மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (TMC) பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, மமதா பானர்ஜி (Mamata Banerjee) மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் தலைமைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிருப்தி வெடித்தது.
இந்த கோபத்தைத் தணிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸின் அனைத்து கமிட்டிகளையும் கலைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார் மமதா பானர்ஜி.
60 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு
ஆனாலும் அதிருப்தி அலை ஓயவில்லை. திரிணாமுல் காங்கிரஸின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் மமதாவுக்கு எதிராகத் திரும்பி, ரிதப்ரதா பானர்ஜி என்பவரைத் தங்கள் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துவிட்டனர். ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்தான் உண்மையான கட்சி என மேற்கு வங்க சபாநாயகரும் அங்கீகரித்துவிட்டார்; ரிதப்ரதா பானர்ஜிதான் மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்.
20 எம்.பிக்கள் எதிர்ப்பு
அதேபோல, திரிணாமுல் காங்கிரஸின் மொத்தம் உள்ள 29 மக்களவை எம்பிக்களில், 20 எம்பிக்கள் மமதா பானர்ஜிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த 20 அதிருப்தி எம்பிக்களும் மத்திய அமைச்சரும், பாஜகவின் மேற்கு வங்கப் பொறுப்பாளருமான பூபேந்திர யாதவ் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். மக்களவையில் 20 எம்.பிக்களும் தனிப் பிரிவாக செயல்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
மாநிலங்களவையிலும் மமதாவுக்கு இருந்த திரிணாமுல் காங்கிரஸின் 13 எம்பிக்களில் 5 பேர் மட்டுமே தற்போது அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுகேந்து சேகர் ராய் போன்ற மூத்த தலைவர்கள் ஏற்கனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
டெல்லியில் அடுத்தடுத்த சந்திப்புகள்


இந்த பின்னணியில் டெல்லியில் முகாமிட்டுள்ள மமதா பானர்ஜி, நேற்று முன்தினம் ஜூன் 8-ந் தேதி ‘இந்தியா கூட்டணி’ கூட்டத்தில் பங்கேற்றார். பொதுவாக காங்கிரஸை ’எதிரி’யாக பார்க்கும் மமதா பானர்ஜி ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சிதான் பாஜகவை எதிர்க்கக் கூடிய மைய அச்சு என்கிற வகையில் மமதா பேசினார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஆரத் தழுவி அன்பையும் வெளிப்படுத்தினார் மமதா பானர்ஜி.

இதனைத் தொடர்ந்து சோனியா காந்தி வீட்டுக்கு நேற்று ஜூன் 9-ந்தேதி சென்றார்மமதா பானர்ஜி. அங்கு சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் அடுத்த கட்டமாக இன்று ஜூன் 10-ந் தேதி ராகுல் காந்தியுடன் மமதாவின் அரசியல் வாரிசான அபிஷேக் பானர்ஜி சுமார் 90 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரஸுடன் (CONGRESS) திரிணாமுல் காங்கிரஸ் (TMC) இணைப்பு?
சட்டசபை தேர்தல் தோல்வி, அதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பிளவு, தற்போது காங்கிரஸ் தலைவர்களுடனான அடுத்தடுத்த மமதா – அபிஷேக் பானர்ஜி சந்திப்புகள் ஆகியவை, காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸை மமதா பானர்ஜி இணைக்கப் போகிறார் என்கிற யூகங்களை கிளப்பிவிட்டுள்ளன.
காங்கிரஸுடன் திரிணாமுல் காங்கிரஸ் இணைந்தால் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் பதவி மமதா பானர்ஜிக்கு; காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி அபிஷேக் பானர்ஜிக்கு என்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இதற்கான சாத்தியங்களே இல்லை; இவை அனைத்தும் ‘சந்திப்புகள்’ ‘ஆலோசனைகள்’ மட்டும்தான் என்கிறது திரிணாமுல் காங்கிரஸ். இதனால் டெல்லியிலும் மேற்கு வங்கத்திலும் அரசியல் களம் பரபரத்து கொண்டிருக்கிறது.
