மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் 20 எம்.பி.க்கள், திடீரெனத் தங்களை ‘நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்தியா’ (NCPI) என்ற, யாருக்கும் தெரியாத திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கட்சியுடன் இணைத்துக் கொண்டுள்ள விவகாரம், அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால், இது வெறும் கட்சி மாற்றம் அல்ல; ‘கட்சித் தாவல் தடைச் சட்டத்தில்’ (Anti-Defection Law) இருந்து தப்பித்து, தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு ‘நூதன’ வியூகம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
கட்சித் தாவல் தடைச் சட்டப்படி, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பிரிந்தால் மட்டுமே அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது. இத்தனை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும் நேரடியாகப் பாஜகவில் இணைந்தால், அது சட்டச் சிக்கலை உருவாக்கும் என்பதால், மிகத் தந்திரமாக ஒரு சிறிய கட்சியுடன் (NCPI) இணைவதாக அறிவித்து, அதன் மூலம் தங்களைப் ‘பாதுகாப்பாக’ காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். “நாங்கள் கட்சியையே மாற்றிவிட்டோம், எனவே எங்கள் எம்.பி. பதவி பறிபோகாது” என்பதுதான் இவர்களின் வாதம்.
இந்த விளையாட்டுக்குப் பின்னால் பாஜகவின் நுணுக்கமான கைகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வீட்டில் நடைபெற்ற ரகசிய ஆலோசனைகள், சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்த வேகம் என எல்லாமே இது நன்கு திட்டமிடப்பட்ட ‘ஆபரேஷன்’ என்பதை உறுதிப்படுத்துகின்றன.
வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முக்கியமான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு பெரும் பலம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், நாடாளுமன்றத்தில் நினைத்ததைச் சாதிக்கும் பெரும்பான்மையை உறுதி செய்ய பாஜக துடிக்கிறது.
ஆனால், இந்த வியூகத்தில் ஒரு பெரிய ‘ட்விஸ்ட்’ உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை முன்வைத்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “ஒரு கட்சியின் உயர்நிலைக் குழுவோ அல்லது ஒட்டுமொத்த கட்சியோ இன்னொரு கட்சியுடன் சேராமல், எம்.பி.க்கள் மட்டும் தன்னிச்சையாக ஒரு கட்சியுடன் இணைவது சட்டப்படி செல்லாது” என்று அபிஷேக் பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உள்ளிட்ட பலரும், இது வெறும் ‘சட்டத்திற்குப் புறம்பான தப்பிக்கும் முயற்சி’ என்று வாதிடுகின்றனர். எனவே, சபாநாயகர் ஓம் பிர்லாவின் மேஜையில் இருக்கும் இந்தக் கோப்பு, இந்திய அரசியலில் நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு இட்டுச் செல்லும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
சிறிய கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, பெரிய கட்சியை உடைத்து, சட்டத்தின் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் இந்த ‘நூதன வியூகம்’ வெற்றி பெறுமா அல்லது சட்டத்தின் பிடியில் சிக்கிச் சிதறுமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
