“பொறுப்பற்ற ஆட்சி…” கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குழந்தை பலி.. தமிழக அரசை சாடிய கனிமொழி!

Published On:

| By Pandeeswari Gurusamy

Kanimozhi

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில், வடமாநிலத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பீகார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த வடமாநிலத் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை நேற்று மாலை திடீரென மாயமானது.

ADVERTISEMENT

பெற்றோரும் அப்பகுதி மக்களும் குழந்தையைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில் உடல் முழுவதும் காயங்களுடன் அந்தக் குழந்தை மயங்கிக் கிடப்பதை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பெண்கள் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், குழந்தையை மீட்டு உடனடியாக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பிஞ்சு குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

ADVERTISEMENT

பொதுமக்கள் முற்றுகை – 4 பேருக்குத் தொடர்பு?

இச்சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்பவரை பொதுமக்கள் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஒரே அறையில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் இணைந்து இந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்கக் கோரி, சிப்காட் காவல் நிலையத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

திமுக எம்பி கனிமொழி கண்டனம்

இந்தக் கொடூர சம்பவம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?”

என அவர் தனது பதிவில் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share