தேசங்கள் மட்டுமல்ல… ஒரு மாநிலமே கூட செல்போனால் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் (GR Swaminathan) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ”Raising Humans Not Device” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேசியதாவது: நான் ஒரு நீதிபதி; 26 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 9 ஆண்டுகளாக நீதிபதியாகவும் பணியாற்றி நூற்றுக்கணக்கான வழக்குகளைக் கவனித்துவிட்டேன்.
மணமுறிவு தொடர்பான சிக்கல்களுக்கு முக்கிய காரணம் இந்த மொபைல் போன்கள் தான்; இதனாலேயே பல உறவுகள் முறிந்து கொண்டிருக்கின்றன. அந்த அபாயங்களை இந்தப் புத்தகம் மிக அழகாகவும், சிறப்பாகவும் எடுத்துரைக்கிறது.
இந்த புத்தகத்தில் ‘ரேசிங் ஹூமன்ஸ் நாட் டிவைசஸ்’ (Raising Humans Not Devices) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படித்ததில் இருந்து, ‘மனிதர்களைச் சாதனங்களிடமிருந்து பாதுகாத்தல்’ (Protecting Humans Against Devices) என்றுதான் நான் இதைப் புரிந்துகொள்கிறேன். அதேபோல், எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது.
‘ஜனநாயகத்தைச் சாதனங்களிடமிருந்து பாதுகாத்தல்’ (Protecting Democracy Against Devices) என்ற தலைப்பில் அடுத்த புத்தகம் வரலாம் என்று நான் நினைக்கிறேன். இந்தச் சாதனங்கள் குறித்து அஸ்வத்தாமன் பேசும்போது, ‘இதன் மூலம் இரண்டு தேசங்கள் அழிந்துபோயின’ என்றார். தேசங்கள் மட்டுமல்ல, ஒரு மாநிலமே கூட இதன் மூலம் அழிந்துவிடும் என்று நான் கருதுகிறேன். எனவே, அடுத்த புத்தகம் அது குறித்ததாக அமையலாம். இவ்வாறு நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பேசினார்.
