சக்ரவர்த்தியை விஜயுடன் பேசுவதற்கு அனுப்பினார் ராகுல். தமிழ்நாட்டில் கூட்டணியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகைதானே பேசி முடிவு செய்ய வேண்டும்? அதுதான் கிடையாது. அவர் ஒரு பேச்சுக்குத்தான் தலைவரே தவிர, டில்லியுடன் தொடர்புள்ள அத்தனை பேருமே காங்கிரஸ் சார்பாக கருத்துக்களை தெரிவிப்பார்கள். யாருமே செல்வப்பெருந்தகையை தலைவர் என்றுகூட குறிப்பிட மாட்டார்கள். தலைக்குத் தலை நாட்டாமை என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸ். சத்தியமூர்த்தி பவனில் கட்சிக் கூட்டங்கள் பெரும் கலவரத்தில் முடியும் என்பது அனைவரும் நன்கறிந்த நடைமுறையாகும்.

செல்வப்பெருந்தகை என்றல்ல. வேறு யார் தலைவராக இருந்தாலும் இதுதான் நிலை. ஏனெனில் மாநிலத்தில் முடிவெடுப்பது என்ற பழக்கமே கிடையாது. எதுவானாலும் டில்லிதான். மேலிடம்தான். இந்த நிலையை மாற்றுவதற்கான எந்த முயற்சியையும் ராகுல் காந்தி எடுப்பதில்லை. மாறாக கோவாவைச் சேர்ந்த கிரீஷ் சோடங்கரை கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அனுப்பினார். எதற்காக மாநிலத்திற்கு தொடர்பற்ற ஒருவர் கூட்டணி பேச வரவேண்டும்? அதுதான் காங்கிரஸ் மரபு. அப்போதுதான் அவர்கள் தேசிய கட்சி என்பது உறுதிப்படும்.

தி.மு.க ஏற்றுக்கொள்ளாது என்று நன்கு தெரிந்தே ஆட்சியில் பங்கு கேட்டார்கள். அதிக தொகுதிகளைக் கேட்டு அடம் பிடித்தார்கள். அத்தனைக்கும் பிறகும் ராகுல் ஸ்டாலினுடன் சேர்ந்து பிரசாரம் செய்ய மறுத்தார். அவர்கள் கோரிப்பெற்ற 28 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற அக்கறை கூட அவருக்கு இல்லை. அவர் மீது வைத்த மரியாதைக்காக தி.மு.க-வை முடிந்த வரை தண்டித்தார் ராகுல் (Congress Parasitic Politics). இப்போது விஜய் அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்களைப் பெற்றதும். பிரவீன் சக்ரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினர் ஆனதும்தான் சாதனைகள் என்று நினைக்கிறாரா என்று வியப்பாக இருக்கிறது.

இதெல்லாம் கூட பிரச்சினையில்லை. தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்ட பிறகு, இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு தவெக-வைதானே கூப்பிட வேண்டும்? எந்த நம்பிக்கையில் தி.மு.க-வை கூப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை. பிரசாரம் முழுவதும் தி.மு.க-வை தீய சக்தி என்று வெறிபிடித்தது போல கூவினார் விஜய். அவருடனும் கூட்டணி; தி.மு.க-வுடனும் கூட்டணி என்றால் தி.மு.க தொண்டர்களும், வாக்காளர்களும் என்ன நினைப்பார்கள் என்று சிறிதாவது சிந்தித்துப் பார்க்கிறதா காங்கிரஸ்? பார்க்காது.

காரணம் இத்தனை முரண்பாடுகளுக்கும் மூலாதாரம் ஒன்று இருக்கிறது. அதுதான் குரியன் ஜோசப் குழு அறிக்கை. தி.மு.க தன் தேர்தல் அறிக்கையில் முதல் புள்ளியாக மாநில சுயாட்சி குறித்த குரியன் ஜோசப் குழு அறிக்கையை வைத்துள்ளது. காங்கிரஸும், ராகுலும் அந்த அறிக்கை குறித்து என்ன நினைக்கிறார்கள்? இந்தியா கூட்டணி அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கத் தயாரா? இந்த கேள்விக்கான பதிலில் இருக்கிறது எல்லா புதிர்களுக்கான விளக்கங்களும்.

பாஜக, காங்கிரஸ் இரண்டுமே மாநிலங்கள் வெறும் நிர்வாக அலகுகளாக, தன்னளவிலான மாநிலங்களாக (state-in-itself) இருக்க வேண்டும் என்று நினைக்கின்றன; தனக்கான மாநிலங்களாக (state-for-itself) தன்னுணர்வு பெறுவதை விரும்புவதில்லை. பிரவீன் சக்ரவர்த்திகள் இறக்குமதி செய்யப்படுவதன் மர்மம் அதுதான். மாநில கட்சிகள் இந்த மாய்மாலத்தை உணர்ந்து தெளிவு பெற வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:  

Social Psychology of Rumors - rajan kurai

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share