திமுகவை (DMK) நச்சுப் பாம்பு என மதிமுக (MDMK) அவைத் தலைவர் அர்ஜூன ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மீதும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஈரோட்டில் ஜூன் 12-ந் தேதி நடைபெற்ற மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அர்ஜூன ராஜ் பேசியதாவது: யாரும் சொல்லாதபோது கூட, ‘தளபதிதான் (ஸ்டாலின்) முதல்வர் ஆவார்’ என்று வைகோதான் சொன்னார். உள்ளபடியே, அவரைத் தவிர மத்தவங்க யாருக்கும் அதுல ஏற்புடையதாக இல்லை.
திமுக (DMK) நச்சுப் பாம்பு
ஏன்னா, நமக்கெல்லாம் தெரியும்… பாம்புக்கு என்னதான் பால் ஊற்றினாலும் அது நஞ்சைத்தான் கக்கும். பாம்புக்கு பாலையே கொடுத்தாலும் கூட அது நஞ்சைத்தான் கக்கும், ஏன்னா அதுகிட்ட இருக்குறது நஞ்சுதான். அதனால, திமுகங்கிறது அது ஒரு நச்சுப் பாம்பு.
கலைஞர் மீது தாக்கு
அதனாலதான் 4 எம்பிக்கள் மதிமுகவுக்கு டெல்லியில் இருந்தப்போ, அவங்க அப்பா (கலைஞர்) அந்த நாலு எம்பிக்களையும் அவங்ககிட்ட சேர்த்து மந்திரி பதவியை வாங்குனவர்தான். அப்படிப்பட்ட தில்லுமுல்லுகளுக்கு சொந்தக்காரருதான் அவங்க. அப்படிப்பட்டவங்க கூட நம்ம இருக்கக்கூடாதுன்னு சொல்லி, இங்க வந்து பேசுறவங்க எல்லாரையும் சொன்னீங்க. எல்லாருடைய கருத்து அதுதான்.
வள்ளுவர் சொன்னதைப் போல
வள்ளுவன் சொல்றது படி, “உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று”. ஒரு குடிசையில பாம்போடு எப்படி வாழ முடியாதோ, அதுமாதிரி உடன்பாடு இல்லாதவர்களோடு வாழக்கூடாதுன்னு சொன்னேன்.. நம்மள அழிக்கணும்னு நினைக்கிறாங்களே அந்த திமுகவோடும் நாம இருக்கக்கூடாதுங்கிறதுதான் உங்களுடைய கருத்து, எங்களுடைய கருத்து, எல்லாருடைய கருத்துமாகும். நமக்கு நல்லது செய்யுறமாதிரி தெரிகிறவர்கள் நமக்கு கெடுதல் செய்கிறார்கள்.
ஊடகங்களில், விவாதங்களில் மதிமுக சொல்லக்கூடாது, வைகோ பேர் இனிமே வரக்கூடாது, துரை வைகோ பேரு சொல்லக்கூடாது, அவங்களுடைய நல்ல காரியங்களை எல்லாம் காட்டக்கூடாதுன்னு சொல்லக்கூடிய இந்த அயோக்கியத்தனம் பண்றவங்கதான் இவங்க..
மெய்ப்பொருள் நாயனார் கதையில் வருவது போல, சிவ வேடம் பூண்டு வந்து அவரைக் கொன்ற முத்தநாதனைப் போல, திமுக இன்று நம்மிடம் நல்லவர்கள் போல நடித்துக்கொண்டு தீமை செய்கிறது. சமூக வலைதளங்களில் திமுகவினர் காரணமின்றி எங்களை நிந்திப்பதையும், பழி தூற்றுவதையும் நாங்கள் கண்டுகொள்ளவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம்.
திமுகவுடன் (DMK) ஒட்டும் இல்லை- உறவும் இல்லை
திமுகவோட நமக்கு ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம்ங்கிற உங்களுடைய கருத்து, மிகவும் வலுவானது. அதற்குத் தகுந்தபடி இனிவரும் காலங்களில் நமது செயல்பாடுகள் இருக்கும். இன்று தமிழகத்தின் மெஜாரிட்டி மக்கள் முருகனின் பேரால் இருக்கிறார்கள்; அந்த முருகன் நமக்கு எந்தக் கெடுதலும் வராமல் காப்பாற்றுவார். நமக்கு எந்தப் பயமும் தேவையில்லை. ராஜாக்களின் மணிமகுடங்களை விட தேவகுமாரனின் முள்மகுடங்கள் பெருமை வாய்ந்தது,
தவெகவுடன் (TVK) கூட்டணி
தவெக கூட்டணியைப் பொறுத்தவரை, வைகோ ஏற்கனவே சொன்னது போல, இப்போதைக்கு நாம் தூரத்தில் இருந்து பார்த்து ரசிப்போம். கல்யாணம் ஆன பின்புதானே தொட்டுப் பார்க்க முடியும்? அதுபோல, கூட்டணி அமைந்த பிறகு அதைப் பார்த்துக்கொள்ளலாம்.
வைகோவுடன் பயணிப்போம்..
வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல், தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தமிழுக்காகவும், இனத்திற்காகவும் அர்ப்பணித்த தலைவர் நம்முடைய வைகோ. அவருடன் சேர்ந்து நாம் பயணிப்போம். இவ்வாறு அர்ஜூன ராஜ் பேசினார்.
