வைஃபை ஆன் செய்ததும், “விழுந்தால் என்ன? எழுந்து ஓடு! தோல்வி தழும்பு, வெற்றிக் கவசம்!” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. இது எந்த கட்சிக்கு பொருந்துதோ?
அப்படியெல்லாம் இல்லை.. எல்லா கட்சிக்கும் எல்லா மனிதருக்கும்தான் பொருந்துமே.. நடப்புகளை ஷேர் செய்யறேன் ப்ரோ..
திமுக (DMK) குறித்த யூகங்கள்
திமுகவில நிறைய மாற்றம் வரப் போகுதுன்னு ஏகப்பட்ட யூகங்கள் ப்ரோ..
- திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை மாற்றிவிட்டு ஆ.ராசாவை நியமிக்க போறாங்க…
- திமுக செயல் தலைவராக கனிமொழியை நியமிக்க போறாங்க..
- திமுக மா.செ.க்கள் எண்ணிக்கையை 117 ஆக அதிகரிக்கப் போறாங்க…
- தேர்தல் தோல்விக்கான 36 பேர் கொண்ட கமிட்டி அறிக்கையில மா.செ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டுகள்.. நடவடிக்கை பாயப் போகுது..
- உதயநிதி ஸ்டாலின், சபரீசன் இடையே பிளவு.. ரெண்டு பேரும் தனி டீமா இருக்காங்க.. உதயநிதியை கட்சிகாரங்க பார்க்க முடியலை..
இப்படிதான் ஏகப்பட்ட விமர்சனங்கள், யூகங்கள் வரிசைகட்டி பத்திரிகைகள், டிவி சேனல்கள், சோசியல் மீடியாக்களில வருதுங்க ப்ரோ..

திமுக பொதுச்செயலாளர் பதவி
இதெல்லாமே உண்மைங்களா ப்ரோ.. விசாரிச்சுட்டீங்களா?
ஒவ்வொன்னா சொல்றேன் கேளுங்க ப்ரோ..
திமுகவைப் பொறுத்தவரைக்கும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் என்பதுதான் ஹை கமாண்ட்..
இதுல தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளை திமுகவோட இதயம்னு சொல்ற பொதுக்குழுதான் தேர்ந்தெடுக்கும்..
முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் அப்படிங்கிறது தலைவரின் நியமனங்கள்தான்..
இப்ப பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகனை மாத்திட்டு ஆ.ராசாவையோ அல்லது வேறு ஒருவரையோ நியமிக்கப் போறாங்களா?ன்னு ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிச்சப்ப, “இந்த மாதிரி தகவல்கள் தொடர்ந்து வந்துகிட்டு இருக்கிற நிலைமையில நேத்து வழக்கம் போல தனக்கே உரிய ”பவுடர் ஸ்டைலுடன்” எந்தவித சலனமும் தொய்வும் இல்லாம அறிவாலயத்துக்கு வந்தார் துரைமுருகன்.. ஸ்டாலினை சந்திச்சு பேசிட்டு தன்னோட அறைக்கு போய் கட்சிக்காரங்ககிட்ட சகஜமாதான் பேசினார்..
”நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.. எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.. ஆக்டிவ்வா இருக்கிறேன்”ன்னு ஸ்டாலின்கிட்ட காட்டிக்கிறதுக்கும் கூட துரைமுருகன் நேத்து அறிவாலயம் வந்திருக்கலாம்தான்..
இன்னொன்னுங்க.. துரைமுருகன் விஷயத்துல ஸ்டாலின் அவ்வளவு சீக்கிரமா முடிவு எடுத்துவிடவும் மாட்டார்..
ஏன்னா, லோக்சபா எலக்ஷன் அப்ப மகன் கதிர் ஆனந்துக்கு துரைமுருகன் சீட் கேட்டார்.. ஸ்டாலினும் சரின்னு கொடுத்துட்டார்..
இந்த எலக்ஷனப்ப துரைமுருகனுக்கு சீட் கொடுக்க கட்சியே எதிர்த்தது.. அவரு தோற்க சான்ஸ் இருக்குன்னு உளவுத் துறை போலீசும் சொன்னது.. ஆனாலும் துரைமுருகன் சீட் கேட்டாரு.. ஸ்டாலினும், “அண்ணே உங்களுக்கு உடம்பு சரியில்லை.. எதுக்கு போட்டி போடனும்”னு சொன்னாரு.. ஆனாலும் துரைமுருகன் பிடிவாதமாக கேட்டதால சீட் கொடுத்துட்டார்..
அதே மாதிரி மகன் கதிர் ஆனந்துக்கு மா.செ. பதவியை கேட்டார் துரைமுருகன்.. ஆரம்பத்துல ஸ்டாலின் மறுத்துட்டார்.. துரைமுருகன் ரொம்பவே பிடிவாதம் பிடிச்சு மகனுக்கு மா.செ. போஸ்ட் வாங்கிட்டார்..
துரைமுருகனைப் பொறுத்தவரைக்கும், ”திமுக எப்படியும் ஜெயிச்சுடும்.. நாம மறுபடியும் மந்திரியாகிடுவோம்”னு ரொம்பவே நம்பிக்கையா இருந்தவர்தான்.. திமுக ஜெயிச்சிருந்தா துரைமுருகனுக்கு மந்திரி பதவி தராம ஸ்டாலின் இருந்திருக்கவும் மாட்டார்.. இவ்வளவும் ஏன்னா, திமுகவிலேயே ரொம்ப சீனியர் லீடர்.. கலைஞரோட அவ்வளவு நெருக்கமா இருந்தவர்.. அவர் விஷயத்துல எல்லாம் அப்படி எல்லாம் பட்டுன்னு முடிவெடுக்கமாட்டார் அப்படிங்கிறதுக்கு சொல்றேன்..
இப்பவும் துரைமுருகன், “நான் நல்லாதான் இருக்கேன்”ன்னு அறிவாலயத்து வந்து போகிறாரு.. அப்படி இருக்கும் போது “பொதுச்செயலாளர்” மாற்றம் அப்படின்னு எப்படி ஸ்டாலினால் யோசிக்க முடியும்?..
ஒருவேளை துரைமுருகன் ஆக்டிவ்வா இல்லாம இருந்தாலும் கூட கட்சியோட பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்குமே தவிர திடீர்னு ஆ.ராசாவையோ வேறு ஒருத்தரையோ நியமிக்கிற பழக்கமும் திமுகவில் இல்லை…
இதுல இன்னொரு விஷயமும் இருக்கு.. துரைமுருகன், தமிழ்நாட்டோட மிகப் பெரிய ஜாதியான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.. அவரை ’டக்’ன்னு மாற்றிவிட்டு இன்னொருத்தரை எல்லாம் நியமிக்கிறதும் ஈஸியான முடிவும் இல்லைங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ..

திமுக செயல் தலைவரா கனிமொழி?
அடுத்ததா திமுக செயல் தலைவராக கனிமொழியை நியமிக்க போறாங்கன்னு சொல்றதை பத்தியும் விசாரிச்சோம்.. இந்த கேள்வியையே விரும்பாத முன்னாள் அமைச்சர் ஒருவர், “என்னங்க சார்.. ஸ்டாலின் ஆக்டிவ்வாதானே இருக்கிறார்? இப்போ செயல் தலைவர் பதவிங்கிற பேச்சு எதுக்கு வரனும்? அன்னைக்கு தலைவர் கலைஞர் மருத்துவமனையில் இருந்தாரு.. அந்த அசாதாரண சூழ்நிலையில் ஸ்டாலினை, செயல் தலைவராக்கினோம்.. இப்ப அதுக்கான எந்த ஒரு கிரவுண்டுமே இல்லையே.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க”ன்னு சொல்றார்..
திமுக மா.செ.க்கள் எண்ணிக்கை அதிகரிப்பா?
திமுக மா.செ.க்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறாங்களான்னும் கேட்டப்ப, “விஜய் ஆட்சி அமைச்ச பிறகு தவெகவுக்கு எந்த கட்சியில இருந்து அதிகமா போறாங்க? அதிமுகவில இருந்துதானே.. திமுகவில இருந்து யாரும் அங்கே போகாம கட்சியிலதான் இருக்கிறாங்க.. அதே மாதிரி அதிமுகவில இருந்து திமுகவுக்கும் வர்றாங்க..
இப்படி ஒரு சூழ்நிலை இருக்கும் போது, 2 சட்டசபை தொகுதிக்கு 1 மாவட்ட செயலாளர்னு மாற்றம் செய்யுறோம்னு வெச்சுக்குங்க.. இதுல அதிருப்தி அடைகிறவங்க எங்கே போவாங்க? தவெகவுக்குதானே.. ‘சிவனே’ன்னு இருக்கிறவங்களை நாமளே ‘சீண்டிவிடுற’ மாதிரி வேலையை கட்சி தலைமை செய்ய சான்ஸ் இல்லைன்னுதான் நினைக்கிறோம்”ன்னும் ஷேர் செய்யுறாங்க ப்ரோ..

தேர்தல் தோல்வி குழு அறிக்கை
தேர்தல் தோல்விக்கான குழுவோட அறிக்கையை பத்தி ஏகப்பட்ட செய்திகள் வருதுங்களே ப்ரோ..
ஆமாங்க ப்ரோ.. நானும் பார்த்தேன்.. திமுகவோட 36 பேர் கொண்ட குழு மாவட்டங்களுக்கு போய் கட்சிக்காரங்க, நிர்வாகிகள்கிட்ட பேசி வாங்கின விவரங்களை அறிக்கைகளாக தயாரிச்சு ஸ்டாலின்கிட்ட கொடுத்துகிட்டு இருக்காங்க..
இந்த குழுவை பத்தி ஏற்கனவே சில இடங்களில் தொண்டர்கள்கிட்ட குமுறல் அதிகமா இருக்கிறதாம்.. நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள், “கட்சியோட தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்னு பாரபட்சம் இல்லாம ஆய்வு செய்யத்தான் ஸ்டாலின் இந்த குழுவை அமைச்சாரு..
ஆனா சில மாவட்டங்களில்ல இந்த குழுவில இருக்கிறவங்க மாவட்ட செயலாளர் புக் பண்ணின ரூம்ல தங்கிட்டு மாவட்ட செயலாளரோட விருந்தினரா இருந்துட்டு அவர் கொடுத்தனுப்பின காரில வந்துட்டு விசாரணை நடத்தினாங்க.. அப்படியானவங்க கொடுக்கிற அறிக்கையில மாவட்ட செயலாளர்கள் தப்பு செஞ்சிருக்காங்கன்னு தெரிஞ்சிருந்தாலும் அதை பத்தி எழுதியா கொடுக்க போறாங்க?”ன்னு குமுறலோட கேட்கிறாங்க..
இதை பத்தி சில மா.செ.க்கள்கிட்ட பேசுனப்ப அவங்க ஒரு சம்பவத்தை விலா வாரியா சொல்றாங்க.. என்னான்னா, “எலக்ஷன் முடிஞ்ச பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருந்தாரு.. அப்ப தேர்தல் தோல்விக்கு பல விஷயங்களை பலரும் சொன்னாங்க.. திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ரொம்பவே வெளிப்படையாக பல விஷயங்களை அந்த கூட்டத்துல உடைச்சுவிட்டாரு..
அதாவது, “விசில் சின்னம்தான் ஜெயிக்கிற மாதிரி இருக்கு.. நாம உஷாரா இருக்கனும்னு எலக்ஷனுக்கு 6 மாசத்துக்கு முன்னாடியே முதன்மை செயலாளர்கிட்ட சொன்னோம்.. PEN டீம் மணிகண்டன் கிட்டேயும் சொன்னோம்.. ஆனா அது தலைவர் பார்வைக்கு வந்துச்சானு தெரியலை..
நாம மாதம் ரூ1,000 பணத்தை 1.31 கோடி பெண்களுக்கு கொடுத்தோம்.. அதனால நம்ம தலைமை, ”பெண்கள் ஓட்டு அத்தனையும் அப்படியே நமக்கு வரும்.. இந்த பெண்களால குடும்பத்துக்கு 2 ஓட்டுன்னு அதிகமா வந்தாலும் கூட அசால்ட்டா 2.6 கோடி ஓட்டு வந்துடும்”னு கணக்கு போட்டாங்க..
ஆனா ஒரு விஷயத்தை நாம கவனத்துல வைக்கலை..
நம்ம கவர்மெண்ட் கொடுத்த பணம் நம்ம திமுககாரங்க குடும்ப பெண்களுக்கு மட்டும் போகலையே.. எல்லா கட்சிகாரங்க பெண்களுக்கும்தான் போச்சு… அவங்க நம்ம கவர்மெண்ட் கொடுத்த காசை வாங்கிட்டு அவங்க அவங்க கட்சிக்கு ஓட்டுப் போட்டுட்டாங்க..
நாம பெருந்தன்மையா, “தகுதி வாய்ந்த” பெண்களுக்குதான் ரூ1,000-னு மெஷின்களை வெச்சு கணக்குப் போட்டோம்..
ஆனால் கட்சியில கிளைச் செயலாளர், நகர செயலாளர் தொடங்கி பலரும் நம்ம கட்சிகாரங்க குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கே இன்னும் கிடைக்கலைன்னு லிஸ்ட் போட்டு சில மா.செ.க்கள்கிட்ட கொடுத்தாங்க.. அதை கண்டுக்காம விட்டுட்டோம்.. அதனால மாசம் ரூ1,000 கிடைக்காத நம்ம கட்சிக்காரங்க பெண்களுக்கும் நம்ம மேல கோபம்..
அதோட 3.90 கோடி பெண்களில் நாம 1.31 கோடி பேருக்குதான் கொடுத்தோம்.. நாம கொடுத்த ரூ1,000 பணம் அப்படிங்கிறது பெண்கள் அத்தனை பேருக்கும் கிடைக்கலை.. அதனால அவங்க ”இந்த ஆட்சியிலேயே ரூ1,000 பணமே நமக்கு வரலை.. அதனால திமுக அடுத்து ஆட்சி அமைச்சு கொடுக்கிறதா சொன்ன ரூ2,0;00 பணமும் கிடைக்காது.. நாம ஏன் திமுகவுக்கு ஓட்டுப் போடனும்?”னு கணிசமா பெண்கள் நமக்கு ஓட்டுப் போடாமலும் போயிட்டாங்க..
அதே மாதிரி மாணவர்களுக்கு நிறைய உதவித் திட்டங்களை கொடுத்தோம்.. ஆனா அரசு பள்ளி மாணவர்களுக்குதானே கொடுத்தோம்.. இங்கே தனியார் பள்ளி மாணவர்கள்தானே அதிகமா இருக்காங்க.. அந்த திட்டமும் நமக்கு கை கொடுக்காம போயிருச்சு..
இதுக்கு மேல கட்சிக்காரனுக்கு நம்ம ஆட்சியில பொதுவாக அரசு வேலை எதுவும் போட்டுத்தரலை.. கண்டக்டர் வேலை கூட கிடைக்கலை.. நம்ம கட்சிகாரங்களுக்கே டிரான்ஸ்பர் வாங்கிக்க முடியலை.. நம்ம கட்சி ஆட்சியில நம்ம கட்சிக்காரனுக்கு ஒரு பிரயோஜனுமும் இல்லைங்கிறப்ப அவங்களுக்கு குடும்பத்துல என்ன மரியாதை இருக்கும்? கட்சிக்காரன் நமக்கு ஓட்டுப் போட்டான்.. அவங்க குடும்பத்துக்காரங்க மாத்தி ஓட்டுப் போட்டுட்டாங்க..”ன்னு அடுக்கி இருந்தாரு..
இப்படி வைரமணி பேசுன மாதிரியான புகார்கள், இப்ப ஸ்டாலின்கிட்ட கொடுத்திருக்கிற அறிக்கைகளிலும் இருக்கிறது”ன்னு சொல்றாங்க ப்ரோ.
5 லட்சம் பேர் கருத்துகள்
ஓ.. சரிங்க ப்ரோ.. வெப்சைட் தொடங்கி ஆன்லைனில் ஸ்டாலின் புகார் மனுக்களை வாங்கினாரே..
ஆமாம் ப்ரோ.. சுமார் 5 லட்சம் பேர் ஆன்லைனில் கருத்துகளை ஷேர் செஞ்சிருக்காங்க.. ஒவ்வொருத்தரும் 4,5 கருத்துகளை பதிவு செஞ்சிருக்காங்க..
இதுல வெளிப்படையாக மந்திரிகள் பெயரை குறிப்பிட்டும் மண்டல பொறுப்பாளர்கள் மேலேயும் “கட்சிக்காரங்களை மதிக்கிறது”இல்லைன்னு தொடங்கி பல புகார்கள் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
இதுல முக்கியமா, திமுக தலைமை மேலேயும் விமர்சனங்கள் வெச்சிருக்காங்களாம்.. அதாவது ”உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கி அவருக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்ததால, மந்திரிகள் மகன்களுக்கும் வாய்ப்பு கொடுத்தாங்க.. இப்படி ’வாரிசு அரசியலை’ வளர்த்ததால சாதாரண கட்சிக்காரன், “உழைக்க மட்டும்தான் நாமளா”?ன்னு விரக்திக்கு வந்துட்டான்.. எதிர்க்கட்சிகாரங்களும் இதையே விமர்சனமா செய்யும் போது கட்சிக்காரங்க எதுவும் பேசாம கடந்து போக வேண்டியதாயிடுச்சு”ன்னும் சொல்லி இருந்தாங்களாம்..

ஸ்டாலின் முடிவு என்ன?
சரிங்க ப்ரோ.. இந்த அறிக்கைகள், கருத்துகளை பத்தி ஸ்டாலின் என்ன முடிவு எடுத்திருக்கிறாராம்?
இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “தேர்தல் தோல்விக்கான காரணத்தை விசாரிச்ச குழுக்களோட அறிக்கைகள் எல்லாம் இப்பதான் ஸ்டாலின் கைக்கு வந்திருக்கு.. அதே மாதிரி வெப்சைட்டுல வந்த கருத்துகளும் இப்பதான் அவர்கிட்ட மொத்தமா போயிருக்கு.. அவர் இன்னமும் இதை எல்லாம் முழுசா படிக்கனும் இல்லையா?”ன்னு கேட்கிறாங்க ப்ரோ..


உதயநிதி – சபரீசன்
அதுவும் சரிதான்.. ஏங்க ப்ரோ உதயநிதிக்கும் சபரீசனுக்கும் பிரச்சனைன்னு சொல்றாங்களே..?
ஆமாங்க ப்ரோ.. நினைக்கிறதை எல்லாம் எழுதிட்டா நிஜமாகிடுமா? இந்த விவகாரத்தை பத்தி உதயநிதிக்கு நெருக்கமான சர்க்கிள்கிட்ட பேசுனப்ப அவங்க சொல்றது என்னான்னா, “சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க.. பல விஷயங்களில் உதயநிதியும் சபரீசனும் சேர்ந்துதான் முடிவெடுக்கிறாங்க என்பதுதாங்க நிஜம்..
ஸ்டாலின்கிட்ட சில விஷயங்களை கேட்கிறாங்கன்னா அப்ப, “தம்பிகிட்ட பேசிடுங்க”ன்னு சொல்வாரு.. அந்த விஷயம் உதயநிதிகிட்ட வரும்போது, அவரு சபரீசன்கிட்ட கலந்து பேசி அப்புறமாதான் முடிவு சொல்வாரு..
வாரத்துல 3,4 நாட்கள் ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசிதான் பல விஷயங்களை செயல்படுத்துறாங்க..
36 பேர் கொண்ட கமிட்டி போடுறப்ப என்ன நடந்துச்சு.. உதயநிதி, சபரீசனும் சேர்ந்து போயிதானே சிஐடி காலனியில கனிமொழியை சந்திச்சு ஆலோசனை நடத்துனாங்க.. அது மாதிரிதான் பெரும்பாலான முடிவுகளை ரெண்டு பேரும் கலந்து பேசிதான் எடுக்கிறாங்க.. ”ன்னு சொல்றாங்க..
அப்புறம் ப்ரோ.. உதயநிதி, கட்சிக்காரங்களை சந்திக்காம இருக்கிறதாவும் ஒரு கம்ப்ளெயிண்ட் வந்துச்சே?
ஆமாங்க ப்ரோ.. உதயநிதியை கட்சிக்காரங்க சந்திக்க முடியறது இல்லை.. அவரை சுத்தி இருக்கிறவங்க சந்திக்கவே விடலைன்னு சொன்னாங்க..
இப்ப நாலைஞ்சு நாளா உதயநிதி சாயங்காலம் 5 மணியில இருந்து 2 மணி நேரம் கட்சிக்காரங்க எல்லாத்தையும் சந்திச்சு போட்டோ எடுத்துகிட்டு இருக்காரு..
சாயங்கலாம் 5 மணி ஆச்சுன்னா டான்னு கேட்டு திறக்குது.. அவரை சந்திக்க போறவங்க வரிசையில நிற்கிறாங்க… வர்றவங்க கொடுக்கிற புத்தகம், சால்வையை வாங்கிட்டு போட்டோ எடுத்துகிட்டு அனுப்பிடுகிறார்..
இவ்வளவு சொன்னீங்களே ப்ரோ… திமுகவில அடுத்து என்னதான் நடக்குமாம்?
நாம விசாரிச்ச வரைக்கும், ”36 பேர் கொண்ட குழுவோட அறிக்கையை ஸ்டாலின் முழுமையா படிக்கனும்.. 5 லட்சம் பேர் தெரிவிச்ச கருத்துகள் என்னான்னும் அவரு படிக்கனும்..
அடுத்ததா திமுகவோட பொதுச்செயலாளர் பதவியில இருந்து துரைமுருகனை அவ்வளவு சீக்கிரமா மாத்துறதுக்கு சான்ஸும் இல்லை.. உட்கட்சி தேர்தல் நடந்து பொதுக்குழு கூடுறவரைக்கும் திமுக ஹைமாண்ட்ல இதே நிலைமைதான் இருக்குமாம்..
அதேநேரத்துல சபரீசனை கட்சிக்குள்ள கொண்டுவரலாம்னு உதயநிதி விரும்பறாரு.. அவருக்கு முக்கியமான ‘நியமன பொறுப்பு’ கொடுக்கலாம்னு நினைக்கிறாராம் உதயநிதி..
அதோட திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் சான்ஸ் இருக்கு..”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
