அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவி சண்முகம் எம்.எல்.ஏ.வுக்கு (CV Shanmugam) அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி (Agri Krishnamurthy)_ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தொண்டர்களையும் இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார் சி.வி. சண்முகம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கில்லுக்கீரையாக சிவி சண்முகம் நினைக்க வேண்டாம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களைப் போன்ற எஜமானர்கள் தொண்டர்களை அடிமைப்படுத்த முடியாது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர்களாக இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகச் சிறப்பான முறையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து இந்த இயக்கத்தைப் பற்றி இழிவுபடுத்தி இந்த இயக்கத்தினுடைய பொதுச் செயலாளரையும்ம், கட்சியைப் பற்றியும் இழிவுபடுத்திப் பேசினால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள். அரசியல் அரங்கத்திலே இருந்து உங்களை மக்கள், இந்த இயக்கம், தொண்டர்கள் அப்புறப்படுத்தி விடுவார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் பணிவன்போடு சொல்லிக் கொள்கிறேன்.
மேலும், ஆய்வுக்கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தினுடைய ஆய்வுக்கூட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதிலே தொண்டர்களுடைய கருத்துக்களையும், நிர்வாகிகளுடைய கருத்துக்களையும் கேட்டிருக்கிறார்.
அதேபோல மற்ற மாவட்டங்களிலே அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து அவருடைய கருத்துக்களைக் கேட்ட பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயற்குழுவை அண்ணன் எடப்பாடியார் கூட்டுவார். அதன் பிறகு கழகத்தினுடைய பொதுக்குழுவை கூட்டுவார். எதற்கும் அஞ்சாதவர் எடப்பாடி பழனிசாமி என்பதை முதலில் சி.வி. சண்முகம் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பொதுக்குழுவை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி அச்சப்படவில்லை, செயற்குழுவை கூட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி அச்சப்படவில்லை. எதற்கும் அஞ்சாத சிங்கம் தான் எடப்பாடி பழனிசாமி என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீங்களும் அறிந்திருக்கின்றீர்கள். ஆனால் இன்றைய இந்த இயக்கத்திலே ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கு தவறான செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கிற சி.வி. சண்முகம் அவர்களே, உங்களுடைய வார்த்தைகளைக் கட்டுப்பாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது என்பதை இந்த நேரத்திலே சொல்லி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் எடப்பாடி பழனிசாமி பின்னால் உறுதியாக வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலாக இருந்தாலும் அல்லது வருகின்ற சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், எந்தத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலே அமைகின்ற கூட்டணிதான் தமிழகத்திலே வெற்றி பெறும் என்பதை இந்த நேரத்திலே தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தி இருந்தார்.
